×

தாசில்தாரின் வாரிசு சான்றிதழை நம்பி பத்திரப்பதிவு செய்யலாமா? தெளிவுரை இல்லாததால் பதிவுத்துறை ஊழியர்கள் குழப்பம்

சென்னை: தாசில்தாரின் வாரிசு சான்றிதழை நம்பி பத்திரப்பதிவு செய்யலாமா? என்பது தொடர்பாக தெளிவுரை இல்லாததால் பதிவுத்துறை ஊழியர்கள் குழப்பத்தில் உள்ளனர். சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் விற்பனை பத்திரம், தானம், செட்டில் மென்ட், கிரையபத்திரம் உள்ளிட்ட பல்வேறு வகையான பத்திரங்கள் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பதிவுக்கு வரும் ஆவணங்களில் அனைத்தும் டாக்குமென்ட்களும் உள்ளதா என்பதை பார்த்து பதிவு செய்யப்படுகிறது. இதில், தனிநபர் ஒருவர் இறந்த பின் அவருடைய சொத்துக்களை அவருடைய வாரிசுகள் அடைவதற்கு வாரிசு சான்று தேவைப்படுகிறது. அதன்படி இந்துக்களுக்கு இந்து சட்டப்படியும், கிறிஸ்தவர்களுக்கு, இஸ்லாமியர்களுக்கான சட்டப்படியே முதல்நிலை வாரிசு, இரண்டாம் நிலை வாரிசு, மூன்றாம் நிலை வாரிசு என்கிற அடிப்படையில் தான் வாரிசு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். அதனடிப்படையில் அனைத்து நிலை வாரிசுகளை கணக்கில் கொண்டே சொத்துக்கள் பங்கு பிரிக்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலான தாசில்தார் முதல்நிலை வாரிசுகளுக்கான சான்று மட்டுமே வழங்கி வருகின்றனர். பெரும்பாலும் அவர் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை வாரிசுகள் தொடர்பாக குறிப்பிடுவதில்லை.

இதை நம்பி, சார்பதிவாளர்கள் பத்திரம் பதிவு செய்து விடுகின்றனர். இதன்காரணமாக இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை வாரிசுகளுக்கு சொத்து பங்கீடு கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் பேரில் தாசில்தார் தரும் சான்றிதழை மட்டுமே அடிப்படையாக வைத்து பத்திரம் பதிவு செய்யக்கூடாது. சார்பதிவாளர்களுக்கு பதிவு செய்யும் வாரிசுதாரரர்கள் தாக்கல் செய்யும் ஆவணங்கள் உண்மை தானா என்பது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.ஆனால், இது தொடர்பாக பதிவுத்துறை ஐஜி அலுவலகம் போதிய தெளிவுரை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், சார்பதிவாளர்கள் தற்போது தாசில்தார் அளிக்கும் ஆவணத்தின் அடிப்படையிலேயே பத்திரம் பதிவு செய்யலாமா, வேண்டாமா என்பது தொடர்பாக குழப்பத்தில் உள்ளனர்.

மேலும், இது தொடர்பாக அவர்கள் விளக்கம் கேட்டிருப்பதாக தெரிகிறது. இதனால், பெரும்பாலான சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரம் பதிவு செய்யாமல் நிறுத்தி வைத்திருப்பதாக பதிவுத்துறை அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். மேலும், இது குறித்து அவர்கள் கூறும் போது, ‘பதிவுத்துறை ஐஜி, இது போன்ற ஆவணங்களை பதிவு செய்யும் முன்பு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக தெளிவுரை வழங்க வேண்டும்’ என்றனர்.


Tags : successor ,Dasildar , Dasildar, Successor Certificate, Securities and Registration Staff
× RELATED தேர்தல் பறக்கும் படை சோதனை:...