×

பாரம்பரிய உணவுகளை தவிர்ப்பதால் உடலில் நோய்கள் வருகின்றன: உணவுத் திருவிழாவை துவக்கிவைத்த முதல்வர் பழனிசாமி பேச்சு

சென்னை: பாரம்பரிய உணவுகளை தவிர்ப்பதால் உடலில் நோய்கள் வருகின்றன என்று, உணவுத் திருவிழாவை துவக்கிவைத்த முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாநில நகர்ப்புற இயக்கம் ஆகியவை சார்பில் மதராசப்பட்டினம் விருந்து என்ற பெயரிலான உணவு-கலாசார திருவிழாவை முதல்வ் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். சென்னை தீவுத் திடலில் நடைபெறும் உணவு திருவிழாவானது வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.15) வரை காலை 11 மணி முதல் இரவு 8மணி வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு உணவு நிறுவனங்கள் சார்பில் 160 அரங்குகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.

பார்வையாளர்களைக் கவரும் வகையில் பல வகையான உணவுப் பதார்த்தங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பாரம்பரிய உணவுகள், மூலிகை உணவுகள் உள்ளிட்டவற்றுக்கான சிறப்பு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் அனைத்து நகரங்களின் சிறப்பு உணவுகள் இடம்பெற்றுள்ளது. தொற்றா நோய்களை குணப்படுத்த பாரம்பரிய உணவுமுறைகளுக்கு மாற வேண்டும் என நோக்கத்தில் உணவு திருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில், இத்திருவிழாவை தொடங்கி வைத்த பின் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாரம்பரிய உணவுகளை தவிர்ப்பதால் உடலில் நோய்கள் வருகின்றன என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், பாரம்பரிய உணவுகளுடன் உடற்பயிற்சியும் அனைவருக்கும் அவசியம்.

பிரதமர் மோடியின் ஃபிட் இந்தியா இயக்கம் மக்களின் உடல்நலனை பேண உதவும். முன்பெல்லாம் கம்பு தோசை தான் பெரும்பாலான மக்களின் உணவாக இருந்தது. கம்பு, கேழ்வரகு, சாமை போன்ற தானியங்களை மீண்டும் உணவில் பயன்படுத்த வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை மக்கள் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். எவ்வளவு செல்வம் இருந்தாலும் சர்க்கரை நோய் வந்துவிட்டால் ருசியான உணவை வேடிக்கை தான் பார்க்க முடியும். செல்வம் இல்லாவிட்டாலும் ஏழையாக இருப்பவருக்கு சர்க்கரை நோய் இல்லை என்றால் ருசியான உணவை விரும்பிய அளவில் அவரால் சாப்பிட முடியும். சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு போன்ற நோய்கள் வந்தால் கட்டுப்பட்டிற்குள் தான் வைக்க முடியும், உடலில் இருந்து நீக்க முடியாது, என்று தெரிவித்துள்ளார்.



Tags : Palanisamy , Traditional Food, Diseases, Madrasapatinam Party, Food Festival, Chief Minister Palanisamy
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...