×

புருஷாமிருகம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

புருஷாமிருகம்

இடுப்பிற்குக் கீழே புலியின் உடலும், இடுப்புக்கு மேல் ரிஷியின் வடிவமும் இணைந்த கோலம் “புருஷா மிருகமாகும்’’. இது தெய்வீக ஆற்றல்களைக் கொண்டதும். சிவபூசை செய்வதில் புருஷாமிருகம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. தென் தமிழ்நாட்டுக் கோயில்களில் புருஷாமிருகத்தின் திருவுருவம் நெடிய தூண் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

குமரி மாவட்டத்தின், சிவாலய ஓட்டத்தில் இடம் பெற்றுள்ள பன்னிரண்டு சிவாலயங்களும் சோழநாட்டுத் தலமான திருமழபாடியும், சிதம்பரமும் புருஷாமிருகம் பூஜித்துப் பேறு பெற்ற தலங்கள் ஆகும். புருஷாமிருக வாகனம் அனேக ஆலயங்களில் உள்ளது. நான்காம் நாள் காலை அல்லது ஐந்தாம் நாள் காலையில் புருஷாமிருக வாகனத்தில் சிவபெருமானை அமர்த்தி வீதியுலா நடத்துகின்றனர்.

இந்த வாகனம் இரண்டு நிலைகளில் அமைகிறது. முதல்வகை வாகனம் பக்கவாட்டில் அமைந்ததாகும். இந்த அமைப்பில் வலது கையில் அடுக்கு ஆரத்தி ஏந்தி, இடது கையில் மணியை ஒலிப்பது போல் இந்த வடிவம் அமைகிறது. இது சிவபெருமானைப் பூசைசெய்யும் கோலத்தில் அமைந்த வாகனமாகும். இந்த நிலையில் அமைந்த புருஷாமிருகத்தின் முதுகின்மீது பெருமானை அமர்த்துகின்றனர். மனித முகமாக அமைந்த புருஷா மிருகத்தின் முகத்தில் ரிஷிகளைப் போல் நீண்ட தாடியும், தலைமீது எடுத்துக்கட்டிய சடைமுடியும் அமைகின்றன. உக்கிரமாக கண்களே இதனை விலங்கோடு தொடர்பு படுத்துவதாக இருக்கிறது.

இரண்டாவது நிலையில், புருஷா மிருகங்கள் எதிர்முகமாக அமைந்துள்ளன. இதன் தோளின்மீது பெருமானை அமர்த்துகின்றனர். பின் கால்களைத் தரையில் ஊன்றித்தாவும் பாவனையில் உள்ள இது தன் கரங்களை நீட்டி தோளில் அமர்ந்துள்ள பெருமானின் இரண்டு திருவடிகளையும் தாங்கும் பாவனையில் முன்னோக்கி நீட்டியுள்ளது. தோளில் இரண்டு விரிந்த சிறகுகளுடன் இந்த வடிவம் காணப்படுகிறது.

அசுரா மிருக வாகனம்

அசுரா மிருக வாகனம் இடுப்பிற்குக் கீழ் சிங்க வடிவத்தையும், இடுப்பிற்கு மேல் திண்மையான அசுர உடலும் கொண்ட வடிவமாகும். இடுப்பிற்குக் கீழே அமைந்த கால்களில் வலிய பாதமும் கூரிய நகங்களும் உள்ளன. பின்பகுதியில் நீண்ட உறுதிமிக்க வால் மேல்நோக்கி வளைந்துள்ளது.

இடுப்பிறகு மேல் அமைந்த அசுர வடிவம் நீண்ட சூலத்தை இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டுள்ளது. முகத்தில் குறுந்தாடியும் கனத்த மீசையும் கண்களில் கோபக்கனலும் உள்ளன. தலையில் மணிமுடி தரித்துள்ளது. இத்தகைய அசுராமிருக வாகனம் இப்போது சூரியனார் கோயிலை அடுத்த திருமங்கலக்குடி பிராணவரதேசுவரர் ஆலயத்தில் மட்டுமே இருக்கின்றது.

தொகுப்பு: ஜெயசெல்வி

The post புருஷாமிருகம் appeared first on Dinakaran.

Tags : Purushamirugam ,Kumkum ,Golam ,Purusha ,Purushamiruka ,Shiva ,
× RELATED குதிகால் வலி