×

பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை குற்றவாளிகள் கேரளா ஓட்டமா?

நெல்லை: நெல்லை பாளையங்கோட்டை மூன்றடைப்பு அருகே வாகைக்குளத்தை சேர்ந்த பசுபதிபாண்டியன் ஆதரவாளர் தீபக்ராஜன் (32) என்பவர் காதலி செல்வியுடன் (28) நேற்று முன்தினம் பாளை. கேடிசி நகர் ரவுன்டானா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட வந்தபோது மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். தீபக்ராஜன் மீது கொலை வழக்குகள் உள்பட மொத்தம் 23 வழக்குகள் உள்ளன. கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 10க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை ஆராய்ந்தபோது, கொலையாளிகள் சென்ற கார் நெல்லை மாவட்டத்தின் ஒரு குறிப்பிட்ட கிராம எல்கைக்கு பின்னர் காணவில்லை என்பது தெரிய வந்தது. அப்பகுதியில் இருந்து கொலையாளிகள் காரை மாற்றிக் கொண்டு கேரளாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.

இதற்கிடையே தீபக்ராஜனின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த பிப்ரவரி 28ம்தேதி தூத்துக்குடி கோர்ட்டில் இருந்து போக்சோ வழக்கில் பக்கபட்டியை சேர்ந்த வடிவேல் முருகன் (27) என்பவர் விடுதலையானார். அவர் நண்பர்களுடன் பைக்கில் ஊர் திரும்பி கொண்டிருந்த போது வாகைகுளம் அருகே முன் விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளுக்கு தீபக்ராஜா உதவி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பழிக்குப் பழியாக வடிவேல்முருகனின் நண்பர்கள் அவரை கொன்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக நெல்லை பகுதியை சேர்ந்த சுரேஷ், நவீன், சரவணன் உள்ளிட்ட 6 பேரை பாளை. போலீசார் தேடி வருகின்றனர்.

The post பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை குற்றவாளிகள் கேரளா ஓட்டமா? appeared first on Dinakaran.

Tags : Pashupati Pandian ,Kerala ,Nellai ,Deepakarajan ,Pashupatipandian ,Vagaikkulam ,Nellai Palayangottai ,Palai ,KDC Nagar Roundabout ,
× RELATED பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை 7...