×

வாசிப்பும் வழிபாடுதான்…

வழிபாடு என்பது என்ன? இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதுதான் வழிபாடு.“தொழுவீராக” “நோன்பு நோற்பீராக” என்பவை இறைக் கட்டளைகள். அவற்றை மனமார ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுகிறோம். ஆகவே அவை வழிபாடுகள் எனும் தகுதியைப் பெறுகின்றன.இதேபோன்ற ஓர் இறைக்கட்டளைதான் “வாசிப்பீராக” என்பதும். தொழுகை, நோன்பு போன்ற வழிபாடுகள் எல்லாம் பின்னாளில்தான் கடமையாக்கப்பட்டன. ஆனால் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து வந்த முதல் கட்டளையே “இக்ர”- வாசிப்பீராக என்பதுதான்.

“ஓதுவீராக. படைத்த உம்
இறைவனின் திருப்பெயர் கொண்டு.” (குர்ஆன் 96:1)
கல்வியையும் அறிவையும் வலியுறுத்தும் வசனங்கள் குர்ஆன் முழுவதும் நிரம்பியுள்ளன. படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருள் குறித்தும் சிந்தித்துப் பாருங்கள் என மனிதர்களிடையே சிந்திக்கும் பழக்கத்தைத் தூண்டுகிறது தூய வான்மறை.

“ஒட்டகங்களை இவர்கள் பார்க்கவில்லையா, அவை எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்று! மேலும் வானத்தைப் பார்க்கவில்லையா அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது என்று! மேலும் மலைகளைப் பார்க்கவில்லையா அவை எவ்வாறு ஊன்றப்பட்டுள்ளன என்று! மேலும் பூமியைப் பார்க்கவில்லையா, அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது என்று.” (குர்ஆன் 88: 17-20)இத்தகைய குர்ஆன் வசனங்கள் சாதாரண நம்பிக்கையாளர்களிடம் மட்டுமல்ல, பெரும் பெரும் கலீஃபாக்களின் கவனத்தையும் அறிவின் பக்கம் ஈர்த்தது.

பாக்தாதை ஆட்சிசெய்த கலீஃபா ஹாரூன் ரஷீத் காலத்தில் லட்சக்கணக்கான நூல்கள் அடங்கிய பெரும் நூலகம் ஒன்று இருந்ததாம். கல்வி கற்பதற்கு உலகின் பல பாகங்களில் இருந்தும் மாணவர்கள் பாக்தாதில் வந்து குவிந்தனர் என்று வரலாறு கூறுகிறது.ஒருமுறை நபிகளார்(ஸல்) அவர்கள், “இரவு முழுக்க இறைவனை நின்று வணங்குவதைவிட ஒரு மணி நேரம் இறைவனின் படைப்புகள் குறித்துச் சிந்திப்பது நல்லது” என்று குறிப்பிட்டார்.தம்முடைய தோழர் ஒருவரை நபிகளார் அழைத்து, யூதர்களின் மொழியைக் கற்றுக்கொள்ளும்படிக் கட்டளையிட்டார். அந்தத் தோழர் பதினைந்து நாட்களில் யூதமொழியை எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டார். கடிதங்கள் எழுதுவதற்கு அவரைத் தம் உதவியாளராக நபிகளார் பயன்படுத்திக்கொண்டார்.

ஹிஜ்ரி முதல் ஐந்து நூற்றாண்டுகள் கலை, இலக்கியம், அறிவியல் அனைத்தும் முஸ்லிம்களின் கையில்தான் இருந்தன என்று வரலாறு கூறுகிறது. இதற்குக் காரணம் வாசிப்பும் வழிபாடுதான் என்பதை அவர்கள் உணர்ந்திருந்ததுதான்.
“வாசிப்பும் வழிபாடுதான்” என்பதை உணர்ந்து அறிவெழுச்சியின் பக்கம் திரும்புவோம்.
– சிராஜுல் ஹஸன்

The post வாசிப்பும் வழிபாடுதான்… appeared first on Dinakaran.

Tags : God ,Dinakaran ,
× RELATED பாத தரிசனத்தின் பலன் என்ன?