×

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை கிராம மக்கள் புறக்கணிப்பு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தாலுகாவிற்கு உட்பட்ட பனமலை கிராமத்தில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றாத அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து  இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக பொதுமக்கள்  பேனர் வைத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், காணை ஒன்றியத்திற்கு உட்பட்டது பனமலை கிராமம். இங்கு சுமார் 2000 பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள இசா ஏரியானது 286 ஹெக்டர் நில பரப்பு கொண்ட மிகப்பெரிய ஏரியாகும். இது 50க்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்காக பயன்பட்டு வந்தது.

மேலும் சாத்தனூர் அணையிலிருந்து இந்த ஏரிக்கு தண்ணீர் வரும் நந்தன் கால்வாய் திட்டம் முடியும் பகுதியாகவும் இந்த ஏரி உள்ளது. தற்போது இந்த ஏரியின் பெரும்பகுதி ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியின் எல்லைக்குட்பட்ட பகுதியை அளந்து, கரைகளை பலப்படுத்தி, நந்தன் கால்வாய் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் எனவும் பனமலை ஊராட்சியில் வார்டு வரையறை செய்வதில் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்து வார்டு மறுவரையறை செய்ய மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

கால்நடை மருத்துவமனைக்கு 7 கிலோ மீட்டர் செல்ல  வேண்டியுள்ளதால் பனமலையில் ஒரு கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை வைத்தும் நிறைவேற்றாத தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து வரும் அக்டோபர் 21ம் தேதியன்று நடைபெறவுள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags : Vikravandi ,by-election , Idolatrous by-election, boycott
× RELATED நாடாளுமன்ற கடைசி கட்ட தேர்தலுடன்...