×

காங்கிரசை தொடர்ந்து மஜதவையும் அழிக்க சித்தராமையா முயற்சி: ஈஸ்வரப்பா பேட்டி

பாகல்கோட்டை: காங்கிரசை தொடர்ந்து மஜத கட்சியையும் அழிக்க முன்னாள் முதல்வர் சித்தராமையா முயற்சி மேற்கொண்டு வருகிறார் என்று முன்னாள் துணை முதல்வர் கே.எஸ். ஈஸ்வரப்பா தெரிவித்தார். பாகல்கோட்டையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஈஸ்வரப்பா கூறியதாவது: மக்களவை தேர்தலில் மஜத வேட்பாளர்கள் வெற்றிபெற முன்னாள் முதல்வர் சித்தராமையா விட மாட்டார். அவர் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை அழித்து விட்டார். அதேபோல் மஜதவையும் அழிக்க முயற்சித்து வருகிறார். சித்தராமையா முதல்வராக இருந்த நேரத்தில் நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலின் போது அடுத்த முதல்வர் நான் தான் என்று தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது காங்கிரஸ் கட்சியால் 78 தொகுதிகளில் மட்டும் வெற்றிபெற முடிந்தது.

சாமுண்டீஸ்வரி தொகுதியில் தன்னை தோற்கடித்தனர் என்பதற்காக கொரட்டகெரே தொகுதியில் பரமேஸ்வரை தோற்கடிக்க வைத்தவர்தான் சித்தராமையா. மாநிலத்தில் காங்கிரஸ்-மஜத அமைத்துள்ள கூட்டணி மக்களவை தேர்தலில் வெற்றிபெறாது. இதனால் பா.ஜ. கூடுதல் தொகுதிகளில் வெற்றிபெறும். மக்களவை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ. வேட்பாளர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். டிக்கெட் விற்பனை செய்துள்ளதாக காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ்குண்டுராவ் தெரிவித்துள்ளார்.  ஆர்.எஸ்.எஸ். இயக்கம் குறித்து அவருக்கு எந்த தகவலும் தெரியவில்லை.இந்த இயக்கம் இளைஞர்களுக்கு நாட்டுப் பற்று, இந்துத்துவா பற்றி கற்றுக் கொடுக்கும் சிறப்பான பணிகள் செய்து வருகிறது. தேர்தல் லாபத்துக்காக கீழ்த்தரமாக பேசுவதை தினேஷ் குண்டுராவ் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தாக்குதல் நடத்துவது குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் என்று முதல்வர் எச்.டி. குமாரசாமி கூறியுள்ளார். அப்படி தெரிந்திருந்தால் அது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் ராணுவ வீரர்களின் உயிர்களை காப்பாற்றி இருக்க முடியும். வருமான வரி துறையினர் நடத்திய சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என்று குமாரசாமி தெரிவித்துள்ளார். ஆனால் கோடிக்கணக்கான பணம் கிடைத்துள்ளது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sitaramayya ,interview ,Eswarappa ,Congress , Sitaramayya ,Congress, Eswarappa
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிக்கு 2ம் கட்ட நேர்முக தேர்வு