×

இசிஆரில் கவர்னரின் பாதுகாப்பு வாகனம் மோதி பலியான 3 பேரின் குடும்பங்கள் நிவாரணம் கிடைக்காமல் அவதி: 2 ஆண்டாக அலைக்கழிக்கும் அவலம்

சென்னை: கிழக்கு கடற்கரை சாலை புதிய கல்பாக்கம் பகுதியில் கவர்னரின் பாதுகாப்பு வாகனம் மோதி பலியான 3 பேரின் குடும்பத்துக்கு 2 ஆண்டாகியும் நிவாரணம் வழங்காமல் இருப்பது பொதுமக்கள் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.   
திருப்போரூர் வடக்கு மாடவீதியை சேர்ந்தவர்  நரேஷ்குமார். தண்ணீர் கேன், மாவு விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம்  நரேஷ்குமார் சபரிமலைக்கு செல்லும் முன்பாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடைகளில் தண்ணீர் வினியோகம் செய்யும் பணியை திருப்போரூர் திருவஞ்சாவடி தெருவை சேர்ந்த சுரேஷ் (30)  என்ற வாலிபரிடம் ஒப்படைத்து சென்றார். இதையடுத்து சுரேஷ் மற்றும் தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்த நரேஷ்குமார் மகன் கார்த்திகேயன் (11) ஆகிய இருவரும் கிழக்கு கடற்கரை சாலைக்கு  சென்றனர்.

அப்போது தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடலூரில்  ஆய்வு பணிகளை முடித்துவிட்டு, சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். முட்டுக்காடு படகுத்துறை வரை காஞ்சிபுரம் மாவட்ட  போலீஸ் எல்லை என்பதால்  மாமல்லபுரம் போலீசார் மற்றும் வி.ஐ.பி. எஸ்கார்ட், இசிஆர் பேட்ரோல் வாகனங்கள் அவரது கான்வாயை முட்டுக்காடு படகுத்துறை வரை  சென்று விட்டுவிட்டு மாமல்லபுரம் நோக்கி வந்துகொண்டிருந்தனர். அப்போது புதிய கல்பாக்கம் மீனவர் பகுதியில் உள்ள கடையில்  மாவு பொட்டலங்களை போடுவதற்காக சென்ற சுரேஷின் வாகனத்தின் மீது கவர்னர்  பாதுகாப்புக்கு வந்த போலீஸ் வாகனம் மோதி 200 அடி தூரம் இழுத்து சென்று  பேருந்து நிறுத்தத்தில் மோதி நின்றது. இதில் பைக்கை ஓட்டி வந்த  சுரேஷ் (30), பின்னால் அமர்ந்திருந்த சிறுவன் கார்த்திகேயன் (11) மற்றும் பஸ் நிறுத்தத்தில் அமர்ந்திருந்த புதிய கல்பாக்கம் மீனவ கிராமத்தை சேர்ந்த  கவுசல்யா (75) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நடந்து முடிந்து 2 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் தமிழக அரசு இதுவரையிலும் 3 பேரின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகம்  முழுவதும் மரம் விழுந்து இறப்பவர்கள், பாம்பு கடித்து இறப்பவர்கள்,  விபத்தில் இறப்பவர்கள் என அகால மரணம் அடைபவர்களுக்கு அரசு சார்பில் நிவாரண  உதவி வழங்கப்படுகிறது. ஆனால், கவர்னரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் இறந்த 3 பேரின்  குடும்பங்களுக்கும் இதுவரையில் நிவாரண உதவி வழங்காமல் அலைக்கழித்து வருவது அந்த  குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இறந்துபோன  சுரேஷின் தாயார் கணவர் இல்லாத நிலையில் ஆதரவற்று வாழ்ந்து வருகிறார்.  அதே போன்று சிறுவனின் தந்தை நரேஷ்குமார் ஒரே மகனை இழந்து நடைபிணமாக சுற்றி வருகிறார். எனவே, பலியான 3 பேரின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் நிவாரண உதவியோ, சுயதொழில் புரிய கடன்  உதவியோ வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Families ,governor ,ICR ,collision ,death , Governor's safety vehicle, collision, death, relief
× RELATED கூடலூர் மாவட்டத்தில் கருப்புக் கொடி கட்டி மக்கள் போராட்டம்..!!