×

சென்னையின் பிரதான சாலைகளில் ‘மரண’ பள்ளம் ‘டூ வீலர்’ ஓட்டும் பலருக்கு எலும்பு முறிவு

* 2018ம் ஆண்டில் 6,928 விபத்துக்கள்  
* 1,198 பேர் இறந்தும் மாநகராட்சி ‘கொர்’

சென்னை: சென்னையின் முக்கிய சாலைகளில் ‘மரண’ பள்ளம் பல மாதங்களாக கண்டுகொள்ளாமல் இருப்பதால், அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. கடந்த, 2018ம் ஆண்டு மட்டும் 6,928 விபத்துக்கள் நடந்துள்ள  நிலையில், 1,198 பேர் இறந்துள்ளனர். தொடர்ந்து பல டூ வீலர் ஓட்டிகள் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்படுகிறது. ஆனால் இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல்  இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டி  வருகின்றனர். நாட்டில்  பொருளாதாரம் வளர்ந்து வருவதாலும், வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதாலும்,  கிராமங்கள் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து, பலர் வேலை தேடியும், தொழில்  ரீதியாகவும் சென்னை போன்ற நகரங்களுக்கு  குடியேறி வருகின்றனர். இதனால் சென்னையில் மக்கள் தொகை வளர்ந்து வருவதுபோல, வாகனங்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள்  வளர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு சென்னையில் மட்டும் 6,928 விபத்துக்கள் நடந்துள்ளன. அதில் 1,198 பேர் இறந்திருக்கிறார்கள். இன்னும் பல வாகன ஓட்டிகள் லேசான விபத்தை சந்தித்து கை, கால் முறிவை சந்திக்கிறார்கள். இதுபோன்று அடிக்கடி  நடந்ேதறும் விபத்துகளுக்கு குடிபோதை,  வேகமாக ஓட்டுதல், செல்போன் பேச்ச, கவணகுறைவாக ஒட்டுதல் என பல்வேறு காரணங்கள்  கூறப்பட்டாலும், பல விபத்துக்களுக்கு ஒழுங்கற்ற சாலைகளே முக்கிய காரணமாக  இருப்பதாக பல்வேறு தரப்பினரும் தங்களது குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘காலையிலும், மாலையிலும் அவசர அவசரமாக கிளம்பி  பணிக்கோ, கல்லூரிகளுக்கோ செல்லும்போது, வாகன நெரிசலில் முன்னே செல்லும்  வாகனங்களின் போக்கில் பின்  தொடர்ந்து சென்றால் திடிரென சாலையின் நடுவே  எதேனும் ஒரு பெரிய ‘மரண’ பள்ளம் இருக்கிறது. மேலும் இதேபோல்  கழிவுநீர் கால்வாயின் மூடிகளும் சரியாக மூடப்படாமலும், அப்படி மூடியிருந்தால்  முழுவதும்  சிமெண்ட் பூசி பெரிய மேடு மாதிரி அமைத்து வைத்துள்ளனர். இதனால்  பஸ், லாரி, கார் போன்ற பெரிய வாகனங்களை பின் தொடர்ந்து வரும் இருச்சக்கர  வாகன ஓட்டிகளுக்கு, சாலையில் உள்ள மேடு தெரிவதில்லை.  அப்போது வேகமாக டூ வீலரை மேட்டில் ஏற்றும் போது விபத்து ஏற்படுகிறது. சாதாரன நாட்களில் இப்படி என்றால், மழைகாலத்தில் நிலைமை மோசமாக இருக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் நீர் தேங்கி விடுகிறது. அப்போது பள்ளம் இருப்பது தெரியாமல் வரும் வாகன  ஓட்டிகள், கடும் விபத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது. இதேபோல்  இந்த மாதிரியான திடீர் பள்ளங்களை பார்த்து கார் போன்ற வாகனங்கள் பிரேக்  அடிப்பதாலும், நின்று ஓரமாக செல்வதாலும் பின்னே வரும் வாகனங்கள் ஒன்றுடன்  ஒன்று மோதி பயங்கரமான விபத்துகள்  ஏற்படுகின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பிறகு சம்மந்தப்பட்ட பகுதியில் பணியில் ஈடுபட்டிருக்கும் போக்குவரத்து போலீசார், அவர்களிடத்தில் வந்து சமாதானம் செய்ய வேண்டிய நிலையும்  உள்ளது’’ என்றனர்.  

ஆமை வேகத்தில் கட்டுமான பணிகள்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘சென்னையில் வாகனம் ஓட்டுவோர், எங்கெங்கு பள்ளம் உள்ளது என்பதை அறிந்து  சாதுர்யமாக வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். புதிதாக சாலைகளில் பயணம்  செய்பவர்கள்  தான் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். குறிப்பாக சொல்ல  வேண்டும் என்றால், சென்னையில் அடையாறு பாலம், நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகம் அருகே, சேத்பட்டு, எம்.ஆர்.சி நகர் குடிநீர்  வாரியம் அருகே,  அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், தி.நகர், கே.கே.நகர், கோடம்பாக்கம் போன்ற பகுதிகளில் பெரும்பாலன சாலைகளில் திடீர்  பள்ளங்களும், டிரைனெஜ் மேடுகளும் அதிகமாக உள்ளது. இதனால் பெரும்பாலன வாகன   ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இதேபோல் பல இடங்களில் மாநகராட்சி மேற்கொள்ளும் கட்டுமான பணிகளும் ‘ஆமை’ வேகத்தில் நடைபோடுவதால் போக்குவரத்து நெரிசலும், வாகன விபத்துக்களும் ஏற்படுகிறது. இதனை மாநகராட்சி   கண்டுகொள்வதில்லை. முதல்வர், அமைச்சர்கள் போன்றவர்கள் பயணம் செய்யும்  ஒருசில சாலைகளை மட்டும் பாதுகாப்பாக பார்த்துக்கொள்கின்றனர். அங்கு லேசான குழி இருந்தால்கூட, உடனடியாக சீரமைக்கப்படுகிறது’’  என்றனர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : many ,death ,roads ,Chennai , 'Death', main roads, Chennai
× RELATED ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை: வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழப்பு