×

சென்டர் மீடியன் மீது லாரி மோதி விபத்து 10 டன் வெங்காயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு: திருவள்ளூரில் பரபரப்பு

சென்னை: ஆந்திர மாநிலத்தில் இருந்து திருவள்ளூர் வழியாக சென்னை நோக்கி வெங்காய மூட்டைகளை எடுத்துச்சென்ற லாரி சென்டர் மீடியன் மீது மோதி விபத்துக்குள்ளானது.  இதில், 10 டன் வெங்காய மூட்டைகள் சாலையில் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதை யாரும் எடுத்துச் செல்லாமல் இருக்க அதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலையை விட ஒரு கிலோ வெங்காயம் இரண்டரை மடங்கு அதிகம். அதாவது வெங்காய விலை கிலோவிற்கு ₹180 முதல் 200 வரை விற்கப்படுகிறது. இதனால் விவசாய நிலத்தில் அறுவடை செய்த வெங்காயம் திருட்டு, அறுவடைக்கு தயாராக இருக்கும் வெங்காயத்துக்கு பாதுகாப்பு, அரசியல்வாதிக்கு வெங்காய மாலை, மணப்பெண்ணுக்கு வெங்காய ஆபரணம் மற்றும் சீர் வரிசை என்று எங்கு பார்த்தாலும் வெங்காயம் பற்றிய பேச்சாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் வெங்காயத்தின் விலையை குறைக்கும் வகையில் ஆந்திர மாநிலம் தடா பத்ரி பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10 டன் வெங்காயம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னை கோயம்பேடு நோக்கி புறப்பட்டது. அந்த லாரியானது நேற்று அதிகாலை 5 மணியளவில் திருவள்ளூர் டோல்கேட் அருகே சென்டர் மீடியன் துவங்கும் பகுதியில், எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்கு உள்ளானது. விபத்தில் சரக்கு லாரியின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்து டயர்கள் தனியாக ஓடியது. இதில் சரக்கு லாரியில் இருந்த வெங்காய மூட்டைகள் அனைத்தும் சிதறி சாலையில் கொட்டியது. விபத்தில் சரக்கு லாரியை ஓட்டிவந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த டிரைவர் ஜில்லான், உரிமையாளர் மாபாஷா ஆகியோர் காயமின்றி தப்பினர்.

தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, வெங்காயங்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கினர். பின்னர் வெங்காயத்தை பாதுகாப்பாக கிழிந்த கோணிப்பைகளில் இருந்து எடுத்தும் சாலையில் கொட்டி கிடந்த வெங்காயங்களை சேகரித்தும் புதிய கோணிப்பகைளில் போட்டு கட்டினர். பின்னர் அதை வேறு லாரியில் ஏற்றும் வரை வெங்காயம் இருந்த கோணிப்பைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மேலும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும், வெங்காயத்தை பாதுகாப்புடன் பத்திரப்படுத்தி போக்குவரத்து பாதிப்பை சரி செய்தனர். அதிகாலையில் நடந்த விபத்தால் பொதுமக்கள் யாரும் அங்கு வரவில்லை. இதனால், வெங்காயங்கள் பாதுகாப்பாக பத்திரப்படுத்தப்பட்டது. இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


Tags : lorry crashes ,accident , On center median, truck collides, accident, 10 tonnes of onion, police protection
× RELATED மின்விளக்குகள் எரியாத புதிய மேம்பாலம்: பெரியபாளையம் அருகே விபத்து அபாயம்