×

திருப்போரூர் முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.750 கோடி நிலத்தை கூட்டு வைத்து மனையாக மாறியதை பார்த்து கோயில் நிர்வாகம் அதிர்ச்சி

சென்னை: திருப்போரூர் முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.750 கோடி மதிப்பிலான 76 ஏக்கர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்து வீட்டு மனைகளாக மாறி  அமோகமாக விற்பனை செய்யப்பட்ட காட்சியை கண்டு கோயில் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது.காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் அருள்மிகு கந்தசாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில்களுக்கு சொந்தமாக விவசாய நிலம், காலிமனைகள் மற்றும்  கட்டிடங்கள் என்று திருப்ேபாரூர், கேளம்பாக்கம், நெம்மேலி உள்ளிட்ட பல இடங்களில் உள்ளது. இந்த சொத்துகளில் சிலவற்றை தனியார் போலி ஆவணங்கள்  தயாரித்து விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.  குறிப்பாக, கடந்த 2018ல் கூட 2.51 ஏக்கர் நிலம் தனியார் நிறுவனங்களுக்கு  முறைகேடாக பட்டா மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதன் மதிப்பு பல கோடி ஆகும்.
இந்த நிலையில், தற்போது, திருப்போரூர் முருகன் கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் கண்டறியும் பணியில் செயல் அலுவலர் சக்திவேல் தலைமையில்  நில அளவை, வருவாய்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பழைய மகாபலிபுரம் சாலையில் கேளம்பாக்கம் அருகே காலவாக்கம் கிராமத்தில் திருப்போரூர் முருகன் கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள்  இருப்பது தெரியவந்தது. அந்த நிலங்கள் வள்ளி தேவஸ்தானம் மூலம் கடந்த 1936ல் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இது தொடர்பான திருப்போரூரில் பதிவு  செய்யப்பட்ட ஆவணங்கள் கிடைத்துள்ளது. மேலும், அன்னபூர்ணம்மாள் என்பவர் கோயிலுக்கு தான செட்டில்மென்ட் கொடுத்து இருக்கும் தகவலும் ஆவணங்கள்  மூலம் தெரிய வந்துள்ளது. இந்த நிலங்களுக்கான பட்டா திருக்ேகாயில் செயல் அலுவலர் பெயரில் உள்ளது. அதன்படி 76 ஏக்கர் நிலம் அங்கிருப்பது தெரிய  வந்தது. இந்த நிலத்தின் மதிப்பு ₹750 கோடி இருக்கும். இந்த நிலங்களை பார்வையிடுதற்காக கோயில் நிர்வாகத்தினர் சென்றனர். அப்போது, அந்த நிலங்களில்  பிளாட் போட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

அதிகார வர்க்கம் உதவியுடன்தான் இந்த நிலம் கொள்ளையடிக்கும் தகவல் நடந்து வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும், 10க்கும்  மேற்பட்ட இடங்களில் அங்கு கட்டுமான பணி நடந்து வந்தது. சென்னையை சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்த நிலத்தை வாங்கி விற்பதாக கூறப்படுகிறது. இதற்காக  போலி ஆவணம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் மகாபலிபுரம் உள்ளூர் திட்டகுழுமம், மாவட்ட  கலெக்டர், டிடிசிபி, சார்பதிவாளர்அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும், அந்த பிளாட்டிற்கு அப்ரூவல்  வழங்க கூடாது என்றும் அந்த கடிதத்தில் கூறியுள்ளது. இது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் போலீசிடம் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது நிலங்களை கண்டறிந்த நிலையில், அதை மீட்பதற்கான நடவடிக்கையில் கோயில் செயல் அலுவலர் சக்திவேல் இறங்கியுள்ளார். இது  தொடர்பாக அவர் அறநிலையத்துறை தலைமைக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதன்பேரில் அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் உள்ள சொத்து  விவரங்களை தேடி வருவதாக கூறப்படுகிறது. அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தை பிளாட் போட்டு தனியார் விற்பனை செய்து வருவது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : land ,alliance ,Tirupoorur Murugan , Temple of Thrippothur Murugan Temple
× RELATED தனியார் தோட்ட வன நிலம் ஆக்கிரமிக்க...