×

தமிழகம் முழுவதும் 481 மையங்களில் நடந்தது டெட் தேர்வில் முதல் தாள் கடினம்

சென்னை: தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்களுக்கான, ஆசிரியர் தகுதித் தேர்வு நேற்று நடந்தது. முதல் தாள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெரும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும் என்று, கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் கடந்த 2010-11ம் ஆண்டில் இருந்து ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட வேண்டும் என்று இருந்த நிலையில் பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இந்த தகுதி தேர்வு நடத்தப்படவில்லை.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி இந்தாண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு, ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. ஆனால் தேர்வு நடக்கும் தேதி மூன்று மாதத்திற்கு பிறகு அறிவிக்கப்பட்டது. அதன்படி மார்ச் 15ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை ஆன்லைனில் தேர்வர்கள் விண்ணப்பித்தனர். இந்நிலையில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றுவதற்கான முதல் தாள் தேர்வுக்கு, ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், பி.எட். பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றுவதற்கான பட்டதாரி ஆசிரியர் பணிக்கு இரண்டாம் தாள் தேர்வுக்கு  பி.எட். பட்டதாரிகள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

‘டெட்’ முதல் தாள், இரண்டாம் தாள் ஆகியவற்றுக்கு 6 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இந்நிலையில், நேற்று நடந்த முதல் தாள் தேர்வை, தமிழகம் முழுவதும் 1,83,341 பேர் எழுதினர். சென்னையில் 20 மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 481 மையங்களில் இந்த தேர்வு நடந்தது.  தேர்வு மையங்களில் காலை முதலே தேர்வர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் துணையுடன் வந்திருந்தனர். கணவரிடம் அல்லது தாயிடம் குழந்தையை கொடுத்துவிட்டு  அவர்கள் தேர்வெழுத சென்றனர்.  காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை தேர்வு நடந்தது. டெட் முதல் தாள் தேர்வு கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். இன்று நடைபெறும் 2ம் தாள் தேர்வில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 815 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

டெட் தேர்வு முடிவு 7 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2 லட்சம் பேருக்கு அரசு இன்னும் பணி நியமனம் வழங்கவில்லை. இதுதொடர்பாகவும், டெட் தேர்வில் விதி மீறல்கள் தொடர்பாகவும் பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இதுவரை பணி நியமன ஆணை கிடைக்காத, 2 லட்சம் பேரும் மீண்டும் டெட் தேர்வு எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : centers ,Tamil Nadu , TET exam,Tamil Nadu
× RELATED தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்