×

மேலவளவு பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கு 13 பேர் விடுதலை எதிர்த்த மனு வேறு அமர்வுக்கு மாற்றம்

மதுரை:  மதுரை மாவட்டம், மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் படுகொலையான வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்ற ராமர், சின்ன ஒடுங்கன், செல்வம் உள்ளிட்ட 13 பேர், பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் விடுதலையை எதிர்த்து வக்கீல் ரத்தினம் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். ‘‘13 பேரை விடுவிக்கும் முன் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களிடம் தெரிவிக்கவில்லை. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் இவர்களை விடுவிக்க முடியாது. இது சட்டத்திற்கு எதிரானது. பாதிக்கப்பட்டோரின் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களை கவனத்தில் கொள்ளவில்லை. எனவே, 13 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், விடுதலை செய்யப்பட்ட அனைவரும் வேலூரில் தங்கியிருக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வக்கீல் ரத்தினம் ஆஜராகி, ‘‘மேலவளவு படுகொலை தொடர்பான ஒரு வழக்கை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் விசாரித்து உத்தரவிட்டுள்ளார். எனவே, இந்த வழக்கை வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்ற வேண்டும்’’ என கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்ற நிர்வாக நீதிபதிக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டனர்.


Tags : panchayat leader , Thirteen panchayat leader's, murder case postponed
× RELATED அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் ஊராட்சி...