×

ஹேமந்த் சோரன் இடைக்கால ஜாமீன் கேட்ட மனு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

புதுடெல்லி: கடந்த ஜனவரி 31ம் தேதி ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் நிலமோசடி வழக்குகளில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த அம்மாநில உயர்நீதிமன்றம், கடந்த 3ம் தேதி ஹேமந்த் சோரன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக ஹேமந்த் சோரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க கடந்த 16ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்த சர்மா ஆகியோர் அடங்கிய கோடைக்கால சிறப்பு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹேமந்த் சோரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் இந்த நில மோசடி வழக்கு என்பது பொய்யானது என்பது மட்டுமில்லாமல் சட்டத்திற்கு புறம்பானதாகும். இருப்பினும் இந்த வழக்கில் ஒரு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும். தேர்தல் நேரம் என்பதால் நீதிமன்றம் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆனால் இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கில் விசாரணை நடந்து வருவதால் ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் உட்பட எந்த நிவாரணமும் வழங்க முடியாது. எனவே அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதேப்போன்று அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக அவர் தொடர்ந்திருந்த மனுவையும் தள்ளுபடி செய்கிறோம் என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

The post ஹேமந்த் சோரன் இடைக்கால ஜாமீன் கேட்ட மனு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Hemant Soran ,New Delhi ,Jharkhand ,Chief Minister ,Jharkhand Mukti Morsa Party ,Enforcement Directorate ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...