×

புதிய எஸ்.பியாக மகேஸ்வரன் நியமனம் : தஞ்சை எஸ்.பி. திடீர் மாற்றம் ஏன்?

தஞ்சை : தஞ்சை எஸ்.பி. செந்தில்குமார் அதிரடியாக சிறப்பு காவல்படைக்கு மாற்றப்பட்டார். அமைச்சருக்கு நெருக்கமான எஸ்.பி. மாற்றத்திற்கான காரணம் குறித்து பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளது. தஞ்சை எஸ்.பி உள்பட 13 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். தஞ்சை எஸ்.பி. ெசந்தில்குமார், ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 11வது பட்டாலியன் கமாண்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 11வது பட்டாலியன் கமாண்டராக பணியாற்றி வந்த மகேஸ்வரன் தஞ்சை எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தருமபுரி எஸ்.பி. பண்டி கங்காதர், கிருஷ்ணகிரி எஸ்.பியாக மாற்றப்பட்டார். கிருஷ்ணகிரி எஸ்.பி. மகேஸ்குமார், தருமபுரி எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் எஸ்.பி. ஜார்ஜி ஜார்ஜ், சென்னை மாநகர போக்குவரத்து காவல் பிரிவின் துணை ஆணையராக (மேற்கு) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன்படி சென்னை போக்குவரத்து காவல் பிரிவில் துணை ஆணையராக (மேற்கு ) பணியாற்றி வந்த தீபா கனிகர், சேலம் மாவட்ட எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தவிர மற்றவர்கள் சென்னை மாநகரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் அறிவிப்பு மார்ச் 2வது வாரம் வெளியாகும். அதன் பிறகு அதிகாரிகளை மாற்ற முடியாது என்பதால் இப்போதே அரசு தனக்கு வேண்டிய அதிகாரிகளை முக்கிய இடங்களில் பணியமர்த்தும் நடவடிக்கை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

அமைச்சருக்கு வேண்டியவர்

தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை, எஸ்.பி. செந்தில்குமார் ஆகிய இருவரும் தஞ்சை மாவட்ட அமைச்சரான துரைக்கண்ணுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.  தனியாக இவர்கள் மூவரும் சந்திக்கும்போது அமைச்சர், அதிகாரிகள் என்ற அளவில் இல்லாமல் உறவுமுறையில் பேசும் அளவுக்கு நெருக்கமானவர்கள். அப்படி இருக்கும்போது ஏன் திடீரென எஸ்.பி. மாற்றம் செய்யப்பட்டார் என விசாரித்தபோது பல பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளது. அமைச்சருடன் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி எஸ்.பி.செந்தில்குமார் தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை உயர் அதிகாரிகள் கண்டித்தபோதும், அமைச்சரின் நெருக்கத்தின் மூலமாக உயர் அதிகாரிகளை கண்டுகொள்ளவில்லையாம். மேலும், அமைச்சருக்கே அரசியல் சீனியரான மாஜி அமைச்சர் ஒருவரின் சிபாரிசுகளையும் இவர் கண்டுகொள்ளாமல் உதாசினப்படுத்தி செயல்பட்டாராம். எனவே, அந்த சீனியர் தான் மேலிடத்தில் சொல்லி இந்த மாற்றத்தை ஏற்படுத்தினார் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் செந்தில்குமார் சிறப்பு காவல்படைக்கு சென்று அங்கிருந்து வேறு ஒரு மாவட்டத்திற்கு சென்று விடுவார். தேர்தலுக்கு முன் அவர்வேறு ஒரு மாவட்டத்தில் பொறுப்பு வாங்கி விடுவார், அதற்கான உத்தரவாதத்தை நெருக்கமான அமைச்சர் கொடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

பெருவுடையார் வேலை

தஞ்சை பெரியகோயிலுக்கு சென்றவர்களின் பதவி பறிபோய்விடும் என்பது காலம் காலமாக இந்த பகுதி மக்களிடம் உள்ள ஒரு நம்பிக்கை. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தஞ்சை பெரியகோயிலில் நடந்த சதயவிழாவில் கலந்து கொண்டு பேசிய எஸ்.பி. செந்தில்குமார், ‘‘பெரியகோயிலுக்கு வந்தால் பதவி போய்விடும் என்பது மூடநம்பிக்கை. நான் வேலையில்லாமல் இருந்தபோது இந்த கோயிலுக்கு வந்து வேண்டிய பின்னர் தான் தேர்வில் வெற்றிபெற்று ஐபிஎஸ் ஆனேன். இப்போது தஞ்சைக்கே எஸ்.பியாகி உள்ளேன்’’ என்றார். அவர் பேசிய சில மாதங்களில் அவர் அதிகாரம் இல்லாத சிறப்பு காவல்படைக்கு மாற்றப்பட்டு விட்டார். எல்லாம் பெருவுடையாரின் விளையாட்டுத்தான் என்றும் காவல்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maheswaran ,change ,SP ,Tanjai SB , Maheswaran appointed as new SP, thanjavur Sp Why sudden change?
× RELATED நோயாளிகளுக்கு ஒரே ஊசி பயன்படுத்திய விவகாரம் : இணை இயக்குனர் விசாரணை!!