×

கார் மீது தாக்குதல் நடத்தியவருக்கு சீட் தந்ததால் அசாம் காங்கிரஸ் எம்பி திடீர் ராஜினாமா: பாஜகவில் சேர விடுத்த அழைப்பால் திருப்பம்

 

கவுகாத்தி: அசாம் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் விலகியுள்ளார். கடந்தாண்டு அசாம் மாநிலம் நாகோன் தொகுதி காங்கிரஸ் எம்.பி பிரத்யுத் போர்டோலோய் சென்ற கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிப் முகமது நசார் என்பவருக்கு, தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் லகாரிகாட் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைமை மீண்டும் வாய்ப்பு வழங்கியது.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த பிரத்யுத் போர்டோலோய், நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சுமார் 30 ஆண்டுகளாக காங்கிரசில் பணியாற்றி உள்ளேன். ஆனால் கட்சிக்குள் என்னை ஒதுக்கிவிட்டார்கள். பலமுறை அவமதிக்கப்பட்டேன். எனது குறைகளை கட்சி தலைமை கண்டுகொள்ளவில்லை. என்னை அவமதித்தவர்களுக்கு மீண்டும் சீட் வழங்கியதால் மிகுந்த மனவேதனையுடன் எனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என்று தெரிவித்தார்.

மேலும், அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகாய் தன்னை ஓரங்கட்டியதாகவும், முக்கியமான கூட்டங்களில் தனக்கு ஆதரவாக செயல்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக, கடந்த பிப்ரவரியில் அசாம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் பூபேன் குமார் போரா அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரத்யுத் போர்டோலோய் விலகியுள்ள நிலையில், அவரை பாஜகவில் இணையுமாறு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் டிஸ்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, இவரது மகன் பிரதீக் போர்டோலோய் மார்கெரிட்டா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களம் காண்கிறார். அசாமில் வரும் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மொத்தம் உள்ள 3 காங்கிரஸ் எம்.பிக்களில் ஒருவர் விலகியது அக்கட்சிக்கு 100 சதவீதம் பின்னடைவாக கருதப்படுகிறது.

Tags : Assam ,Congress ,BJP ,Guwahati ,Congress party ,Assam assembly elections ,Pratyusha Bordoloi ,Nagaon ,
× RELATED மாநிலங்களவையில் ஓய்வுபெறும் எம்பிக்களுக்கு பிரியாவிடை: பிரதமர் மோடி உரை