×

பரிகாரங்கள் பெரும்பாலும் பலன் அளிப்பதில்லையே, அது ஏன்? : தெளிவு பெறுஓம்

?பரிகாரங்கள் பெரும்பாலும் பலன் அளிப்பதில்லையே, அது ஏன்?- கே. பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.உங்களுடைய கருத்து விவாதத்திற்கு உரியதாக உள்ளது. முதலில் பரிகாரம் என்றால் என்ன, அதனை எவ்வாறு, எப்படி, எதற்காக, யார் செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். பரிகாரம் செய்யச் சொன்ன நபர் தகுதியானவர்தானா என்பதையும் பார்க்க வேண்டும். இந்தப் பரிகார முறைகளை இரண்டு வகைகளாக பிரித்துப் பார்க்கலாம். ஒன்று ஜோதிடர் செய்யச் சொல்லும் பரிகாரங்கள். மற்றொன்று ஜோதிடத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் பெரியவர்கள் மற்றும் ஆன்மிகவாதிகள் செய்யச் சொல்லும் பரிகாரங்கள். இந்த இரண்டு முறைகளுமே நமது நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தவை. உண்மையில் ஜோதிடம் என்பது அறிவியலை அடிப்படையாகக் கொண்டது. ஜோதிடவியலைக் கொண்டு பலன்களைத்தான் அறியமுடியுமே அன்றி அதற்குரிய பரிகாரங்களை அறிய முடியாது. ஜோதிடம் என்றுமே பரிகாரத்தைப்பற்றி பேசாது. பழங்கால ஜோதிட நூல்களில் கூட எங்குமே பரிகாரம் பற்றி சிறுகுறிப்பு கூட இருக்காது. அதேநேரத்தில் ஒருவரின் ஜாதகத்தை கணித்து இந்த நபருக்கு இதுபோன்ற பிரச்னை உண்டாகக் கூடும் என்பதை முன்கூட்டியே ஜோதிடத்தின் வாயிலாக அறிந்துகொள்ள இயலும். கிரகங்களின் சஞ்சார நிலையைக் கொண்டு பிரச்னையை நமக்கு முன்கூட்டியே தெரிவிப்பதுதான் ஜோதிடம். பரிகாரம் என்பதற்கும் ஜோதிடத்திற்கும் சம்பந்தம் இல்லை. அதேநேரத்தில் வேதம் மற்றும் தர்மசாஸ்திரம் கற்றறிந்த பெரியோர்கள் அவரவர்கள் பின்பற்றுகின்ற மதநம்பிக்கைகளின் அடிப்படையில் இந்த பிரச்சினைக்கு இதுபோன்ற பரிகாரத்தை செய்ய வேண்டும் என்பதை சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஜோதிடத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் பிரச்னைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அதற்குரிய தீர்வாக பரிகாரத்தைச் சொல்லும் நூல்கள் பல உண்டு. அதனை முறையாகப் படித்துத் தெரிந்துகொண்ட பண்டிதராகப் பார்த்து பரிகார முறை களைத் தெரிந்து செய்ய வேண்டியது அவசியம். அதற்கு முன்னதாக ஜாதகத்தைப் பார்த்து பரிகாரம் செய்தால் பலிக்குமா, அதற்குண்டான பாக்யம் நம் ஜாதகத்தில் உண்டா, நமது கர்மவினையின் பயன் யாது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியதும் கட்டாயமாகிறது. இவ்வாறு ஜோதிடம் வேறு, பரிகாரம் வேறு என்று பிரித்தாய்ந்து தகுதி வாய்ந்த நபர்கள் சொல்லும் பரிகாரங்களைச் செய்யும்போது நிச்சயமாக அதற்குரிய பலன் என்பது கிடைக்கத்தான் செய்கிறது. அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.?அட்சய திருதியை நாளின் சிறப்பம்சம் என்ன? நகை வாங்குவது என்பது ஒருபுறம் இருந்தாலும் அந்தநாளில் வேறு என்னென்ன செய்தால் நற்பலன் கிடைக்கும்?- வை. புகழேந்தி, ஈரோடு.பிரதி வருடம் சித்திரை மாதம் அமாவாசை கழிந்த மூன்றாவது நாள் இந்த அக்ஷய திருதியை நாள் வரும். ‘க்ஷயம்’ என்றால் குறைவு, ‘அக்ஷயம்’ என்றால் குறைவில்லாத அல்லது என்றுமே குறையாத என்று பொருள் கொள்ளலாம். ஒவ்வொரு யுகத்திலும் இந்த அக்ஷய திருதியை நாள் ஆனது மிகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பிரம்மா தனது படைப்புத் தொழிலைத் துவங்கியது இந்த நாளில்தான். அக்ஷய திருதியை நாளில் தனது படைப்புத் தொழிலைத் துவங்கிய பிரம்மா எந்தவிதக் குறையும் இன்றி தொடர்ந்து தனது பணியைச் செய்து கொண்டிருக்கிறார். சந்திரன் தனது 27 மனைவிகளுள் ரோகிணியின் மீது மட்டும் தீராத காதல் கொண்டு மற்றவர்களை புறக்கணிக்கிறான் என்ற புகாரின் பேரில் அவனது மாமனார் ஆன தக்ஷணின் சாபத்திற்கு உள்ளாகி தேய்ந்து போகிறான். அந்த நிலையில் சந்திரன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து சாப விமோசனம் பெற்ற நாள் இந்த அட்சய திருதியை. சந்திரனின் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் ‘அக்ஷய’ என்று வரம் அருளினார். தக்ஷணின் சாபத்தால் தேய்ந்து வந்தாலும் இறைவன் அருளிய அக்ஷய என்ற வரத்தால் மீண்டும் சந்திரன் வளரத் தொடங்குகிறான் என்பது புராணக்கதை. இக்ஷ்வாகு குல இளவரசன் பகீரதனின் விடா முயற்சியால் கங்கை நதி ஆகாயத்திலிருந்து பூமிக்கு வந்தது இந்த அக்ஷய திருதியை நாளன்றுதான். அன்று முதல் இன்றுவரை வற்றாத ஜீவநதியாக கங்கை பிரவாகித்துக்கொண்டிருக்கிறது என்பதை நாம் நிஜத்தில் கண்டு வருகிறோம். அக்ஷய திருதியை நாள் அன்று நம் பாரத பூமிக்கு வந்ததால் இன்றளவும் குறைவில்லாமல் நீர்வளம் நிரம்பிய நாடாக நம் தேசத்தை கங்காதேவி  காத்துக்கொண்டிருக்கிறாள். துரியோதனின் உத்தரவின் பேரில் திரௌபதியின் துகிலை துச்சாதனன் உரியும்போது ‘கண்ணா.. நீயே எனக்கு கதி’ என்று தன்னைச் சரணடைந்த அந்த அபலையின் மானத்தைக் காக்க கண்ணன் ஓடோடி வருகிறான். அவன் அருளால் புடவையின் நீளம் குறையில்லாமல் வளர்ந்து கொண்டேயிருக்க, துகிலுரித்த துச்சாதனன் மயங்கி விழுந்ததுதான் மிச்சம். இவ்வாறு திரௌபதியின் மானம் காக்க கண்ணன் புடவையை அருளியது இந்த அக்ஷய திருதியை நாளில் என்கிறது மகாபாரதம்.திருமால் தனது பத்து அவதாரங்களில் ஒரே நேரத்தில் இரண்டு அவதாரமாக வாழ்ந்து காட்டியது துவாபரயுகத்தில். பலராமன் ஆகவும், கண்ணன் ஆகவும் யதுகுல சகோதரர்களாக கோசம்ரக்ஷணை என்பது மிகவும் இன்றியமையாதது என்பதை இவ்வுலகிற்கு எடுத்துக் காட்டினர். பசுக்களை பராமரித்தால் குறையில்லாத செல்வம் நிறைந்திருக்கும் என்பதை உலகிற்கு உணர்த்திய பலராமன் பிறந்தது இந்த அக்ஷய திருதியை அன்றுதான். பாண்டவர்கள் வனவாசம் செய்யும் காலத்தில் காட்டினில் உணவு சமைக்க மிகவும் சிரமப்படுகிறாள் திரௌபதி. பீமனுக்கு உணவு சமைக்க வேண்டும் என்பதற்காக அல்ல, தங்களை நாடி வரும் முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும் குறையின்றி அமுது படைக்க இயலாது போகிறதே என்று மனம் வருந்துகிறாள்.செய்வதறியாது திகைத்த திரௌபதி சூரிய பகவானை நினைத்து வழிபட்டாள். சித்திரை மாத அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை திருதியை நாளில் அள்ள அள்ளக் குறையாத அக்ஷய பாத்திரத்தை திரௌபதிக்கு வழங்கி ஆசிர்வதித்தார் சூரிய பகவான். குறையின்றி உணவினை வழங்க வல்லது என்பதால் அதற்கு அக்ஷய பாத்திரம் என்ற பெயர் வந்தது.இதெல்லாம் சரி, தங்க நகை வாங்கி வைப்பதற்கும், இந்த அக்ஷய திருதியை நாளுக்கும் என்ன சம்பந்தம்..? செல்வத்திற்கு அதிபதியான குபேரன் முதன்முதலில் மகாலக்ஷ்மியிடம் இருந்து செல்வத்தைப் பெற்ற நாள் இந்த அக்ஷய திருதியை. செல்வத்தினை பாதுகாத்து பெருக்கும் பொறுப்பினை மகாலக்ஷ்மி தாயாரிடம் அக்ஷய திருதியை நாளில் பெற்றுக் கொண்டதால் குபேரனின் கிடங்கினில் செல்வம் என்பது அள்ள அள்ளக் குறையாமல் வளர்ந்து கொண்டேயிருக்கிறது என்பது நமது நம்பிக்கை. இது மட்டுமல்ல, வறுமையில் வாடிய குசேலர் தனது பால்ய சிநேகிதனும், துவாரகையின் அரசனுமான ஸ்ரீ கிருஷ்ணனை சந்திக்கச் சென்றபோது தனது மனைவி கொடுத்து அனுப்பிய அவல் மூட்டையை கண்ணனிடம் கொடுக்காமல் தயங்கி நிற்க, புரிந்துகொண்ட கண்ணன் குசேலனின் கையில் இருந்த அவலை வாங்கி வாயில் போட்டு ‘அக்ஷய’ என்று வாய் திறந்து அருளினான். மறுகணமே சுதாமா என்கிற குசேலனின் குடிசை மாட மாளிகையாக மாறியதோடு மட்டுமல்லாமல் அவனது இல்லத்தில் செல்வமும் நிறைந்தது. இவ்வாறு கண்ணன் தனது வாய் திறந்து ‘அக்ஷய’ என்று அருளியது இந்த அக்ஷய திருதியை நாளில். இந்த கலியுகத்தில் வாழ்ந்த ஆதி சங்கரர் தனக்கு நெல்லிக்கனியை பிக்ஷையிட்ட ஏழைப் பெண்மணியின் துயர்துடைக்க கனகதாரா ஸ்தோத்ரம் படைத்து மகாலட்சுமியின் அருளினால் அந்தப் பெண்மணியின் இல்லத்தில் செல்வத்தை நிறையச் செய்தது இந்த அக்ஷய திருதியை நாளில். கனகம் என்றால் தங்கம் என்று பொருள். தாரை என்றால் விடாமல் பொழிவது. இவ்வாறு தங்கத்தை விடாமல் பொழியச் செய்யும் சக்தி படைத்த கனகதாரா ஸ்தோத்ரத்தை சங்கரர் இயற்றியது இந்த அக்ஷய திருதியை நாளில் என்பதால் இந்த நாள் ஆனது தங்கத்திற்கு முக்கியத்துவம் தரும் நாளாக அமைந்துவிட்டது. அக்ஷய திருதியை என்றதும் தங்கத்தினை மட்டும் நினைவில் கொள்ளும் நாம் மேற்சொன்ன கதைகளில் இருந்து முக்கியமான ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள மறந்துவிடுகிறோம். அக்ஷய திருதியை நாளில் செல்வம் சேரும் என்பதை மட்டும் புரிந்துகொள்ளும் நம்மால் இந்தக் கதைகளில் சொல்லப்பட்டுள்ள உட்கருத்தினை அறிந்துகொள்ள இயலவில்லை. தனது வீட்டினில் பிக்ஷையிடுவதற்கு எதுவும் இல்லாவிட்டாலும் ‘பவதி பிக்ஷாந்தேஹி’ என்று வாசலில் வந்து நிற்கும் சங்கரனுக்கு அந்த ஏழைப் பெண்மணி தன்னால் இயன்ற நெல்லிக்கனியை எவ்வித தயக்கமும் இன்றி பிக்ஷையிட்டாள். கண்ணனுக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லையென்றாலும் தன்னால் இயன்ற அவலையும் வெல்லத்தையும் கலந்து தனது கணவனிடம் கொடுத்து அனுப்பினாள் ஏழை குசேலனின் மனைவி. வனவாசம் செய்யும்போது கூட அந்த கஷ்டமான சூழலிலும் தங்களை நாடி வரும் ரிஷிகளும், முனிவர்களும் வயிறார உண்ண வேண்டும், அவர்கள் பசியினைப் போக்க வேண்டும் என்பதற்காக சூரிய பகவானிடமிருந்து அக்ஷய பாத்திரத்தைப் பெற்றுக்கொண்டாள் திரௌபதி. ஆக, அக்ஷய திருதியை நாளில் அடுத்தவர்களுக்கு அன்னமிட வேண்டும் என்பதே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இறைக்கின்ற ஊற்றுதான் சுரக்கும். நாம் அள்ளி அள்ளி கொடுத்தால்தான் நம் வீட்டினில் அள்ள அள்ளக் குறையாத செல்வம் சேரும் என்பதே அக்ஷய திருதியை நாளில் நாம் கற்றுக் கொள்ள வேண்டியதாகும்.ஜோதிடவியல் ரீதியாக ஆராய்ந்தால் நவகிரஹங்களில் நம் கண்களுக்குத் தெரிகின்ற சூரியனும், சந்திரனும் ஒரே நேரத்தில் உச்ச பலத்துடன் சஞ்சரிக்கும் காலமே அக்ஷய திருதியை நாள். அதாவது சூரியன் தனது உச்ச ராசியான மேஷத்திலும், சந்திரன் தனது உச்ச ராசியான ரிஷபத்திலும் அமர்ந்திருக்கும் காலமே அக்ஷய திருதியை நாள் ஆகும். சூரியனும், சந்திரனும்தான் நமக்கு உணவினை அளிக்கும் கோள்கள். நீர் வளத்தினைத் தருவது சந்திரன். சூரியனின் அருளில்லாவிட்டால் பயிர்கள் விளையாது. சூரியன், சந்திரனின் ஆசியினால்தான் பயிர்கள் விளைகின்றன. குறைவின்றி வயிறு நிறைய சாப்பிடுகிறோம். அவர்கள் உச்ச வலிமையோடு சஞ்சரிக்கும் காலத்தில் அன்னதானத்தினைச் செய்தோமேயானால் அன்னத்திற்கு என்றுமே பஞ்சம் வராது. தங்கத்தை நம்மால் சாப்பிடமுடியாது. எவ்வளவுதான் தங்க நகைகளைச் சேர்த்து வைத்தாலும், தவித்த வாய்க்குத் தண்ணீர் வேண்டும். தாகத்தைத் தீர்த்து வைப்பவனிடம்தான் தங்கமும் சேரும். எல்லாவற்றிற்கும் மேலாக சிவபெருமான் பிக்ஷாடனராக அலைந்தபோது அவருக்குப் பிச்சையிட, அன்னையானவள் அன்னபூரணியாக வடிவெடுத்து வந்ததும் இந்த அக்ஷய திருதியை நாளில் என்று சிவபுராணம் சொல்கிறது. மகத்துவம் வாய்ந்த இந்த நன்னாளில் நகைகள் வாங்கி சேர்த்து வைப்பது மட்டும் நம் நோக்கமாகிவிடக் கூடாது. அக்ஷய திருதியை என்றால் அன்னதானம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக நகைக்கடை அதிபர்கள் அக்ஷய திருதியை நாளில் அன்னதானம் செய்வதன் மூலம் மேன்மேலும் தங்கள் வியாபாரம் சிறக்கக் காண்பார்கள். நகை வாங்குவதற்கு வரும் வாடிக்கையாளர்களுக்குக் கூட தங்களால் இயன்ற உணவினை அளிக்கலாம். வியாபாரம் பெருகுவதோடு வயிறு நிறையும் வாடிக்கையாளர்களின் வாழ்த்துக் களையும் பெறலாம். இந்த நாளில் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அது காலமெல்லாம் தொடர்ந்து கொண்டிருக்கும். அக்ஷய திருதியையின் பெருமையைப் புரிந்து கொண்டு அந்த நாளில் ஆதரவற்ற முதியவர்கள், அநாதைக் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர்க்கு நம்மால் இயன்ற அன்னதானத்தினையும், பொருளுதவியையும் செய்யுங்கள். தங்கம் மாத்திரமல்ல, எல்லா விதமான வளங்களும் அள்ள அள்ளக் குறையாத அளவிற்கு நம் வாழ்வினில் வந்து சேரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.?காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா என்ற நிலையை உணர்ந்து கொண்டவர்கள் என்ன செய்ய வேண்டும்?- ஆர்.ஆர்.உமா, திசையன்விளை.அந்த நிலையை உணர்ந்துகொண்டவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே.. அந்த நிலையை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதே உங்கள் கேள்வியாக இருந்திருக்க வேண்டும். ‘ஸ்மசான ஞானம்’ என்ற ஒன்றை பெரியவர்கள் சொல்வார்கள். அதாவது இறந்த ஒரு மனிதரின் அந்திமச் சடங்கினில் பங்கேற்பவர்கள் மனதில் ஒருவித வைராக்யம் தோன்றுமாம். இதோ இறந்து கிடக்கிறானே இந்த மனிதனின் கதிதானே நாளை நமக்கும்., மனைவி, மக்கள், சொத்து, வீடு, வாசல் என அத்தனையும் ஒரு நொடியில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டானே என்றோ அல்லது அவன் செய்த நன்மைகள், தீமைகள் எல்லாவற்றையும் மனம் ஆராய்ந்து நாமும் இதுபோல் நடந்துகொள்ள வேண்டும் அல்லது நடந்துகொள்ளக் கூடாது என்றோ இறந்தவனை உதாரணமாகக் கொண்டு எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக் கூடாது என்று மனம் அசைபோடும். இந்த சிந்தனையெல்லாம் அவனது இறுதிச் சடங்கில் பங்கேற்ற ஓரிரு நாட்களுக்கு மட்டும் மனதில் இருக்கும். யாருடனும் பேசாமல் மனதில் அமைதியாக சிந்தனை மட்டும் ஓடிக்கொண்டிருக்கும். இறந்த வனின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக இடுகாட்டிற்குச் செல்லும்போது உண்டாகும் இந்த ஞானத்தினை நாம் அன்றாட வாழ்வியலில் கடைபிடித்தாலே நீங்கள் சொன்ன அந்த நிலையை அடைந்துவிட இயலும்.ஆனால், நாட்கள் செல்ல செல்ல இந்த ஞானம் நம்மை விட்டு விலகி மீண்டும் வழக்கம்போல் நமது வாழ்க்கையில் மாயையின் பின்னால் ஓடிக் கொண்டிருப்போம். காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா என்ற நிலையை முழுமையாக உணர்ந்துகொள்ள சரணாகதி ஒன்றே வழி என்பதே நிதர்சனமான உண்மை. சரணாகதியை நோக்கி நகர குருவருள் உதவும். திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா…

The post பரிகாரங்கள் பெரும்பாலும் பலன் அளிப்பதில்லையே, அது ஏன்? : தெளிவு பெறுஓம் appeared first on Dinakaran.

Tags : Q. ,Prabhavathi ,Melakrishnanbutur ,
× RELATED ரூ.8 லட்சம் மோசடி: பெண் காவலர் மீது வழக்கு