×

மதுவிலக்கு கொள்கைக்கான கால அட்டவணை வெளியிடக்கோரி காத்திருப்பு போராட்டம் நடத்திய 400 டாஸ்மாக் ஊழியர்கள் கைது

சென்னை: மதுவிலக்கு கொள்கைக்கான கால அட்டவணை வெளியிட வேண்டும், டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் நேற்று எழும்பூரில் உள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டம் நடத்திய 400 டாஸ்மாக் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.  தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் 30 ஆயிரம் ஊழியர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், தமிழக அரசின் அறிவிப்பின் படி மதுவிலக்கு கொள்கைக்கான கால அட்டவணை வெளியிட வேண்டும், டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். மதுவிலக்கு கொள்கையால் உருவாகும் உபரி பணியாளர்களுக்கு அரசின் பிற துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் பணிமூப்பு அடிப்படையில் மாற்றுப்பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏராளமான டாஸ்மாக் ஊழியர்கள் இந்த காத்திருப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கைகளில் பேனர்களை ஏந்தி கோஷங்களை எழுப்பினர். ஏற்கனவே, போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்திருந்தது. அதையும் மீறி நேற்று காலை காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து ஊழியர்களின் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை அழைப்பதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் நிர்வாகம் தரப்பில் இருந்து சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது.
 
போராட்டம் குறித்து டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொது செயலாளர் தனசேகரன் கூறியதாவது: ெதாடர்ந்து காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். போராட்டத்தை கைவிடும்படி போலீசார் தரப்பில் இருந்து எங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. முதல்வர் அலுவலகத்தில் இருந்து எங்கள் கோரிக்கை குறித்து பேச, உரிய அழைப்பு வந்தால் மட்டுமே காத்திருப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவோம். ெதாடர்ந்து அரசு அலுவலர்கள் பலரையும் சந்தித்து வருகிறோம் என்றார். டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். நேற்று இரவு  9 மணிவரை போராட்டம் நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 400 ஊழியர்களை போலீசார் கைது செய்து சிந்தாதிரிபேட்டை சமூக நலக்கூடத்தில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Taskmak , Prohibition, Taskmak employees, arrested
× RELATED மூலைக்கரைப்பட்டி அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.69 ஆயிரம் பறிப்பு