×

சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் ரூ. 45.19 கோடியில் 379 சாலைகளை மேம்படுத்த முடிவு: மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்  சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது, சென்னையில் சிங்கார சென்னை 2.0, தமிழ்நாடு நகர்ப்புர சாலைகள் மேம்பாட்டு நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் சாலைகள் மேம்படுத்தப்படும் என அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி  மேயரின் ஆலோசனையின்படி, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக ரூ. 45.19 கோடி மதிப்பீட்டில் 233 உட்புற தார் சாலைகள், 34 பேருந்து தார் சாலைகள், 63 உட்புற சிமெண்ட் கான்கிரீட் சாலைகள், 2 சிமெண்ட் கான்கிரீட் பேருந்து சாலைகள், 47 இன்டர்லாக் பேவர் பிளாக் சாலைகள் என 379 சாலைகளை மேம்படுத்தப்பட உள்ளன. அதன் விவரம்:உட்புற தார் சாலைகள்: திருவொற்றியூர், மணலி, ராயபுரம், வளசரவாக்கம், அடையாறு மற்றும் பெருங்குடி ஆகிய மண்டலங்களில் ரூ. 19.51 கோடி மதிப்பீட்டில் 233 உட்புற தார் சாலைகள் மேம்படுத்த 20 சிப்பங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. பேருந்து தார் சாலைகள் மாதவரம், தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை,  கோடம்பாக்கம், அடையாறு மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் ரூ. 17.35 கோடி மதிப்பீட்டில் 34 பேருந்து சாலைகளை தார் சாலைகளாக அமைக்க 13 சிப்பங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.உட்புற சிமெண்ட் கான்கிரீட் சாலைகள்: திருவொற்றியூர், மணலி, இராயபுரம், வளசரவாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் ரூ. 4.20 கோடி மதிப்பீட்டில் 63 உட்புறச் சாலைகள் சிமெண்ட் கான்கிரீட் சாலைகளாக அமைக்க 4 சிப்பங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. பேருந்து சிமென்ட் கான்கிரீட் சாலைகள்: தண்டையார்பேட்டை மண்டலத்தில் ரூ. 2.46 கோடி மதிப்பீட்டில் 2 பேருந்து சாலைகள் சிமெண்ட் கான்கிரீட் சாலைகளாக அமைக்க 2 சிப்பங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. இன்டர்லாக் பேவர் பிளாக் சாலைகள்: மணலி, ராயபுரம், வளசரவாக்கம், அடையாறு மற்றும் பெருங்குடி ஆகிய மண்டலங்களில் ரூ. 1.67 கோடி மதிப்பீட்டில் 47 சாலைகள் பேவர் பிளாக்குகளை கொண்டு அமைக்கப்பட உள்ளன.   இந்தப் பணிக்காக 4 சிப்பங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்ததாவது: சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் 03.01.2023 அன்று திறக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளிகள் இறுதி செய்யப்பட்ட பின்னர் பணிகள் உடனடியாக தொடங்கப்படும்.  சாலைகள் அமைக்கப்படும்போது ஏற்கனவே உள்ள சாலை அகழ்ந்தெடுக்கப்பட்டு, புதிய சாலை அமைக்கப்படும். மழைநீர் வழிந்தோடும் வகையில் வடிகால் உள்ள திசையில் சாலை சரிவுடன் அமைக்கப்படும். சாலைகளில் தேவையான இடங்களில் வேகத்தடைகள் அமைத்தல் மற்றும் மழைநீர் வடிகால் இல்லாத உட்புறச் சாலைகளில் மழைநீர் எளிதில் வெளியேறும் வகையில் சாலையின் இருபுறமும் சிறிய வடிகால் அமைத்தல் போன்ற பணிகளும், சாலைப் பணிகளுடன்  மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்….

The post சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் ரூ. 45.19 கோடியில் 379 சாலைகளை மேம்படுத்த முடிவு: மாநகராட்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED சென்னை மாநகராட்சியில் இணைய வழியில்...