×

தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆடை அணிவதில் கட்டுப்பாடுகள்: கிரிஜா வைத்தியநாதன் சுற்றறிக்கை

சென்னை: தலைமை செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஆடை அணிவதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனுப்பிய சுற்றறிக்கையில், தலைமைச் செயலகம் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பணியாளர் கையேட்டில் உடைகள் அணிவது தொடர்பாக சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஊழியர்கள் அனைவரும் தூய்மையான நேர்த்தியான உடை அணிய வேண்டும். அலுவலகத்தின் நன்மதிப்பைப் பராமரிக்கும் வகையில் ஊழியர்களின் உடைகள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தலைமை செயலக ஊழியர்கள் பணிக்கு வரும் போது ஆண்கள் ஃபார்மல்ஸ் பேண்ட், ஷர்ட் மட்டுமே அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பெண்கள் சேலை, சுடிதார், சல்வார் கமீஸ் போன்ற உடைகளை அணியலாம் என்றும் ஆடைகளின் நிறம் அடர்த்தியாக இருக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் சுடிதாருடன் துப்பட்டா அணிவது காட்டாயம் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. நீதிமன்றம் தீர்ப்பாயங்களில் ஆஜராகும் போது பெண் ஊழியர்கள் இதே விதிமுறையை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆண்களின் ஆடைகள் அடர் வண்ணத்தில் பிறரின் கண்களைப் பறிப்பதாக இருக்கக் கூடாது எனவும் வெளிர் நிறத்தில் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்கள் முழு நீள ஸ்லீவ் கொண்ட கோட் அணிந்து நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chief Secretariat , Clothing Control, Chief Secretariat, Girija Vaidyanathan, Circular
× RELATED தமிழ்நாட்டில் போதைப்பொருளை...