×

தமிழகம் முழுவதும் ரேஷன் பொருள் வாங்குவதற்கான ஸ்மார்ட் கார்டு வழங்குவது நிறுத்தம்

* ஸ்கேன் ஆவதில் தொடரும் சிக்கல்
* புதிய கார்டு பெற முடியாமல் மக்கள் தவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் இ-சேவை மையத்தில்  ஸ்மார்ட் கார்டு நகல் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.  தமிழ்நாடு அரசு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை   சார்பில் 2017ம் ஆண்டு முதல் குடும்ப அட்டையை ஸ்மார்ட் கார்டு முறையில் வழங்கி வருகிறது. தமிழகத்தில்  உள்ள 33 மாவட்டங்களில் உள்ள 305 வட்ட வழங்கல் அலுவலகத்தின் கீழ் உள்ள,  கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள 34,773 ரேஷன் கடைகள்  மூலம்  2 கோடியே 5 லட்சத்து 71 ஆயிரத்து 34 ரேஷன் கார்டு வழங்கப்பட்டது. இதன்  மூலம் 6 கோடியே 68 லட்சத்து 32 ஆயிரத்து 375 நபர்களின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.  தமிழக  அரசு  கடந்த 2005ம் ஆண்டு  2005-2009ம்  ஆண்டுகளுக்கு என்று  புத்தக  வடிவில் குடும்ப அட்டை வழங்கியது. பின்னர் 2010-2016 ஆண்டு வரை அதே குடும்ப  அட்டையில் உள்தாள் இணைக்கப்பட்டு ரேஷன் கடைகளில்  பொருட்கள்  வழங்கப்பட்டு வந்தது. 11 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த புத்தக  வடிவிலான  குடும்ப அட்டை  சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத நிலை  ஏற்பட்டது.

தமிழக   அரசு வேறு வழியின்றி  புதிய குடும்ப அட்டையை பிளாஸ்டிக்  ஸ்மார்ட் கார்டாக  அனைவருக்கும் 2017ம் ஆண்டு  வழங்கியது.  அதில் முன்  பக்கத்தில்  குடும்ப தலைவர் பெயர், முகவரி மற்றும் குடும்ப தலைவர் படம்  இருக்கும், பின் பக்கத்தில்  குடும்ப உறுப்பினர்கள் பெயர், ஸ்கேன் செய்யும்  கியூஆர் கோடு இருக்கும். இந்த  அட்டை காணாமல் போனால் நகல் அட்டை பெற  இசேவை மையத்தை தொடர்பு கொள்ளவும்  என்று குறிப்பிட்டுள்ளது.  இந்த ஸ்மார்ட் கார்டை  ரேஷன் கடையில் உள்ள பாயின்ட் ஆப் சேல்ஸ் இயந்திரம் கொண்டு  ஸ்கேன்  செய்து பொருட்களை வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.   ஸ்மார்ட் கார்டை  கொண்டுதான் ரேசன் கடையில் பொருட்கள் வாங்க முடியும்.

 குடும்ப அட்டை இல்லாதவர்கள்  நியாய  விலை கடைகளில் குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள்  ஆதார் கார்டை கொடுத்து  அதைத் ஸ்கேன் செய்து பெறலாம் என்றும், அல்லது பதிவு செய்துள்ள செல்போன்  எண்ணிற்கு  கடையில் பொருள் கேட்கும்போது வரும் ஓ.டி.பி. எண்ணை கொண்டு   பொருள் வாங்கி கொள்ளலாம் என்று கூறப்பட்டது. ஆதார் கார்டு அரசின் அஞ்சல்  துறை மூலம் பெற்றவர்கள் மட்டும் வாங்க முடியும். தனியார் சேவை  மையம் மூலம் ஆதார் கார்டு பிரின்ட் எடுத்தவர்களின் ஆதார் கார்டு ரேஷன்  கடையில் உள்ள விற்பனை முனைய இயந்திரத்தில் ஸ்கேன் ஆகாது.  மேலும்  பதிவு செய்த தொலைபேசி எண் காணாமல் போனாலோ பயன்பாட்டில் இல்லாமல் போனாலோ ஓ.டி.பி. எண் கிடைக்காது. தொடர்ந்து ரேஷன் கடையில் உள்ள விற்பனை முனைய  இயந்திரம் இன்டெர்நெட் இணைப்பு இருந்தால் மட்டுமே ஓ.டி.பி. மெசேஜ்  கிடைக்கும். இப்படி பிளாஸ்டிக் ஸ்மார்ட் கார்டு தொலைத்தவர்கள்   ரேஷன்  பொருட்களை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 
அரசு இ-சேவை மையத்தில்   வழங்கப்பட்ட ஒரு சில ஸ்மார்ட் கார்டு  ரேஷன் கடைகளில் ஸ்கேன் ஆவதில்லை என்ற  குற்றச்சாட்டை காரணம் காட்டி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.  2017ம்  ஆண்டு  பிளாஸ்டி ஸ்மார்ட்  குடும்ப அட்டை  தனியார் மூலம் தயார் செய்து  வழங்கப்பட்டது. தற்போது அரசின் இ-சேவை மையத்தில் ஸ்கேன் ஆவதில்லை என கூறி  அரசு நிறுத்தியுள்ளது.  குடும்ப அட்டை தொலைத்தவர்கள், பெயர் சேர்த்தல்,  முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றம் போன்றவற்றை மாற்றம் செய்தவர்கள் புதிய  குடும்ப அட்டை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

Tags : Tamil Nadu , Tamilnadu, ration material, smart card
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...