- ரமேஷ் ஜர்கிஹோலி
- காங்கிரஸ்
- பெங்களூரு
- முன்னாள் அமைச்சர்
- விசேட புலனாய்வுப் படை
- ரமேஷ் ஜர்கிஹோலி
- பாஜ்
- தின மலர்
பெங்களூரு: ஆபாச சிடி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ரமேஷ்ஜார்கிஹோளி சிறப்பு புலனாய்வு படை முன்பு ஆஜராகி அளித்த வாக்குமூலத்தில் ஒரு கும்பல் ரூ.100 கோடி கேட்டு தன்னை மிரட்டியதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து இவ்வழக்கில் 7 பேர் கைதாகியுள்ளதாக சிறப்பு புலனாய்வு குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். மேலும் காங்கிரஸ் பிரமுகர்களுக்கு இதில் தொடர்புள்ளதாக பாஜ குற்றம்சாட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக நீர்ப்பாசனத்துறை முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி இளம்பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த ஆபாச சி.டி மீடியாக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். சட்டரீதியாக இந்த விவகாரத்தை எதிர்கொள்வேன் என்று கூறி, 10 நாட்கள் தலைமறைவிற்கு பின்னர், மீடியா முன்பு தோன்றிய அவர், என்னை மிரட்டி பணம் பறிக்கவேண்டுமென்ற நோக்கில் சிலர் போலியான ஆபாச சி.டியை தயாரித்துள்ளனர் என்று குற்றம் சாட்டினார். இவரது இந்த பேட்டியை தொடர்ந்து சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி தனது புகாரை திரும்பபெற்றார். இதையடுத்து சி.டி வழக்கு விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது. அமைச்சர்கள் மற்றும் ரமேஷ் ஜார்கிஹோளி தரப்பில் சி.டி விவகாரத்தை சி.பி.ஐக்கு ஒப்படைக்கவேண்டுமென்று மாநில அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதை உள்துறை அமைச்சர் ஏற்றதும், கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் பதிவாகியிருந்த வழக்கு எஸ்.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. அவர்கள் சி.டியை யார் வெளியிட்டது. எப்படி வெளியானது. யார் யார் இந்த சி.டியை தயாரிக்க காரணம். அரசியல் பின்புலம் உள்ளதா, பணம் கேட்டு மிரட்டினார்களா, அரசியல் பழிவாங்கும் செயலா என்று பல்வேறு கோணத்தில் விசாரித்தனர். அப்போது போலீசாருக்கு 80க்கும் அதிகமான சி.சி.டி.வி ஆதாரங்கள் கிடைத்தது. அதை வைத்து சி.டியை சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளியிடம் கொடுத்தவர் சி.டியை எப்படி தயாரித்தார் என்ற விவரங்களை சேகரித்த எஸ்.ஐ.டி முதலில் சந்தேகத்தின் பேரில் 7 பேரை பிடித்து விசாரித்தனர். அதே நேரம் ரமேஷ் ஜார்கிஹோளி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரும் எஸ்.ஐ.டி விசாரணைக்கு கூடுதல் பலம் சேர்த்தது. பிடிப்பட்டவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், தேவனஹள்ளியை அடுத்த விஜயநகர், கோவா, பெங்களூரு ஆர்.டிநகர், ஆந்திரா, ஐதராபாத், தமிழகம் உள்பட பல்வேறு இடங்களில் வைத்து, சி.டியை தயாரித்தது மற்றும் அதை வெளியிடுவது குறித்து திட்டம் தீட்டியதும் தெரியவந்துள்ளது. அதாவது வீடியோ எடுப்பதற்கு ஒருவர், அதை எடிட் செய்வதற்கு ஒருவர், குரல் கொடுப்பதற்கு ஒருவர், சி.டியை வெளியிடுவதாக பேரம் பேசுவதற்கு ஒருவர், மீடியாக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதற்கு ஒருவர் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதற்கிடையில் சி.டி வழக்கில் முக்கிய பிரமுகராக கருதப்படும், ரமேஷ்ஜார்கி ஹோளி 4 பக்கத்திற்கு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதாவது 4 மாதங்களுக்கு முன்பே இந்த சி.டி விவகாரம் எனக்கு தெரியும். சி.டியை வெளியிடப்போவதாக மிரட்டி ரூ.100 கோடி பணம் கேட்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்தால் மீடியாக்களில் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டினர். ஆனால் அந்த சி.டியில் இருப்பது நான் இல்லை என்பதால், அமைதியாக இருந்துவிட்டேன். நான் மிரட்டலுக்கு பயப்பட வில்லை என்றதும், அவர்கள் சி.டியை வெளியிட்டு, எனது அரசியல் வாழ்க்கை சீர்குலைத்துவிட்டனர். இது திட்டமிட்ட செயல், என்னுடன் நெருக்கமானவர்கள் மற்றும் எதிர்கட்சியினர் தயவுடன் இந்த சி.டியை வெளியிட்டுள்ளனர் என்பன உள்பட தகவல் அளித்துள்ளார். இதை வாக்குமூலமாக பெற்று கொண்ட எஸ்.ஐ.டி போலீசார், அடுத்த கட்டமாக இளம் பெண்ணை தேடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த பெண்ணின் இ-மெயிலில் போலீசார் நோட்டீஸ் நகலை அனுப்பியுள்ளனர். இந்நிலையில் நேற்று சந்தேகத்தின் பேரில் கைதான முதல் 7 பேரின் பெயர் விவரங்களை எஸ்.ஐ.டி போலீசார் அதிகார பூர்வமாக மீடியாக்களில் வெளியிட்டுள்ளனர். அதன்படி கைதானவர்கள், ரமேஷ் கவுடா, ஸ்ரவன், பவதி, பீதரை சேர்ந்த ஆகாஷ் தளவாடு, தொட்டப்பள்ளாபுராவை சேர்ந்த லட்சுமி பதி, கோலார் சேத்தன், ராம்நகரை சேர்ந்த பெண் ஆசிரியை என்று தெரியவந்துள்ளது. இவர்கள் வீடியோ தயாரிப்பதற்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் பெங்களூரு எஸ்.பி ரோடு பகுதியில் ரூ.1.54 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளனர். ஆந்திரா, தமிழகம், கோவாவில் இருந்து சி.டி தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கு துமகூருவை சேர்ந்த பத்திரிகையாளர், தேவனஹள்ளியை சேர்ந்த இணையதள ஹேக்கர் ஒருவர், இந்த கும்பலுக்கு உதவி செய்துள்ளனர். தற்போது அவர்கள் தலைமறைவாக இருப்பதால், ஹேக்கரின் மனைவிக்கு எஸ்.ஐ.டி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கிடையில் பிடிபட்ட சிக்கமகளூரு வாலிபர்களில் ஒருவர் வாய்ஸ் டப் செய்துள்ளார் என்பது எப்.எஸ்.எல் அறிக்கையில் வெளியாகியுள்ளது. பெண் ஆசிரியைதான், இளம் பெண்ணை கோவாவில் அறை எடுத்து தங்க வைத்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இது தவிர மேலும் சிலர் ஐதராபாத், தமிழகம், ஆந்திராவில் தலைமறைவாக இருப்பதாக எஸ்.ஐ.டி தரப்பில் கூறப்படுகிறது. அவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்த சி.டி விவகாரத்தில் காங்கிரசை சேர்ந்த டி.கே சிவகுமார், எம்எல்ஏ லட்சுமி ஹெம்பால்கருக்கு தொடர்பு இருப்பதாக பாஜவை சேர்ந்தவர்கள் டுவிட்டர் வாயிலாக குற்றம் சாட்டி வருவதால் அரசியல் வட்டாரத்தில் இந்த சி.டி வழக்கு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது….
The post இளம்பெண்ணுடனான ஆபாச சி.டி வழக்கு: ரூ.100 கோடி கேட்டு ரமேஷ்ஜார்கிஹோளிக்கு மிரட்டல்?…காங்கிரஸ் பிரமுகர்களுக்கு தொடர்புள்ளதாக பாஜ குற்றச்சாட்டு appeared first on Dinakaran.
