திருமயம்: அரிமளம் அருகே சேதமடைந்து அகற்றப்பட்ட காமராஜர் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என தொண்டர்கள் கவலை தெரிவித்தனர். அரிமளம் அருகே உள்ள ராயவரம் அண்ணா சீரணி கலையரங்க வளாகத்தில் 1999ம் ஆண்டு காந்தி, இந்திராகாந்தி, காமராஜர் மர்பளவு சிலைகள் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து சிலைகளை யாரும் சேதபடுத்திவிட கூடாது என கருதி சிலைகளுக்கு கம்பி வலை கூண்டு போட்டு பாதுகாத்து வந்தனர். காலப்போக்கில் சிலை பராமரிப்பில் நிர்வாகிகள் அக்கறை காட்டாத போதும் நாட்டின் குடியரசு, சுதந்திரதின விழாக்களின் போது அப்பகுதியில் தேசிய கொடி ஏற்றி சிலைகளுக்கு மரியாதை செய்து வந்தனர். தற்போது சிலை இருக்கும் பீடம், பாதுகாப்பு கம்பி வலைகள் சேதமடைந்து வருகிறது. இதை சரி செய்ய சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகள் நடவடிக்கை இல்லை என தொண்டர்கள் ஒரு பக்கம் வேதனையடைந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஒரு நாள் இரவு காமராஜர் சிலை முற்றிலும் சேதமடைந்து கிடந்தது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அரிமளம் போலீசார் விசாரணை நடத்தியதில் லாரி ஓட்டுனர் தவறுதலாக லாரி மோதி ஏற்படுத்திய விபத்தில் காமராஜர் சிலை உடைந்ததாக தெரிவித்தனர்.
இந்நிலையில் உடைந்த காமராஜர் சிலையை லாரி ஓட்டுனர் சரி செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள் அமைதியடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனிடையே சிலை உடைந்து 3 மாதங்களை கடந்த நிலையிலும் இதுவரை காமராஜர் சிலை உடைந்த இடத்தில் நிறுவப்படவில்லை. அதே நேரம் இது பற்றி நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை என காங்கிரஸ் தொண்டர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பதே காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
