×

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இளம் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுக்கும் கும்பல்

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சூரியன் உதயம் மற்றும் அஸ்தமனத்தை பார்க்கவும், முக்கடல் சங்கமத்தில் புனித நீராடவும் தமிழ்நாடு, கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகளும், பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். தற்போது கன்னியாகுமரியில் சம்மர் சீசன் தொடங்கியுள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதில் பெரும்பாலும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தங்கள் குடும்பத்துடன் அதிகளவில் வருகின்றனர். இவர்கள் இங்குள்ள முக்கிய இடங்களை பார்த்துவிட்டு முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் போடுகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும், வடமாநில சுற்றுலா பயணிகளும் சுற்றுலாத்தலம் என்பதால் டீசர்ட் போன்ற சாதாரண உடை அணிந்து வருவது வழக்கம். அவர்கள் அந்த உடையிலேயே கடலில் இறங்கி குளிக்கின்றனர். சிலர் நீச்சல் உடையில் குளிக்கின்றனர். இவ்வாறு இளம் பெண்கள் குளிப்பதை ஆபாசமாக வீடியோ எடுக்கும் கும்பல் கன்னியாகுமரியில் ஊடுருவி உள்ளது.

இந்த கும்பல் மாணவிகள், இளம் பெண்கள் வருவதை கண்காணித்து அவர்களை பின்தொடர்ந்து வருகின்றனர். பின்னர் அவர்கள் கடலில் இறங்கி குளிக்கும் போது மறைவாக நின்று பல்வேறு கோணங்களில் ஆபாசமாக வீடியோ எடுக்கின்றனர். பின்னர் அந்த வீடியோவை வலை தளங்களில் பதிவேற்றம் செய்துவிடுகின்றனர். சமீபகாலமாக முக்கடல் சங்கமத்தில் இளம் பெண்கள் குளிக்கும் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருவது சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக முக்கடல் சங்கமத்தில் குளிக்கும் இளம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. எனவே கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. முக்கடல் சங்கமம் கடற்கரையில் குறைந்தபட்சம் சப் இஸ்பெக்டர் நிலை அதிகாரி தலைமையில் பெண் போலீசார் அதிகளவில் நிறுத்தப்பட்டு பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும் சமூக வலைதளங்களில் பரவிவரும் இளம் பெண்கள் குளிக்கும் வீடியோவை உடனடியாக நீக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags :
× RELATED 10ம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை: வாலிபர் கைது