×

வங்கிக்கடன் முறைகேடு விவகாரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் சந்தா கோச்சர்

புதுடெல்லி: வங்கிக்கடன் முறைகேடு விவகாரம் தொடர்பான விசாரணைக்கு, டெல்லியில் உள்ள அமலாக்கத்றை அலுவலகத்தில் ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் ஆஜரானார். ஐசிஐசிஐ தலைமை செயல் அதிகாரியாக சந்தா கோச்சர் இருந்தபோது, வீடியோகான் நிறுவனத்துக்கு விதிமுறைகளை மீறி ₹1,875 கோடி கடன் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அரவிந்த் குப்தா என்பவர் புகார் கொடுத்தார்.  இதுகுறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் குழு அமைத்தது.
சந்தா கோச்சர் வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் விதி மீறல் நடந்தது உண்மைதான் என்று இந்த குழு அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால், குழு தனது அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்பாகவே சிஇஓ பொறுப்பிலிருந்து சந்தா  கோச்சர் விலகினார். இதையடுத்து, கடந்த 10 ஆண்டுகளாக அவருக்கு வழங்கிய பண பலன்களையும் திருப்பி வழங்குமாறு வங்கி சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

 இந்த வழக்கில், சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த அமலாக்கத் துறையினர், மும்பை மற்றும் அவுரங்காபாத்தில் சந்தா கோச்சர் மற்றும் வீடியோகான் நிறுவன தலைவர் வேணுகோபால் தூத்  ஆகியோரின் வீடுகளில் கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி சோதனை நடத்தினர். ஒரே நேரத்தில் அனைத்து இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. பின்னர், அமலாக்கத்துறையின் மும்பை அலுவலகத்தில் சந்தா கோச்சரின் கணவர் தீபக்  கோச்சர், தீபக்கின் சகோதரர் ராஜீவ் கோச்சர் ஆகியோரிடம் அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை நடத்தினர். இதையடுத்து, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் மே 13ம் தேதி காலை 11 மணிக்கு ஆஜர் ஆகுமாறு சந்தா கோச்சருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதன்படி சந்தா கோச்சார் நேற்று ஆஜர் ஆனார். இவர் மீது,  சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், விசாரணையை முன்னெடுத்துச்செல்ல உதவும் வகையில் வழக்கில் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சந்தா கோச்சரை கேட்டுக்கொண்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags : Chanda Kochar ,Department of Immigration Department , Bank ,account, abuse, Implementation, Chanda Kochar, appeared
× RELATED ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சி.இ.ஓ....