×

முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் படங்களின் இயக்குனர் மகேந்திரன் காலமானார்

சென்னை: தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மகேந்திரன் (வயது 79). நேற்று காலை 7.30 மணியளவில் காலமானார். மகேந்திரனுக்கு மனைவி ஜாஸ்மின், மகன் ஜான் ரோஷன், மகள்கள் டிம்பிள் பிரீதம், அனுரீட்டா பிரீதம் உள்ளனர். இவர்களில் ஜான் ரோஷன், விஜய் நடிப்பில் வெளியான ‘சச்சின் என்ற படத்தை இயக்கியுள்ளார். வாழ்க்கை குறிப்பு: தமிழ் சினிமாவின் முக்கிய படங்களான ‘முள்ளும் மலரும், ‘உதிரிப்பூக்கள், ‘ஜானி, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே, ‘மெட்டி, ‘கைகொடுக்கும் கை, ‘சாசனம் உள்பட பல படங்களை மகேந்திரன் இயக்கியுள்ளார். மேலும் சிவாஜி கணேசன் நடித்த ‘தங்கப்பதக்கம் மற்றும் ‘நாம் மூவர், ‘நிறைகுடம், ‘வாழ்ந்து காட்டுகிறேன், ‘ஆடு புலி ஆட்டம் உள்பட பல படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். ரஜினிகாந்தின் ‘பேட்ட, விஜய்யின் ‘தெறி, ‘சீதக்காதி, ‘மிஸ்டர் சந்திரமவுலி, ‘நிமிர், ‘பூமராங், தெலுங்கு ‘கட்டமராயுடு ஆகிய படங்களில் மகேந்திரன் நடித்துள்ளார். கடைசியாக, கரு.பழனியப்பன் இயக்கிய ‘புகழேந்தி எனும் நான் படத்தில் அவர் நடித்து வந்தார். அப்போது மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றார்.

 1939ல் இளையான்குடியில் பிறந்த மகேந்திரன் என்கிற அலெக்சாண்டர், கல்லூரியில் படிக்கும்போது நாடகங்கள் எழுதி நடத்துவார். 1958ல் ஒரு கல்லூரி விழாவுக்கு எம்.ஜி.ஆர் வந்தபோது, சினிமா தொடர்பாக மகேந்திரன் பேசியதைக் கேட்டு பாராட்டினார். பின்னர் ஒரு முறை  எம்.ஜி.ஆரை சந்தித்தபோது, ‘பொன்னியின் செல்வன் கதைக்கு மகேந்திரனை திரைக்கதை எழுதும்படி கேட்டார். ஆனால், அந்தப் பணி தாமதமானதால், தனது நாடகங்களில் பணியாற்றும்படி எம்.ஜி.ஆர் சொன்னார். அப்போது ‘அனாதைகள் என்ற தலைப்பில் ஒரு கதையை மகேந்திரன் எழுதினார். அந்தக் கதை ‘வாழ்வே வா என்ற பெயரில் எம்.ஜி.ஆர்., சாவித்திரி இணைந்தனர். ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய மூன்றே நாட்களில், படம் கைவிடப்பட்டது. பிறகு எம்.ஜி.ஆரின் ‘காஞ்சித் தலைவன் படத்தில் உதவி இயக்குனராக மகேந்திரன் பணியாற்றினார். இந்நிலையில் 1978ல் ரஜினிகாந்த், ஷோபா நடித்த ‘முள்ளும் மலரும் படத்தின் மூலம் இயக்குனரானார். முதல் படமே பெரிய வெற்றிபெற்றது.

 மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த் கூறுகையில், ‘நடிகன் என்ற அடையாளத்தை எனக்கு கொடுத்தவர் மகேந்திரன். என்றார். கமல்ஹாசன் கூறும்போது, ‘நான் பார்த்து வியந்த திறமையாளர்களில் ஒருவர் மகேந்திரன் என்றார். மகேந்திரனின் உடலுக்கு பாரதிராஜா, மணிரத்னம், பி.வாசு, ஏ.ஆர்.முருகதாஸ், பாலா, கவிஞர் வைரமுத்து, விஜய் சேதுபதி, மோகன், அர்ச்சனா, சுஹாசினி, ராதிகா, வரலட்சுமி உள்பட திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தினர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தேமுதிக சார்பில் விஜயகாந்த், வைகோ ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

பன்முக திறமை கொண்டவர்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘தமிழ் திரையுலக இயக்குனர்களில் கதாநாயகராக விளங்கியவர் இயக்குனர் மகேந்திரன். எளிமைக்கு இலக்கணம், யதார்த்த சினிமா இயக்குனர், வசனகர்த்தா, நடிகர் என பன்முக திறமை கொண்ட மகேந்திரனின் மறைவு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி இரங்கல்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: பழம்பெரும் திரைப்பட இயக்குநரும், ரசிகர் பெருமக்களால் யதார்த்த சினிமாவின் இயக்குநர் என வர்ணிக்கப்படும் மகேந்திரன் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல்
பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விஜயகாந்த் (தேமுதிக நிறுவனர்): திரையுலகில் நல்ல குடும்ப கதைகளை தந்து  கலையுலகத்திற்கு பெருமையை சேர்த்தவர். அவரது இழப்பு திரையுலகிற்கு  மிகப்பெரிய ஒரு இழப்பாகும்.

வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்): விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் அழைப்பின் பேரில் தமிழ் ஈழத்திற்குச் சென்று அவரை சந்தித்த பெருமை இயக்குனர் மகேந்திரனுக்கு உண்டு. அவர் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

கவிஞர் வைரமுத்து: தமிழ் சினிமாவுக்கு இந்திய உயரம் கொடுத்தவர். நாவல்களை திரைப்படமாக்கிப் படைப்பிலக்கியத்திற்கு பக்கத்தில் திரைப்படத்தை கொண்டுவந்தவர். இன்னும் நீண்ட காலங்களுக்கு அவர் நினைக்கப்படுவார். இத்தனை பெரிய கலை இயக்குனரின் நதிமூலம் ஒரு பத்திரிகையாளர் என்பது பெருமைக்குரியது.

டிடிவி.தினகரன் (அமமுக துணைப் பொதுச் ெசயலாளர்): தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குனரும், வசனகர்த்தாவுமான மகேந்திரன் மறைந்த தகவல் அறிந்து வருத்தமடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கும், தமிழ் திரை உலகிற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்: தமிழ்ச் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தியவர். ஏராளமான இளைஞர்கள் திரைத்துறைக்கு வருவதற்கு ஆதர்ஷமாக அமைந்தவர். அவரது மறைவு தமிழ் திரையுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை பிரிந்து வாழும் குடும்பத்தினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mahendran ,Muthulum Broom ,Uthiripuzha , Director Mahendran
× RELATED எடையூர், வங்கநகர் கிராமங்களில் 800 ஆடுகளுக்கு நோய் தடுப்பூசி