சென்னை: சங்க சட்ட விதிகளை மீறி ஆண்டுக்கணக்குகளை தாக்கல் செய்யாத சார்பதிவாளர் சங்கத்தின் பதிவை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சங்கங்கள் உள்ளன. இதில், 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சங்கங்கள் செயல்படாமல் உள்ளன. இந்த சங்கங்கள் ஆண்டுக்கணக்கை முறையாக தாக்கல் செய்வதில்லை. மாறாக சங்கங்களின் பெயரை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும் புகார் உள்ளது. இதை தொடர்ந்து சங்க கணக்கை தாக்கல் செய்யாத சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க பதிவுத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, தமிழக பதிவுத்துறையில் பணிபுரிந்து வரும் சார்பதிவாளர்களுக்கென்று தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சங்கத்தில் 500க்கும் மேற்பட்ட சார்பதிவாளர்கள் உறுப்பினராக உள்ளனர். ஆனால், தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்தின் சார்பில் தற்போது வரை தேர்தல் நடத்தப்படவில்லை. அதே போன்று சங்கத்தின் கணக்குகளும் தாக்கல் செய்யப்படவில்லை.
மேலும், சங்க சட்ட விதிகள் முறையாக பின்பற்றப்படவில்ைல என்று கூறப்படுகிறது. இதையடுத்து பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் பட்டியலிருந்து நீக்கிட முடிவு செய்துள்ளது. இது குறித்து பதிவுத்துறை தலைவர் அலுவலகம் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தங்களிடம் இருந்து உரிய காலத்திற்குள் அறிக்கை பெறப்படாவிடின் சங்கம் செயல்படாத சங்கங்களாக கருதப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் பட்டியலில் இருந்து நீக்கிட பரிந்துரைக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து சார்பதிவாளர் சங்கத்தினர் கூறும் போது, சார்பதிவாளர் சங்கத்தில் ஆண்டுக்கு ஒரு முறை கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். சங்க தேர்தல் நடத்த வேண்டும். ஆனால், சில நிர்வாகிகள் பதவியை தக்க வைத்து கொள்ள தேர்தல் நடத்த மறுக்கின்றனர். பொதுக்குழுவை தற்போது வரை கூட்டவில்லை. இதனால், தான் சங்க சட்ட விதிகளை மீறியதாக ஐஜி அலுவலகம் கடிதம் எழுதியுள்ளது. இதை தொடர்ந்து சங்கத்தை மீட்டெடுக்கும் வகையில் நாங்களே சங்க பொதுக்குழு கூட்டத்தை கூட்டவுள்ளோம்’ என்றனர்.
வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!
