×

நாகை பட்டினச்சேரியில் கடல் சீற்றம்; கிராமத்துக்குள் கடல் நீர் புகுந்தது 40 வீடுகள் சேதம்: 150 தென்னை மரங்கள் அலையில் இழுத்து செல்லப்பட்டது

நாகை: நாகை பட்டினச்சேரியில் இன்று கடல் சீற்றத்தால் கிராமத்துக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் 40 வீடுகள் சேதமடைந்தது. 150 தென்னை மரங்கள் அலையில் இழுத்து ெசல்லப்பட்டதால் பரபரப்பு, அச்சம் ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சில நாட்களுக்கு முன் புதிய காற்றழுத்தம் உருவானது. இது நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடற்கரையே நோக்கி நகரும் என்பதால் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் கனமழை பெய்யக்கூடும். இன்று (6ம் தேதி) கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுகை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிமை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால் நாகை, காரைக்கால் துறைமுகத்தில் இன்றும் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இந்நிலையில்  நாகையில் கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. நாகூர் அருகே கடற்கரையோரம் உள்ள பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் 3  ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடல்நீர் ஊருக்குள் புகுவது வழக்கம். இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு காரணமாக பட்டினச்சேரியில் இன்று காலை கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் ராட்சத அலைகள் எழும்பின. இதில் கடல் நீர் 500 மீட்டர் தூரத்துக்கு கிராமத்துக்குள் புகுந்தது. இதனால் கரையோரம் இருந்த 40 வீடுகள் சேதமடைந்ததுடன், அலையில் இழுத்து  செல்லப்பட்டன. மேலும் கடற்கரையோரம் இருந்த 150 தென்னை மரங்களும் வேரோடு அலையில் இழுத்து செல்லப்பட்டது. பட்டினச்சேரி கடலில் சீற்றம் அதிகமாக இருப்பதால் கிராம மக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். தகவலறிந்த தாசில்தார் ஜெயபாலன் மற்றும் அதிகாரிகள் பட்டினச்சேரிக்கு வந்து பார்வையிட்டனர். இதே நிலை தொடர்ந்தால் கடற்கரையோர கிராமம் கடலுக்குள் மூழ்கும் அபாயம் ஏற்படும். எனவே கரையோரத்தில் தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டத்தில் வேதாரண்யத்தில் கடல் சீற்றத்தால் வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இருந்து 5,000 மீனவர்கள் இன்று 4வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து செல்லும் கொடியாபாளையம், கொட்டாய்மேடு, ஓல கொட்டாய்மேடு, மடவாமேடு, புதூர்பட்டினம், தர்காஷ் பகுதியை சேர்ந்த 5,000 மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் கரையோரங்களில் 350 விசைப்படகு, 250 பைபர் படகு, 200 நாட்டு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காரைக்காலை சேர்ந்த 600 விசைப்படகுகள் இன்று 4வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. நாகை மாவட்டத்தில் முழுவதும் பரவலாக இன்று காலை முதல் வானில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. இந்நிலையில் நாகை நகர் பகுதி மற்றும் நாகூர், வேளாங்கண்ணி, பட்டினச்சேரி, கீழ்வேளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மதியம் முதல் மழை பெய்து வருகிறது….

The post நாகை பட்டினச்சேரியில் கடல் சீற்றம்; கிராமத்துக்குள் கடல் நீர் புகுந்தது 40 வீடுகள் சேதம்: 150 தென்னை மரங்கள் அலையில் இழுத்து செல்லப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Nagai Pattinacherry ,Nagai ,Dinakaran ,
× RELATED துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி...