×

இரண்டாவது திருமணத்திற்கு ஆதாரமில்லை என்பதால் 73 வயது முதியவர் ‘லிவ்-இன்’ உறவில் இருப்பது குற்றமில்லை: 66 வயது மூதாட்டி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

 

மைசூரு: திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வது குற்றமாகாது எனக்கூறி 73 வயது முதியவர் மீதான வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கர்நாடகா மாநிலம் மைசூரு பகுதியைச் சேர்ந்த 66 வயது பெண் ஒருவர், தனது 73 வயது கணவர் மற்றொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதாகவும், இதற்கு தனது மகன்கள் உடந்தையாக இருப்பதாகவும் கூறி கீழமை நீதிமன்றத்தில் புகார் ஒன்றை தாக்கல் செய்திருந்தார். தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால், அவர் மீது இருதார திருமண சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் கோரியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், இதனை எதிர்த்து முதியவர் தரப்பில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.நடராஜ் தனது தீர்ப்பில், ‘ஒரு ஆண் மற்றும் பெண் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக இணைந்து வாழ்வதை (லிவ்-இன் ரிலேஷன்ஷிப்) முறையான திருமணமாக கருத முடியாது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 494-ன் கீழ் இருதார திருமண குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டுமானால், இரண்டாவது திருமணம் நடந்ததற்கான சரியான ஆதாரங்கள், சடங்குகள், தேதி மற்றும் இடம் குறித்த தகவல்கள் இருக்க வேண்டும்.

வெறும் தகாத உறவு அல்லது இணைந்து வாழ்வதை மட்டும் வைத்துக்கொண்டு அதனை இரண்டாவது திருமணம் என்று கூற முடியாது. இந்த விவகாரத்தில் புகார் அளித்த மனைவி, தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்ததற்கான எந்த ஒரு வலுவான ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. மேலும், தந்தை மற்றொரு பெண்ணுடன் வாழ்வதை அமைதியாக வேடிக்கை பார்த்தார்கள் என்பதற்காக மகன்கள் மீது குற்றம் சுமத்த முடியாது.

சட்டப்படி குற்றம் செய்த கணவரை மட்டுமே இந்த பிரிவில் தண்டிக்க முடியும் என்பதால், அவருடன் தங்கியிருக்கும் பெண்ணையோ அல்லது உறவினர்களையோ இதில் சேர்க்க முடியாது. எனவே, முதியவர் மற்றும் அவரது மகன்கள் மீதான இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது’ தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Mysuru ,Karnataka High Court ,Mysuru, Karnataka ,
× RELATED மாநிலங்களவையில் ஓய்வுபெறும் எம்பிக்களுக்கு பிரியாவிடை: பிரதமர் மோடி உரை