×

விழுப்புரம் அருகே பயங்கரம் இருளர் குடியிருப்பில் நகைக்காக மூதாட்டி கழுத்தறுத்து படுகொலை

*டிஐஜி, எஸ்.பி. நேரில் விசாரணை

விழுப்புரம் : விழுப்புரம் அருகே இருளர் குடியிருப்பில் நகைக்காக மூதாட்டி கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே அனிச்சம்பாளையம் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரின் 2வது மனைவி சகுந்தலா (60). இவர்களுக்கு ஜெயலட்சுமி, முருகன் என்ற மகள், மகன் உள்ளனர். கணவர் உயிரிழந்த நிலையில் சகுந்தலா மட்டும் அந்த குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். மகன், மகள் இருவரும் வெளியூரில் திருமணமாகி வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முருகன் தனது தாய் சகுந்தலாவை பார்க்க சென்றபோது அவர் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அவர் அணிந்திருந்த 2 அரை பவுன் நகையும் திருடு போயிருந்தது. இதுகுறித்து உடனடியாக வளவனூர் காவல் நிலையத்துக்கு புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு டிஐஜி திஷாமிட்டல், எஸ்.பி. தீபக் சிவாச் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து உயிரிழந்த சகுந்தலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மகன் முருகனிடம் போலீசார் விசாரித்த போது, நான் கட்டிட வேலை செய்து வருகிறேன்.

உடன்பிறந்த சகோதரி ஜெயலட்சுமியின் மகள் செல்வியை திருமணம் செய்து கொண்டு 3 பிள்ளைகள் உள்ளனர். தற்போது எம்.குச்சிபாளையத்தில் வசித்து வருகிறேன். இந்நிலையில் எனது மனைவி குடும்ப பிரச்னையால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சண்டை போட்டுக் விட்டு ஜெயலட்சுமியின் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் எனது தாய் சகுந்தலா என்னை போனில் தொடர்பு கொண்டு மகள் ஜெயலட்சுமி வீட்டுக்கு செல்ல வேண்டும், பணம் தருமாறு கேட்டார். அதன்படி நேற்று காலை சென்ற போது கழுத்தறுக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்துக்கு புகார்அளித்ததாக தெரிவித்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், சகுந்தலா தனியாக வசித்து வருவதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த நகைக்காக கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு தப்பியோடியிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனையிட்ட போது அவரது வீட்டிலிருந்து கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வணிக வளாகம் வரை சென்று நின்றது.
இதனிடையே சகுந்தலா குடும்பத்தில் சொத்து பிரச்னை காரணமாகவும் கடந்த சில மாதங்களாக தகராறு இருந்து வந்த நிலையில் மகனிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே நகைக்காக மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாயை கொன்று விட்டு நாடகமாடுகிறாரா மகன்…

விழுப்புரம் அருகே இருளர் குடியிருப்பில் மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது மகன் முருகன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவி, பிள்ளைகளுடன் சண்டை போட்டு சகோதரி வீட்டுக்கு அனுப்பி வைத்த நிலையில், சகுந்தலாவுக்கு சொந்தமான சொத்தை மகள் பெயரில் எழுதி வைக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சொத்து பிரச்னையில் தாயை கொலை செய்து விட்டு, நகையை அபகரித்து கொண்டு நாடகமாடுகிறாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் முழுமையான விசாரணைக்கு பிறகுதான் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post விழுப்புரம் அருகே பயங்கரம் இருளர் குடியிருப்பில் நகைக்காக மூதாட்டி கழுத்தறுத்து படுகொலை appeared first on Dinakaran.

Tags : Payangaram Irular ,Villupuram ,DIG ,S.B. ,Anichampalayam Irular ,Shakuntala ,
× RELATED விழுப்புரம் மொரட்டாண்டி...