×

குடும்ப தகராறு காரணமாக மெரினாவில் தற்கொலைக்கு முயன்ற தாய் ராட்சத அலையில் சிக்கி பலி; மகன் உயிருடன் மீட்பு

சென்னை: சேலத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது மகனுடன் மெரினா கடலில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ராட்சத அலையில் சிக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகனை ஆயுதபடை காவலர் உயிருடன் மீட்டார். சென்னை மெரினா கடற்கரையில் நேற்று அதிகாலை பொதுமக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்ேபாது, அண்ணா சமாதி பின்புறம் கல்குட்டை மணல் பரப்பில் வாலிபருடன் ஒரு பெண் அமர்ந்து அழுதபடி பேசிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அந்த பெண், வாலிபரின் கையை பிடித்துக்கொண்டு கடலில் இறங்கி ஆழமான பகுதிக்கு நடந்து சென்றார்.

இதை பார்த்த பொதுமக்கள், இருவரையும் வெளியே வரும்படி சத்தம் போட்டனர். ஆனால் அவர்கள் கேட்டபாடில்லை. விறுவிறுவென நடந்து சென்று கொண்டே இருந்தனர். அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், மெரினா கடற்கரையில் பாதுகாப்பு பணியில் இருந்த  ஆயுதப்படை காவலர் செந்தில்குமாரிடம் தெரிவித்தனர். உடனே, அந்த காவலர் கடலில் இறங்கி இருவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதில், வாலிபரை மட்டும் மீட்க முடிந்தது. ராட்சத அலையில் சிக்கி பெண் மாயமானார். இதையடுத்து, மீட்கப்பட்ட வாலிபரிடம் அண்ணா சதுக்கம் போலீசார் விசாரித்தனர்.

அவர், சேலம் மாவட்டம், அம்மாபேட்டை உடையார் காலனி திருவிக சாலையை சேர்ந்த செல்வகுமார் (58) என்பவரது மகன் சண்முகப்பிரியன் (25) என்றும், அலையில் சிக்கிய பெண் செல்வகுமாரின் மனைவி ரேவதி (54) என்றும் தெரிந்தது.  எம்பிஏ பட்டதாரியான சண்முகப்பிரியன் சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். தம்பதிக்குள் தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளும் நோக்குடன் மகனுடன் ரேவதி சென்னைக்கு வந்தது தெரிய வந்தது.

இதற்கிடையே ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த ரேவதியின் உடல் சிறிது நேரத்தில் கரை ஒதுங்கியது. உடலை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு பன்நோக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் மெரினா கடற்கரையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தனது உயிரை பொருட்படுத்தாமல் கடலில் இறங்கி வாலிபரை காப்பாற்றிய ஆயுதப்படை காவலருக்கு பொதுமக்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : family dispute ,death ,Marina , Chennai, Marina Beach, mother's sacrifice, family dispute
× RELATED மெரினாவில் ₹7 கோடி செலவில் பாய்மர படகு...