×

ராமநாதபுரம் அருகே கோயிலில் காவலாளியை தாக்கி புகுந்து பச்சை மரகத நடராஜர் சிலையை திருட முயற்சி: அலாரம் ஒலித்ததால் கொள்ளையர் ஓட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கோயிலில் பலகோடி மதிப்புள்ள சிலையை திருட முயன்றபோது அலாரம் ஒலித்ததால், கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கை கிராமத்தில், மங்களநாத சுவாமி கோயில் விஷேசமானது. இங்கு எழுந்தருளியுள்ள ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ பச்சை மரகத  நடராஜர் சிலை, ஒலி அதிர்வுகளால் பாதிக்காத வண்ணம் பாதுகாக்க ஆண்டு முழுவதும் சிலை மீது சந்தனக்காப்பு பூசப்பட்டிருக்கும். வருடத்தில் ஒருநாள் ஆருத்ரா தரிசனத்தையொட்டி  சந்தனகாப்பு களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும். இந்த பச்சை மரகத நடராஜர் சிலை பல கோடி ரூபாய் மதிப்புள்ளது.இந்தக் கோயிலில், இரவு காவலாளிகளாக செல்லமுத்து (60) மற்றும் சிலர் இருந்துள்ளனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் கோயிலுக்குள் மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். அ்ங்கு  பிரகாரத்தில் இருந்த அலாரத்தின் வயரை துண்டித்தனர். காவலுக்கு இருந்த செல்லமுத்துவை கம்பியால் தலையில் அடித்ததில், ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கினார். இதையடுத்து, மரகத  நடராஜர் சன்னதி கதவை உடைத்து சிலையை திருட முயற்சித்துள்ளனர். கதவை தொட்டவுடன் அங்கிருந்த மற்றொரு எச்சரிக்கை அலாரம் அடித்ததால், அச்சமடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

தொடர் அலாரச் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், காயமடைந்த காவலாளி செல்லமுத்துவை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்  பேரில் சம்பவ இடம் வந்த டிஎஸ்பி முருகேசன்  தலைமையில் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கோயிலை சுற்றிலும் சோதனை நடத்தப்பட்டது.டிஎஸ்பி முருகேசன் கூறுகையில், ‘‘கொள்ளையர்கள் கோயிலின் பின்புறமாக உள்ளே நுழைந்து காவலாளியை கம்பியால் தாக்கியுள்ளனர். எஸ்ஐ மாரிச்சாமி தலைமையில் தனிப்படை  அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சரியான நேரத்தில் அலாரம் மணி அடித்ததால் பல கோடி மதிப்புள்ள இந்த மரகத நடராஜர் சிலை தப்பியது. கோயிலில் உள்ள சிசிடிவி  கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடைபெறும்,’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : temple ,Emerald Natarajar ,Ramanathapuram , ,Emerald Natarajar,templ,Ramanathapuram,temple: pirate run by the alarm
× RELATED ரூ.1 கோடி தங்க நகைகள் மாயம் எதிரொலி...