×

குளிர்பிரதேசங்களில் காணப்படும் வாட்டர் ஆப்பிள் பழநி பக்கமும் விளைச்சல்

பழநி: பழநி அருகே டிகேஎன் புதூரில் குளிர்பிரதேசத்தில் விளைவிக்கப்படும் வாட்டர் ஆப்பிள் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் விளைச்சல் அமோகமாகவும், விலை குறைவாகவும் போவதால் சந்தைப்படுத்த அரசு உதவ வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநி அருகே டிகேன் புதூரை சேர்ந்தவர் வேலுச்சாமி. தனது விவசாய நிலத்தில் கொய்யா, மல்லி, தக்காளி, முருங்கை போன்ற தோட்டக்கலை பயிர்களை பயிர் செய்து வந்துள்ளார். ஆனால், தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக போதிய சாகுபடி செய்ய முடியாமல் போனது. இந்நிலையில் குறைந்த நீர்த்தேவை கொண்ட வாட்டர் ஆப்பிள் எனும் பழவகையை பயிரிட முடிவு செய்தார். இந்த பழவகை குளிர்பிரதேசங்களில்தான் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வந்தது. புது முயற்சியாக சமவெளி பகுதியில் இதன் சாகுபடியை அறிமுகப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து விவசாயி வேலுச்சாமி கூறியதாவது, எங்கள் பகுதிகளில் கிணற்று பாசனத்தை நம்பியே அதிகளவு விவசாயம் செய்து வருகிறோம். போதிய மழை இல்லாவிட்டால் அந்த வருடம் விவசாயம் கிடையாது. இந்நிலையில்தான் வாட்டர் ஆப்பிள் குறித்த தகவல் செவிவழியாக கேட்டறிந்தேன். இதன்பின்பு, அதனை சாகுபடி செய்ய ஏதுவாக மண் பரிசோதனைக்கு அனுப்பினேன். பரிசோதனை முடிவில் எனது நிலத்தில் சாகுபடி செய்ய மண் ஏற்றதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஈரோட்டில் உள்ள நர்சரியில் இருந்து வாட்டர் ஆப்பிள் செடிக்கன்றுகளை பெற்று நடவு செய்தேன்.

18 மாதங்களே ஆனநிலையில் பழங்கள் காய்க்க துவங்கி விட்டது. இந்த பழங்கள் சிவப்பு மற்றும் ரோஸ் நிறத்திலும் விளையும். வாட்டர் ஆப்பிள் பழங்களை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம் என்பதால் விற்பனை சந்தையில் நல்ல கிராக்கி உள்ளது. ஆனால், எங்களிடம் வந்து வாங்கும் இடைத்தரகர்கள் கிலோ ரூ.100ல் துவங்கி ரூ.150 வரை மட்டுமே தருகின்றனர். ஆனால், அமேசான் போன்ற ஆன்லைன் விற்பனையில் இந்த பழங்கள் கிலோ ரூ.1000 அளவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே, அரசு அதிகாரிகள் இந்த சாகுபடி முறையை விவசாயிகளிடம் கொண்டு செல்வதிலும், விற்பனை சந்தைக்கு கொண்டு செல்வதிலும் உதவினால் நல்ல லாபம் கிடைக்கும்’ என்றார்.

Tags : Water Apple
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...