×

அரசு மருந்தாளுநர்கள் தேர்வில் பி.பார்ம் பட்டதாரிகளும் விண்ணப்பிக்க அனுமதி : உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை : அரசு மருந்தாளுநர்கள் பணியிடங்களுக்கான தேர்வில், பி.பார்ம் பட்டதாரிகளும் விண்ணப்பிக்க அனுமதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மருத்துவத்துறை மருந்தாளுநர் எனப்படும் ஃபார்மாசிஸ்ட் என்ற பணிக்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 353 காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. அந்த தேர்வில் 2014ம் ஆண்டு வெளியான அரசாணை பின்பற்றப்படவில்லை என நவீன்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மருந்தாளுநர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதியை ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிக்கவும் மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய இயக்குநருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் மருந்தாளுநர்கள் பணியிட தேர்வில் பி.பார்ம் பட்டதாரிகளும் விண்ணப்பிக்க அனுமதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் பி.பார்ம் பட்டதாரிகளையும் விண்ணப்பிக்க அனுமதித்தால் தேர்வு நடைமுறைகள் தாமதமாகும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசுத்தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் கூடுதல் கல்வித்தகுதி பெற்றிருப்போரின் விண்ணப்பங்களை நிராகரிக்க முடியாது என கூறி அரசு மருந்தாளுநர் பணியிடங்களுக்கு பி.பார்ம் பட்டதாரிகளையும் அனுமதிக்க உத்தரவிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பணி நியமனம் நீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 8ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Graduates ,State Pharmaceuticals Examination ,High Court , State Pharmacists, P. Barm Graduates, High Court
× RELATED போதைப்பொருள் தடுப்பு தொடர்பான அரசின்...