×

ஆவடி டேங்க் பேக்டரியில் பயங்கரம் தூங்கிய பாதுகாவலர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக்கொலை: திரிபுராவில் இருந்து 3 நாளுக்கு முன் பணி மாற்றம் செய்து வந்த வீரர் கைது

சென்னை: ஆவடி டேங்க் பேக்டரி பாதுகாவலர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சக பாதுகாப்பு வீரர் கைது செய்யப்பட்டார். சென்னை அடுத்த ஆவடியில் டேங்க் பேக்டரி தொழிற்சாலை (எச்.வி.எப்) உள்ளது. இங்கு இந்திய ராணுவத்துக்கு தேவையான பீரங்கிகள் தயாரிக்கப்படுகின்றன. அதிகாரிகள், நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் என சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இங்கு பாதுகாப்பு பணியில், இந்திய ராணுவத்தில் ஓய்வு பெற்ற வீரர்களை கொண்டு, மறுபணி அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை ஷிப்ட் முறையில் இரவு, பகலாக பணியாற்றுகின்றனர்.ஒரு ஷிப்ட்டில் அதிகாரிகள், பாதுகாவலர்கள் என மொத்தம் 12 பேர் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு, பாதுகாப்பு பணியின்போது, வெளியாட்கள் உள்ளே நுழைவதை தடுக்கவும், தங்களை பாதுகாத்துக்கொள்ளவும் துப்பாக்கிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது ஏ.கே.47 மற்றும் எஸ்.எல்.ஆர் ரகமாகும். இந்த துப்பாக்கிகள்தான் கார்கில் போரின்போது அதிகளவில் பயன்படுத்தப்பட்டன.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் 10 மணி வரை இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த கிரிஜேஷ்குமார் (48) என்பவர் ஆயுத கிடங்கில் பாதுகாப்பு பணியில் இருந்தார். இவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி திருப்தாதேவி மற்றும் மகன், மகள் இமாச்சலபிரதேசத்தில் வசிக்கின்றனர்.

கிரிஜேஷ்குமார் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பணி முடிந்து, பாதுகாவலர் ஓய்வறையில் தூங்கிக்கொண்டிருந்தார். தவிர, 10க்கும் மேற்பட்ட காவலர்களும் அவருடன் தூங்கினர். நள்ளிரவு 12 முதல் 2 மணி வரை திரிபுரா மாநிலத்தை சேர்ந்த நிலம்பா சிங்கா (49) என்பவர் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். இவர், நள்ளிரவு 12.15 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த பாதுகாவலர் அறைக்குள் நுழைந்துள்ளார். திடீரென, தான் பாதுகாப்பு பணிக்காக வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக 6 முறை சுட்டுள்ளார். இதில் தூங்கிக் கொண்டிருந்த கிரிஜேஷ்குமாரின் தலை மற்றும் உடல் பகுதியில் குண்டுகள் பாய்ந்தன. சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து அவர் இறந்தார். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும், ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த காவலர்கள், திடீரென கண்விழித்து, கட்டிலுக்கு அடியில் பதுங்கி கொண்டனர். ஒரு சிலர் தப்பி வெளியே ஓடினர். இதன் பிறகு நிலம்பா சிங்கா, சர்வ சாதாரணமாக சுற்றித்திரிந்தார்.
தகவலறிந்ததும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். எதுவும் நடக்காதது போல் சுற்றி திரிந்த நிலம்பா சிங்காவிடம் உயரதிகாரிகள் நைசாக பேசி சக பாதுகாவலர்கள் உதவியுடன் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கியை பிடுங்கி, அவரது கை, கால்களை கட்டினர்.

தகவலறிந்த அம்பத்தூர் துணை போலீஸ் கமிஷனர் ஈஸ்வரன், ஆவடி உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி மற்றும் டேங்க் பேக்டரி இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த கிரிஜேஷ்குமாரின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகாரிகள் பிடியில் இருந்த நிலம்பா சிங்காவை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். முதல்கட்ட விசாரணையில், முன்னுக்கு பின் முரணாக அவர் பதிலளித்தார். முதலில் சுட்டதாகவும், அதன்பிறகு சுடவில்லை எனவும் மாறிமாறி கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது: பாதுகாவலர் நிலம்பா சிங்கா சொந்த ஊரான திரிபுராவில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பின்னர் அங்கிருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஆவடிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் திரிபுராவில் இருக்கும் போது அதிக மது பழக்கத்துக்கு அடிமையாகி மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதுதொடர்பாக அவர் மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். தற்போது மன அழுத்தத்தை குறைக்க மாத்திரையும் சாப்பிட்டு வந்துள்ளார். இதற்கிடையில் நிலம்பா சிங்காவுக்கு இந்தி முழுவதுமாக தெரியவில்லை. அவருடன் ஓய்வு அறையில் தங்கியிருந்த வெளி மாநில பாதுகாவலர்கள் இந்தியில் பேசி அரட்டை அடித்து வந்துள்ளனர். இவர், இந்தி தெரியாததால் தனிமையிலேயே இருந்துள்ளார். இவருடைய செல்போனை பிடுங்கி இந்தியில் பாட்டுக் கேட்டு ரசித்துள்ளனர். மேற்கண்ட செயல் நிலம்பா சிங்காவுக்கு வெறுப்பை ஏற்படுத்தி வந்துள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவும் தொடர்ந்துள்ளது. அப்பொழுது அவர் ஓய்வு அறையில் மன அழுத்தம் ஏற்பட்டு கூச்சலிட்டுள்ளார். இதை பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கண்டித்துள்ளனர்.

பின்னர், நிலம்பா சிங்கா இரவுப் பணியில் துப்பாக்கியுடன் அமைதியாக இருந்துள்ளார். திடீரென எரிச்சலடைந்த அவர், துப்பாக்கியால் அனைவரையும் சுடுவதற்கு முடிவு செய்து, பாதுகாவலர் அறையில் தூங்கிக்கொண்டிருந்த அவர்களை  சரமாரியாக சுட்டுள்ளார். அதில் கிரிஜேஷ்குமார் மட்டும் குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தார். மற்றவர்கள் தப்பிவிட்டனர். இவ்வாறு போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரி டோனீஸ் செரியன் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிலம்பா சிங்காவை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : gunman ,Awadhi Tank Factory ,security guard , Awadhi Tank, Factory gunman shot, dead, security guard
× RELATED தப்ப முயன்ற வழிப்பறி கொள்ளையனை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தது போலீஸ்!