×

வரலாற்றில் முதல் முறையாக சவரன் ரூ.24,472ஐ எட்டியது: இன்னும் அதிகரிக்க வாய்ப்பு

சென்னை: தங்கம் விலை வரலாற்றில் முதல் முறையாக சவரன் நேற்று ₹24,472 என்ற  புதிய உச்சத்தை தொட்டது. இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நகை  வியாபாரிகள் கூறியுள்ளனர். தங்கம் விலையில் கடந்த டிசம்பர் மாதம்  ஏற்றம், இறக்கம் நிலை காணப்பட்டு வந்தது. அதன் பிறகு ஆங்கில புத்தாண்டில்  ஒரு சவரன் தங்கம் ₹24,168 என்ற அளவில் விற்கப்பட்டது. மறுநாள் 2ம் தேதி  தங்கம் விலை சவரனுக்கு ₹144 உயர்ந்து, ஒரு சவரன் ₹24,312க்கு  விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை தங்கம் விலை அதிரடியாக  உயர்ந்தது. அதாவது கிராமுக்கு ₹20 அதிகரித்து ஒரு கிராம் ₹3059க்கும்,  சவரன் ₹160 அதிகரித்து ஒரு சவரன் 24 ஆயிரத்து 472க்கும் விற்கப்பட்டது.  இந்த விலை என்பது தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சமாகும். இதற்கு முன்னர்  இந்த அளவுக்கு உயர்ந்தது இல்லை. காலையில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த  தங்கம் விலை மாலையில் சற்று சரிவை சந்தித்தது. அதாவது, ஒரு சவரன்  ₹24,416(கிராம் ₹3052) என்ற அளவில் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக கடந்த 3  நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹248 அளவுக்கு உயர்ந்துள்ளது.  இந்த மாதத்தில் பொங்கல் உள்ளிட்ட பல்வேறு விஷேச தினங்கள் அதிக அளவில்  வருகிறது. இந்த நிலையில் மேலும் தங்கம் விலை உயரும் என்று வியாபாரிகள்  கூறியுள்ளனர்.

 இது குறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது:சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து  வருகிறது. அது மட்டுமல்லாமல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்சியை சந்தித்து வருகிறது. இது போன்ற காரணங்களால்  தங்கம் விலை உயர்ந்து வருகிறது.  அதாவது, சவரன் ₹25 ஆயிரத்தை தாண்டவும்  வாய்ப்புள்ளது. மேலும் நேற்று தங்கம் விலை கிராம் ₹3059, சவரன் ₹24,472  என்பது ஒரு புதிய உச்சமாகும். . கடந்த 2018ம் ஆண்டு அக்டோர் 15ம் தேதி ஒரு  கிராம் ₹3,058 என்பது தான் தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சமாக இருந்தது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Savaren , first time,history, Savaren reached,Rs. 24,472, chance to increase even more
× RELATED கடை மற்றும் வீடுகளின் பூட்டை உடைத்து 14 சவரன், 32 ஆயிரம், 70 செல்போன் கொள்ளை