×

சென்னை முழுவதும் கடந்த 4 நாட்களில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 15,543 பேர் மீது வழக்கு: எஸ்ஐ உட்பட காவலர்களும் சிக்கினர்

சென்னை: சென்னை முழுவதும் கடந்த 4 நாட்களில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 15,543 பேர் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அரசு முறையாக அமல்படுத்த வேண்டும் என்று வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை மாநகரம் முழுவதும் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் உத்தரவுப்படி இணை கமிஷனர் சுதாகர் தலைமையில் போக்குவரத்து போலீசார் நவீன வசதி கொண்ட 352 இ- சலான் இயந்திரம் உதவியுடன் கடந்த 7ம் தேதி முதல் நேற்று முனதினம் வரை 200க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி வாகன சோதனை நடத்தினர்.

மெரினா காமராஜர் சாலையில் நடந்த சோதனையில் உதவி ஆய்வாளர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் போது போக்குவரத்து உதவி கமிஷனர் நேரடியாக பிடித்தார். பின்னர் அந்த உதவி ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்து ரூ.100 அபராதமும் விதிக்கப்பட்டது. இதுபோல் சென்னை முழுவதும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய பொதுமக்கள் மற்றும் காவலர்கள் என 15 ஆயிரத்து 543 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அதிரடி சோதனை தொடரும் என்று சாலை விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு சாலைவிதிகள் குறித்து தேர்வு:
சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கீழ்ப்பாக்கம் போக்குவரத்து உதவி கமிஷனர் சேகர் தலைமையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமவுலி ஆகியோர் ஈவெரா சாலையில் நேற்று ‘தலைக்கவசம் அணிவோம்...விபத்தில்லா சென்னையை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். நிகழ்ச்சியில் சாலையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளை பிடித்து அவர்களுக்கு பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள பேருந்தில் சாலை விதிகள் குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. பிறகு அவர்களுக்கு ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் பிறகு அனைவருக்கும் சாலை விதிமுறைகள் குறித்து 10 நிமிடம் தேர்வும் நடத்தப்பட்டது. அதன் பிறகே அனைவரையும் போக்குவரத்து போலீசார் விடுவித்தனர்.

Tags : Chennai , Chennai, the last 4 days, on the helmet, not driving, driving on 15,543 people
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...