* பட்டாசு வெடிப்பதை தவிர்த்த கிராம மக்கள்
கடலூரில் ஒரே மரத்தில் சுமார் 5 ஆயிரம் வவ்வால்கள் தலை கீழாய் தொங்கிக்கொண்டிருக்கின்றன. இரவு நேரங்களில் வவ்வால்களின் இரைச்சலில் தூங்க பழகிக்கொண்ட அப்பகுதி மக்கள் வவ்வால்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென நெகிழ்ச்சியோடு கூறுகின்றனர்.
கடலூர் மஞ்சக்குப்பத்தில் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட கர்னல் தோட்டம், தூய எபிபெனி ஆலயம், கிளைச்சிறைச்சாலை, தற்போதைய மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட இடங்கள் 200 ஆண்டுகளுக்கு முன் காடுகள் இருந்ததற்கு சான்றுகள் உள்ளன. காலவெள்ளத்தில் அத்தனையும் மறைந்து போனாலும் அப்பகுதியில் ஆங்காங்கே நூற்றாண்டு தாண்டிய மரங்களும் புதர்களும் காணப்படுகின்றன. கடலூர் கிளைச்சிறைச்சாலை அமைந்துள்ள சாலையில் முன்னாள் படை வீரர் உதவி இயக்குநர் அலுவலகம் உள்ளது. இதன் பின்பகுதியில் சூரியஒளி பட முடியாதபடி அடர்ந்த மரங்களும் புதர்களும் உள்ளன.
இவற்றின் நடுவே பழமைவாய்ந்த அரச மரம் ஒன்று நீண்டு நெடிதுயர்ந்து கிளைபரப்பி காணப்படுகிறது. இந்த மரத்தில் தான் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் தலை கீழாய் தொங்கி வசித்து வருகின்றன. மரம் முழுவதும் பழந்தின்னி வவ்வால்களாக காட்சி அளிக்கின்றன. மரம் முழுவதும் வவ்வால்கள் தொங்கிக்கொண்டு இருக்கும் காட்சியை காலை வேளையில் பார்ப்போரின் கண்களுக்கு ஏதோ கருப்பாக கூடு போல காட்சி அளிக்கிறது. இந்த வவ்வால்களை அந்த வழியாக செல்லும் பொது மக்கள், பள்ளி மாணவர்கள் வேடிக்கை பார்த்து செல்கிறார்கள். அருகே உள்ள ராதாகிருஷ்ணன் நகர் குடியிருப்பு மக்கள் இந்த வவ்வால்களுக்கு எந்த தொந்தரவும் தருவதில்லை. வேட்டையாடிகளிடமிருந்து இந்த வவ்வால்களை பாதுகாப்பதில் முனைப்புடன் உள்ளனர்.
பகல் பொழுதுகளில் சாதுவாக காணப்படும் இந்த வவ்வால்கள் இரவு நேரங்களில் பேரிரைச்சலோடு இரை தேட கிளம்பும். விடிய விடிய வவ்வால்களின் இரைச்சல் சுற்றியுள்ள குடியிருப்புகளை அதிர வைக்கும். ஆனால் அவர்கள் அந்த இரைச்சல் சத்தத்திலேயே தூங்கவும் பழகிக்கொண்டனர். வவ்வால்கள் பயந்து விடும் என்பதற்காகவே அப்பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் பல வருடங்களாக நடக்கும் விழாக்களில் வாண வேடிக்கைகள், பட்டாசு வெடிப்பது ஆகியவற்றை அப்பகுதி மக்கள் தவிர்த்து விட்டனர்.

தற்போது வவ்வால் மரம் உள்ள பகுதியில் கொடிய நாகங்கள் முட்டையிட்டு அடைகாக்கும் நிலையில் வனத்துறை உதவியுடன் அவற்றை அப்புறப்படுத்தி புதர்களை அகற்ற முன்னாள் படை வீரர் உதவி இயக்குநர் அலுவலகம் திட்டமிட்டுள்ளது. இந்த பணிகள் மேற்கொள்ளும் போது அந்த வவ்வால் மரத்தை அப்புறப்படுத்தக்கூடாது என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த வவ்வால்கள் குறித்து பிராணிகள் நல ஆர்வலர் ஸ்டெல்லா கூறுகையில், பறக்கும் நரி என்ற செல்லப்பெயரும் வவ்வால்களுக்கு உண்டு.
2 கிலோ எடை வரை வளரும். அதன் இறகுகள் 2 அடி நீளம் வரையிலும் இருக்கும். முதுகெலும்புள்ள விலங்குகள் பட்டியலில் இந்த பழந்தின்னி வவ்வால் சேர்க்கப்பட்டுள்ளது. கூட்டமாக வசிக்கும் தன்மை கொண்டவை, சில வகை நரியின் முகத்தோடும், சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். அதன் இறக்கைகள் வழு, வழுப்பாக இருக்கும். அக்டோபர், டிசம்பரில் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு ஏப்ரல், மே மாதங்களில் குட்டி ஈனுபவை. பழங்கள், அழுகிய பழங்கள், தேன், மகரந்தங்களை விரும்பி உண்ணும். பழங்களை சாப்பிட்டு விட்டு அதன் கொட்டைகளை பல பகுதிகளில் வீசி எறியும்.
இதனால் சுற்றுச்சூழலின் நண்பனாக இந்த வவ்வால்கள் உள்ளன. இவற்றை பாதுகாக்க வேண்டும். மேலும் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் வண்டு, பூரான், தேள், பல்லி, எலி போன்றவற்றை உணவாக உட்கொள்ளும். நிலநடுக்கம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு ஒலி எழுப்பும் தன்மை கொண்ட வவ்வால்களை அழிவில் இருந்து காக்க வேண்டியது வனத்துறையின் கடமை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
