ருத்ராபூர்: உத்தரகாண்ட் மாநில போலீசார். கல்வித்துறையில் நடைபெற்ற மிகப்பெரிய போலி புத்தக மோசடியை அதிரடியாக கண்டுபிடித்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூர் அடுத்த ஆனந்தம் ரிசார்ட் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு மினி டிரக்கை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் முறையான ஆவணங்கள் மற்றும் இ-வே பில் இல்லாததைக் கண்டு சந்தேகமடைந்த போலீசார், அதன் தொடர்ச்சியாக கீரத்பூர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான 10 லட்சம் போலி தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. டெல்லியில் இருந்து வந்த என்சிஇஆர்டி அதிகாரிகள் அந்த புத்தகங்களை ஆய்வு செய்தபோது, அவை போலியானவை என்பது உறுதி செய்யப்பட்டது. அசல் புத்தகங்களில் இருக்கும் ‘என்சிஇஆர்டி’ என்ற வாட்டர்மார்க்கிற்கு பதிலாக, இந்த புத்தகங்களில் ‘ஏசிஇஆர்டி’ என்று தவறாக அச்சிடப்பட்டிருந்தது.
மேலும் புத்தகத்தின் தரம், பைண்டிங் மற்றும் பிரிண்டிங் ஆகியவை மிகவும் தரம் குறைந்த நிலையில் இருந்தன. இந்த மோசடி தொடர்பாக மீரட்டைச் சேர்ந்த சந்தீப் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், ‘இந்த போலி புத்தகங்கள் மாணவர்களுக்கு சென்றடைவதற்கு முன்பே தடுத்து நிறுத்திவிட்டோம். இதன் பின்னணியில் உள்ள நபர்கள் மற்றும் அச்சகங்களை கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று தெரிவித்தனர்.
