×

சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் மக்கள் அச்சம்: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

சென்னை: சென்னையில் அடையாறு அருகே முக்கிய சாலையில் திடீரென பெரும் பள்ளம் உருவானதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். அடையாறு-கிண்டி இடையேயுள்ள மத்திய கைலாஷ் பகுதியின் முக்கிய சாலையில் தான், நள்ளிரவில் திடீரென பெரும் பள்ளம் ஏற்பட்டது. சென்னை மத்திய கைலாஷ் சிக்னல் சென்னை மாநகரின் முக்கிய சிக்னலாக உள்ளது. மத்திய கைலாஷ் சிக்னலை கடந்துதான் ஓஎம்ஆர், ஈசிஆர், அண்ணா பல்கலைக்கழகம், அடையாறு ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியும். இந்நிலையில் கடந்த மே மாதம் 27ம் தேதி மத்திய கைலாஷ் சிக்னல் அருகே சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. முக்கிய சாலையில் ஏற்பட்ட இந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் பெரும் அச்சமடைந்தனர். இதையடுத்து அதிகாரிகள் சிமெண்ட் கலவை கொண்டு சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை அடைத்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு அதே இடத்தில் மீண்டும் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இரண்டே வாரங்களில் அதே இடத்தில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டிருப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சுமார் 10 ஆழமுள்ள இந்த பள்ளம் இரவு நேரத்தில் ஏற்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் தெரிவித்தும் காலை வரை அந்த இடத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து பள்ளம் ஏற்பட்ட பகுதியை சுற்றிலும் ஊழியர்கள் தடுப்புகளை அமைத்துள்ளனர். பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியை ஆய்வு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பள்ளம் காரணமாக அப்பகுதியில் சாலை போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தை விரைவில் சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Kailash ,motorists , Chennai, Madhya Kailash, Road, Crater, motorists
× RELATED 61 வயதில் நீட் எழுதிய மாஜி வங்கி அதிகாரி