×

போலார்டின் அதிரடி ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் வெற்றி

மும்பை: ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை  3 விக்கெட் வித்தியாசத்தில்  வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
வாங்கடே மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீசியது. காயத்தால் அவதிப்படும் ரோகித் ஷர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டதால், கெய்ரன் போலார்டு தலைமையில் மும்பை அணி களமிறங்கியது. பஞ்சாப் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், கிறிஸ் கேல் களமிறங்கினர். பெஹரண்டார்ப் வீசிய முதல் ஓவரில் 1 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். அவர் வீசிய 5வது ஓவரில் கிறிஸ் கேல் ஒரு பவுண்டரி, 3 சிக்சர் விளாசி மிரட்டினார். மறுமுனையில் ராகுலும் அதிரடியில் இறங்க,  பஞ்சாப் ஸ்கோர் எகிறியது. கேல் 31 பந்தில் அரை சதம் அடிக்க, ராகுல் 41 பந்தில் 50 ரன் எடுத்தார்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12.5 ஓவரில் 116 ரன் சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தது. கேல் 63 ரன் (36 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி பெஹரண்டார்ப் பந்துவீச்சில் குருணல் பாண்டியா வசம் பிடிபட்டார். அடுத்து வந்த டேவிட் மில்லர் 7 ரன், கருண் நாயர் 5 ரன் எடுத்து ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். சாம் கரன் 8 ரன்னில் வெளியேறினார். ஹர்திக் பாண்டியா வீசிய 19வது ஓவரை சிக்சரும் பவுண்டரியுமாகப் பறக்கவிட்டு சின்னாபின்னமாக்கிய ராகுல், கடைசி ஓவரில் சதத்தையும் நிறைவு செய்தார். ஐபிஎல் தொடரில் இதுவே அவரது அதிகபட்ச ரன் குவிப்பாகவும் அமைந்தது. கிங்ஸ் லெவன் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன் குவித்தது. லோகேஷ் ராகுல் 100 ரன் (64 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்), மன்தீப் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 198 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. தொடக்கத்தில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் போலார்டின் ஆட்டம் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்தது. அவரின் அதிரடி ஆட்டம் கடைசி ஓவர் வரை தொடர்ந்தது. இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரில் நோபாலில் சிக்ரும், அடுத்த பந்தில் பவுண்டரியும், அடுத்த பந்தில் விக்கெட்டையும் பறிகொடுத்தார் போலார்ட். அவர் 31 பந்தில் 83 ரன் (10 சிக்சர், 3 பவுண்டரி) விளாசினார். வெற்றிக்கு  4 பந்தில் 4 ரன்களே தேவைப்பட்ட நிலையில் மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியது. போலார்டு ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mumbai Indians ,Pollard , Pollard, Action, Match, Mumbai Indians, Win
× RELATED 14 சிக்சருடன் 157 ரன் சர்ப்ராஸ் கானின்...