×

மேம்பாலங்களின் கீழ் உள்ள காலி இடங்களில் விளையாட்டு திடல், வாகன நிறுத்தம்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னை: சென்னையில் பாலங்களின் கீழ் பகுதியில் காலியாக உள்ள இடங்களை சீரமைத்து குழந்தைகளுக்கான பூங்கா மற்றும் வாகன நிறுத்தும் இடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆய்வு கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடந்தது.
இதில் பணிகள் துறை துணை ஆணையர் குமாரவேல் பாண்டியன், பாலங்கள் துறை தலைமை பொறியாளர் ராஜேந்திரன், செயற்பொறியாளர் மனோகரன், உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி, சிஎம்டிஏ, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் பாலங்களின் கீழ் பகுதியில் காலியாக உள்ள இடங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ளன. இதை தவிர்க்கவும், அந்த இடத்ைத பொதுமக்களுக்கு ஏற்ற வகையில் மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வடசென்னையில் உள்ள மின்ட் மேம்பாலம், அடையார் எல்.பி சாலையில் உள்ள மேம்பாலம், காந்தி மண்டபம் சாலையில் உள்ள மேம்பாலம், ஆர்.கே.சாலையில் உள்ள டிடிகே பாலம், கோடம்பாக்கத்தில் உள்ள ரங்கராஜபுரம் பாலம் உள்ளிட்ட 5 பாலங்கள் சீரமைக்கப்பட உள்ளன.
இந்த பாலத்தின் கீழ் பகுதிகளை சீரமைத்து விளையாட்டு திடல் மற்றும் வாகன நிறுத்தும் இடங்கள் ஆகியவை அமைக்கப்படவுள்ளது. இதற்கான விரிவானத் திட்ட அறிக்கை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை தவிர்த்து கோயம்பேட்டில் உள்ள பாலத்தின் கீழ் பகுதியில் வாகன நிறுத்தமிடம், கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான இடத்தை அமைக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags : spaces ,Places ,Playground , Under Highways, Vacant Places, Playground, Parking
× RELATED ராமேஸ்வரத்தில் 25 இடங்களில் குடிநீர் தொட்டி: பொதுமக்கள் மகிழ்ச்சி