×

ஓசூர் அருகே முகாமிட்டிருந்த யானை கூட்டம் விரட்டியடிப்பு : வனத்துறை தொடர்ந்து கண்காணிப்பு

ஓசூர்: ஓசூர் அருகே முகாமிட்டிருந்த யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர். மேலும், தொடர்ந்து கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே போடூர் வனப்பகுதியில் 40 யானைகள் முகாமிட்டவாறு அட்டகாசம் செய்து வந்தன. இந்த யானைகள் அருகில் உள்ள போடூர், ராமபுரம், ஆலியாளம், பண்ணப்பள்ளி, குக்கலப்பள்ளி, பிள்ளைக்கொத்தூர், காமன்தொட்டி உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்து அங்குள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இந்த காட்டு யானைகளை கர்நாடகா வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, நேற்று 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். பின்னர், காட்டு யானைகளை விரட்டும் பணியை துவக்கினர். போடூர் வனப்பகுதியிலிருந்த 40 யானைகளை ஒன்று சேர்த்து பட்டாசு வெடித்து சானமாவு, சினிகிரிப்பள்ளி, பென்னிக்கல், அனுசோனைக்கு கொண்டு சென்றனர்.  பின்னர், அங்கு முகாமிட்டவாறு செல்ல மறுத்த யானைகளுக்கு பட்டாசு வெடித்து நெருக்கடி கொடுத்தனர். தொடர்ந்து 10 மணி நேரத்திற்கும் மேலாக பட்டாசுகளை வெடித்ததில் மிரண்டுபோன யானைகள், பேவநத்தம் வனப்பகுதிக்கு ஓட்டம் பிடித்தன.

இதுகுறித்த தகவலின்பேரில், அப்பகுதியைச் சேர்ந்த வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியபோது, யானைகள் அனைத்தும் வட்டவடிவ பாறை என்னுமிடத்தில் தஞ்சமடைந்திருப்பது தெரிய வந்தது. அங்கு, ஏற்கனவே 10 யானைகள் முகாமிட்டிருந்த நிலையில், அதனுடன் 40 யானைகளும் சேர்த்து மொத்தம் 50 யானைகள் உள்ளதால் வனத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அங்கிருந்து யானைகளை ஒன்று சேர்த்து கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்டும் வகையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Elephant camp ,Hoshiarai ,Hosur , Hosur, elephant, forest
× RELATED பறிமுதலான வாகனங்கள் ₹25 லட்சத்திற்கு ஏலம்