×

தேர்தல் அலுவலர்கள் கெடுபிடி: ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் வருகை குறைகிறது

ஊட்டி: தேர்தல் அலுவலர்கள் நாள்தோறும் தமிழக - கேரள எல்லை மற்றும் தமிழக - கர்நாடக மாநில எல்லைகளில் வாகன தணிக்கை மேற்கொண்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகளிடம் உள்ள பணத்தை பறிமுதல் செய்து வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த மாதம் 19ம் தேதி பாரளுமன்றத்திற்கான தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 10ம் தேதி வெளியிடப்பட்டது. அன்றைய தினம் முதலே தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தது. இதனை தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் 24 மணி நேரமும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் சுற்றுலா பகுதிகள் நிறைந்த மாவட்டம் என்பதால், நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதே போல், மூன்று மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் தமிழக - கர்நாடக எல்லையான கக்கநல்லா, தமிழக - கேரள எல்லையான நாடுகாணி, தாளூர், ேசரம்பாடி போன்ற பகுதிகளின் வழியாக நாள் தோறும் வந்து செல்வது வழக்கம். அதே போல், கேரள மாநிலத்தில் இருந்து கோவை, மேட்டுப்பாளையம், குன்னூர், கோத்தகிரி வழியாக அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். 10 பேருக்கு மேல் வந்தால், குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் எடுத்து வர வேண்டும். அறைகள், உணவு என பல்வேறு செலவுகள் உள்ள நிலையில், இது போன்ற தொகைகளை கொண்டு வருவது சாதாரண விஷயம். அதேபோல், கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் இருந்து ஊட்டிக்கு வரும் காய்கறி வியாபாரிகளும் குறைந்தபட்சம் ரூ.1 முதல் ரூ.5 லட்சம் வரை எடுத்து வருவது வழக்கம். நாள் தோறும் இவ்வழித்தடங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்வது வழக்கம். ஆனால், தற்போது தேர்தல் விதிமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகளிடம் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உள்ள பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். இதுவரை பிடித்துள்ளவர்களில் பெரும்பாலானவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவரையோ அல்லது தமிழகத்தின் பிற பகுதிகளை சேர்ந்தவர்களையோ தேர்தல் அதிகாரிகள் அதிகளவு பிடித்ததாக தகவல்கள் இல்லை.

நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை, மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையே அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இச்சமயத்தில்தான் இங்குள்ள வியாபாரிகளுக்கு தொழில் நடக்கும். லாபமும் கிடைக்கும். ஆனால், தேர்தல் விதிமுறைகள் கடந்த 10ம் தேதி துவங்கி மே மாதம் வரையுள்ள நிலையில், தங்களுக்கு ேதவையான பணத்தை எடுத்துக் கொண்டு யாரும் ஊட்டிக்கு வர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அதேபோல், காய்கறி வியாபாரிகள் உட்பட அனைத்து வியாபாரிகளும் மூன்று மாநில எல்லையான கூடலூர் பகுதி வழியாக தயக்கம் காட்ட துவங்கிவிட்டனர். தொடர்ந்து தேர்தல் அலுவலர்களின் கெடுபிடி நீடித்தால், அடுத்த இரு மாதங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. அதேபோல், வியாபாரிகளும் ஊட்டிக்கு வருவது முற்றிலும் குறைந்துவிடும். இதனால், நீலகிரி மாவட்டத்தின் மொத்த பொருளாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சுற்றுலா பயணிகளிடமும், வியாபாரிகளிடமும் பணத்தை பறிக்கும் செயல்களை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டாம் என வியாபாரிகள் மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Election ,Kudupadi ,Ooty ,visitors , Election, Ooty, tourists, merchants
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்கள்...