×

வழிகாட்டி நெறிமுறை தயார் போலி எம்சாண்ட் தயாரிப்புக்கு செக்

* 6 துறைகளின் அனுமதி கட்டாயம்
* தமிழக அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பு

சென்னை: போலி எம்சாண்ட் தயாரிக்கும் குவாரிகளுக்கு செக் வைக்கும் வகையில் வழிகாட்டி நெறிமுறை தயார் செய்யப்பட்டுள்ளது. இது தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஆற்றுமணலுக்கு மாற்றாக எம்சாண்ட் எனப்படும் செயற்கை மணல் பயன்பாட்டை ஊக்குவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து ஒரிஜினல் எம்சாண்ட குவாரிகளை கண்டறிந்து அந்த குவாரிகளுக்கு  மதிப்பீட்டு சான்றிதழ் வழங்க பொதுப்பணித்துறைக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கியது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் 1,300 எம்சாண்ட் குவாரிகளுக்கு தனித்தனியாக கடிதம் எழுதியது. அந்த கடிதத்தின் பேரில், விண்ணப்பித்த எம்சாண்ட் குவாரிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், குறிப்பிட்ட குவாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மற்ற குவாரிகளில் தயாரிக்கப்படும் எம்சாண்ட் ஒரிஜினல் தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் ஜல்லி உடைக்கும் போது கழிவுகளாக வரும் தேவையற்ற துகள்களை எம்சாண்ட் எனக்கூறி சிலர் விற்பனை செய்து வருகின்றனர். இதனால், பொதுமக்கள் சிலர் எம்சாண்ட் மணலை வாங்கவே அச்சப்படும் நிலை  ஏற்பட்டுள்ளது. ஆனால், தற்போது ஆற்றுமணல் தட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் கட்டுமான நிறுவனங்கள் வேறுவழியின்றி எம்சாண்ட் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால், கட்டிடங்களின் உறுதி தன்மையில்  கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் எம்சாண்ட் குவாரிகளுக்கு தனியாக லைசென்ஸ் தர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும், எம்சாண்ட் குவாரிகளுக்கு அனுமதி கொடுக்கவும், போலி எம்சாண்ட் குவாரிகளை ஆய்வு செய்யவும் புதிதாக  எம்சாண்ட் வழிகாட்டி நெறிமுறைகளை கொண்டு வர முடிவு செய்தது. இதற்காக, மணல் குவாரி செயல்பாடுகளின் திட்ட இயக்குனர் அருண் தம்புராஜ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு சார்பில் புதிய  வழிகாட்டி நெறிமுறை வகுக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 6 மாதங்களுக்கு மேலாக இந்த பணியில் அவர்கள் மேற்கொண்டனர். தற்போது அந்த வழிகாட்டி நெறிமுறைக்கு தமிழக அரசின் ஒப்புதல் கேட்டு அனுப்பி  வைக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டி நெறிமுறையில் எம்சாண்ட் குவாரிகள் அமைக்க வருவாய்த்துறை, கனிமவளம், மாசுகட்டுபாட்டு வாரியம், பொதுப்பணித்துறை, பதிவுத்துறை ஆகிய துறைகளின் அனுமதி பெற்றிருக்க  வேண்டும். அந்த குவாரிகளுக்கு மட்டுமே இனி இயங்க அனுமதிக்கப்படும். ஒவ்வொரு குவாரிகளும் எம்சாண்ட் மதிப்பீட்டு சான்று பெற வேண்டும்.

இந்த குவாரிகளுக்கு 3 ஆண்டுகளுக்கொரு முறை மதிப்பீட்டு சான்று புதுப்பிக்க  வேண்டும். மதிப்பீட்டு சான்று வழங்கும் குழுவினர் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்யும். அப்போது குவாரிகளில் போலி எம்சாண்ட் தயாரிப்பது தெரிய வந்தால் மதிப்பீட்டு சான்று ரத்து செய்யப்படும். குவாரிகளுக்கு சீல்  வைக்கப்படும். மேலும், போலி எம்சாண்ட் தயாரிப்பது தெரிய வந்தால் 6 மாதம் சிறை தண்டனை, ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் போலி  எம்சாண்ட் உற்பத்தி செய்வது தடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : guide protocol, Check ,fake Emzand ,product
× RELATED தொழில் நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ...