×

தஞ்சை பகுதியில் பிரம்பு குச்சியால் தயார் செய்த பொருட்கள் விற்பனை மும்முரம்

தஞ்சை : செங்கோட்டையில் தயார் செய்யப்பட்டு தஞ்சைக்கு கொண்டு வந்துள்ள பிரம்பு குச்சியால் தயார் செய்த பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. இன்றைய நவீன அறிவியல் உலகத்தில் நாம் வாழ்ந்து வருவதால் நமது வீட்டில் பயன்படுத்தப்படும் எல்லா பொருட்களும் நவீனமயமாகி வருகிறது. ஆரம்ப காலத்தில் மண்ணால் தயார் செய்யப்பட்ட பொருட்களை அதிகளவில் பயன்படுத்தி வந்தோம்.

இதை பாதுகாப்பது என்பது நமது முன்னோர்களுக்கு எளிதாக இருந்தது. இதன்பின்னர் வந்த தலைமுறையினர் மண்ணால் தயார் செய்த பொருட்களை பாதுகாப்பது கடினம் என கூறி வெண்கலம் மற்றும் பித்தளை ஆகியவற்றால் தயார் செய்த பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்தனர். அதேபோல் நமது வீடுகளில் பயன்படுத்தப்படும் எல்லா பொருட்களும் மாற துவங்கியது. இதனால் நமக்கு தேவையில்லாத நோய்கள் வர தொடங்கியது. நாம் எவ்வாறு புதிது புதிதாக வீட்டில் பொருட்களை பயன்படுத்த துவங்கினோமோ அதுபோல் புதிது புதிதாக நோய்கள் வர துவங்கியது.

இதை நாம் தற்போது கண்டுபிடித்ததன் காரணமாக பழைய முறையை நோக்கி செல்கிறோம். அதில் ஒன்று தான் பிரம்பால் செய்யப்பட்ட பொருட்கள். இவ்வாறு பிரம்பு குச்சியால் தயார் செய்த பொருட்கள் நீண்ட நாட்களுக்கு உழைப்பதுடன், அழகு நிறைந்த பொருளாகவும் வீடுகளில் வைக்கப்படுகிறது. மிகப்பெரிய நட்சத்திர ஓட்டல்களில் வரவேற்பு அறைகளில் இதுபோன்று பிரம்பு குச்சியை கொண்டு தயார் செய்த பொருட்கள் இன்று அதிகளவில் வைக்கப்படுகிறது. தஞ்சையை சுற்றி நிறைய சுற்றுலா தலங்கள் இருப்பதால் இந்த பொருளுக்கு மவுசு சற்று அதிகமாகவே உள்ளது. பிரம்பு குச்சியால் பொருட்களை செங்கோட்டையில் தயார் செய்து தஞ்சையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரம்பு பொருட்களை விற்பனை செய்பவர் கூறியதாவது: நான் தஞ்சையில் கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக பிரம்பு குச்சியால் தயார் செய்த கட்டில், ஊஞ்சல், பிறந்த குழந்தைகளுக்கான தொட்டில், சேர், நாற்காலி, சிறிய, சிறிய கூடைகள் என பலவற்றை விற்பனை செய்து வருகிறேன். பாரம்பரிய பொருட்களை பாதுகாப்பதுடன் அதை நாம் பயன்படுத்த வேண்டும்.

உடல் சோர்வு, தூக்கமின்மை போன்றவை நீங்க இந்த பிரம்பு குச்சியால் தயார் செய்த கட்டில் அல்லது சேர்களை பயன்படுத்தலாம். பிரம்பு குச்சியால் தயார் செய்த பொருட்கள் மீது அமரும்போது அல்லது படுத்து உறங்கும்போது அக்குபஞ்சர் முறையில் உடலுக்கு அழுத்தம் கிடைக்கிறது என்பது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. இதனால் தான் பிரம்பு குச்சியால் தயார் செய்த பொருட்களை நமது முன்னோர் பயன்படுத்தி வந்தனர்.

காலப்போக்கில் அறிவியல் யுகத்தை நோக்கி சென்றதன் விளைவாக பலவிதமான நோய்களை விலைக்கு வாங்க நேரிட்டது. இதை தற்போது உணர்ந்தவர்கள் பிரம்பால் தயார் செய்த பொருட்களை வாங்கி பயன்படுத்த துவங்கிவிட்டனர். இருப்பினும் பிரம்பால் தயார் செய்யும் பொருட்களை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும். அவ்வாறு உதவி செய்தால் இன்னும் விலை குறைவாக வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முடியும். கைவினை பொருட்களுக்கு அரசு மானியம் கொடுப்பதுபோல் எங்களை ஊக்குவிக்கும் வகையில் மானியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரம்பு குச்சியால் தயார் செய்த பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு தேவையான இடவசதிகளை செய்துதர வேண்டும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mumumuram ,area ,Tanjore , tanjore,Cane stick,Things ,sale
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...