×

4 காவலர்களுடன் ஏற்பட்ட தகராறு எதிரொலி மாம்பலம் இன்ஸ்பெக்டர் மதுரைக்கு அதிரடி மாற்றம்: டிஜிபி.டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

சென்னை: 4 காவலர்களிடம் ஏற்பட்ட தகராறில் மாம்பலம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சம்பத்தை டிஜிபி.டி.கே.ராஜேந்திரன் அதிரடியாக மதுரைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளராக சம்பத் பணியாற்றி வந்தார். அவருக்கு கீழ் பணியாற்றும் காவலர்களான சதீஷ்குமார், விஜயகார்த்திக், சிவபாலன், மனோஜ் ஆகிய நான்கு பேர் பணியாற்றி வருகின்றனர்.

குற்றப்பிரிவு வழக்குகள் தொடர்பாக சம்பத் பணி கொடுத்தால் முறையாக செய்யாமல் காவலர்கள் 4 பேரும் எதிர்த்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் 4 காவலர்களுக்கும் இன்ஸ்பெக்டர் சம்பத்துக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், இன்ஸ்பெக்டர் சம்பத் 4 காவலர்கள் சரியாக எனக்கு ஒத்துழைக்காமல் மிரட்டுவதாக என்று இணை கமிஷனர் மகேஸ்வரியிடம் புகார் அளித்தார்.

அதன்படி உயரதிகாரியை மதிக்காமல் செயல்பட்டதாக காவலர்கள் சிவபாலன், விஜயகார்த்திக், சதீஷ்குமார், மனோஜ் அகியோரை அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி இணை கமிஷனர் மகேஷ்வரி உத்தரவிட்டார். பின்னர் காத்திருப்போர் பட்டியலில் மாற்றப்பட்ட 4 காவலர்களும் இன்ஸ்பெக்டர் சம்பத் குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் டிஜிபி அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை புகார் மனு ஒன்று அளித்தனர்.

அதன்படி காவலர்களுக்கும் இன்ஸ்பெக்டருக்கும் இடையே உள்ள தகராறு குறித்து விசாரணை அறிக்கை அளிக்கும் படி தி.நகர் துணை கமிஷனருக்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் 4 காவலர்களிடம் துணை கமிஷனர் விசாரணை நடத்தினார்.

அப்போது 4 காவலர்களும் இன்ஸ்பெக்டர் குறித்து அனைத்து விபரங்களையும் அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. பிறகு விசாரணை அறிக்கையை போலீஸ் கமிஷனரிடம் துணை கமிஷனர் நேற்று முன்தினம் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்னையால் இன்ஸ்பெக்டர் சம்பத் நேற்று முன்தினம் 10 நாள் விடுப்பில் சென்றார். இதற்கிடையே போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று காலை இன்ஸ்பெக்டர் சம்பத்தை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார்.

அப்போது 4 காவலர்கள் கூறிய குற்றச்சாட்டை இன்ஸ்பெக்டர் சம்பத் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. பிறகு அதிரடியாக இன்ஸ்பெக்டர் சம்பத்தை கமிஷனர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றினார். அதன் பிறகு சம்பவம் குறித்து கேள்விப்பட்ட டிஜிபி.டி.கே.ராஜேந்திரன் இன்ஸ்பெக்டர் சம்பத்தை அதிரடியாக சென்னை மாநகர காவல் துறையில் இருந்து தெற்கு மண்டலத்திற்கு (மதுரை) மாற்றி உத்தரவிட்டார்.

Tags : Ekharoi Mambalam ,inspector ,Madhu ,DGPK Rajendran ,Madurai , 4 guards, dispute, mambalam inspector, Madurai, change, DGPDK Rajendran
× RELATED தேர்தல் பணம் விநியோகம் செய்ததில்...