×

வளமான வாழ்விற்கு வராகர்

நாடு வாழவும் நாட்டில் உள்ள மனிதர்கள் வாழவும் எம்பெருமான் சாஸ்திரங்களை கொடுத்தான். அந்த சாஸ்திரங்கள் பயன்படாத பொழுது தானே அவதாரம் எடுத்தான். அப்படி எடுத்த அவதாரங்கள் பற்பல வாயினும் பத்து அவதாரங்கள் மிக முக்கியமான அவதாரங்களாகக் கருதப்படுகின்றன. பத்து அவதாரங்களில் வராக அவதாரம் மிகவும் சிறப்புமிக்க ஒரு அவதாரமாகும்.

1. வராக அவதாரத்தின் கதை இதுதான்

ஒரு சமயம், மகரிஷிகள் நால்வர் மகாவிஷ்ணுவைத் தரிசனம் செய்ய வைகுந்தம் வந்தனர். அங்கு காவல் புரிந்த ஜெயன், விஜயன் என்ற இரு காவலர்கள் மகரிஷிகளைத் தடுத்தார்கள். அந்த ரிஷிகள் கோபம் அடைந்து, “நீங்கள் பூலோகத்தில் பிறக்கக்கடவீர்கள்” என்று சாபமிட்டார்கள்.ஜெய, விஜயர்கள் முனிவர்களைப் பணிந்து வணங்கி, “உங்கள் சாபப்படி நாங்கள் எப் பிறவி எடுத்தாலும் மகாவிஷ்ணுவின் திருநாமத்தை மறவாதிருக்க அருள் புரிய வேண்டும்’’ என்று கேட்டனர். விஷ்ணு அங்கே தோன்றி, முனிவர்களிடம், “இவர்கள் செய்த தவறுக்குத் தாங்கள் அளித்த சாபம் சரியானது தான். இவர்கள் இருவரும் பூலோகத்தில் கொடிய அசுரர்களாக மூன்று முறை பிறந்து, பின், நம் அருளினால் நம்மையே அடைவார்கள்’’ என்று கூறினார். அதன்படி, இருவரும் கசிப முனிவருக்கும், அதிதிக்கும் பிள்ளைகளாகப் பிறந்தார்கள். முதலில் பிறந்தவன் இரண்யகசிபு. அடுத்து பிறந்தவன், இரண்யாட்சன். இரண்யகசிபு பிரம்மனை நோக்கித் தவம் இருந்து, ‘எவராலும், எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் நேரிடக்கூடாது’ என்று வரம் பெற்று, மூன்று லோகங்களையும் தன்வசப்படுத்திக் கொண்டான். இரண்யாட்சனும் பிரம்மனிடம் வரங்களைப் பெற்றுப் பலசாலியாகி, தேவர்களைச் சிறைப் பிடித்தான். அவர்கள் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்தது.

இரண்யாட்சன் ஆணவம் அதிகமாகி, வருண பகவானை வம்புக்கு இழுத்தான். அதற்கு வருண பகவான், “அசுரனே, விஷ்ணு பகவான் வராக உருவம் எடுத்து வருவார். அவரிடம் போராடு’’ என்று சொன்னார். அவன் வராக மூர்த்தியைத் தேடிப் பல திசைகளிலும் அலைந்து திரிந்தான். நீர்ப் பிரளயத்தில் பூலோகம் மூழ்கியதால், பிரம்மா மகாவிஷ்ணுவை நோக்கித் தவமிருந்தார். அப்போது அவருடைய சுவாசத்திலிருந்து வெண்ணிறமாக சிறிய வராகம் (பன்றி) ஒன்று உருவாகிச் சிறிது சிறிதாக வளர்ந்து பிரம்மாண்டமான உருவம் எடுத்தது.பிரளயத்தில் மூழ்கியிருக்கும் பூமியை வெளியே கொண்டுவரச் சமுத்திரத்தில் குதித்தது. இச்சமயத்தில், எங்கு தேடியும் வராக மூர்த்தியைக் காணாததால், இரண்யாட்சன் சோர்வடைந்து, அசுர லோகத்தில் சுகமாக இருந்தான். அப்போதுநாரதர் அங்கே தோன்றி, “இரண்யாட்சா, மகாவிஷ்ணு வராக உருக் கொண்டு நீரில் மூழ்கியிருக்கும் பூமியை மேலே தூக்கிக் கொண்டிருக்கிறார்’’ என்று சொன்னார். உடனே அவன் கதாயுதத்தைக் கையில் ஏந்தியபடி விரைந்தான். வராகமூர்த்தி தமது கோரைப் பற்களால் பூமியைத் தூக்கியபோது இரண்யாட்சன் தன் கதாயுதத்தால் அடித்தான். இருவருக்கும் கடும் போர் உண்டானது. இரண்யாட்சன் அடித்த அடியால், மகாவிஷ்ணுவின் கதாயுதம் கையிலிருந்து நழுவி விழுந்தது.

தேவர்கள் அனைவரும் அதிர்ச்சியுற்றனர். இரண்யாட்சன் மீண்டும் தன் கதாயுதத்தால் தாக்க, மகாவிஷ்ணு தம் இடது காலால் அதைத் தட்டிவிட்டு, தம் கையில் சக்கராயுதத்தை வரவழைத்தார்.இரண்யாட்சன் சூலாயுதத்தை ஏவினான். சக்கராயுதத்தால் சூலாயுதமும் பொடிப் பொடியானது. இரண்யாட்சன் ஆவேசமாக மகாவிஷ்ணுவின் மார்பின் மீது ஓங்கிக் குத்தினான். இருவருக்கும் உக்கிரமான போர் மூண்டது. இரண்யாட்சனால் சமாளிக்க முடியவில்லை.பின், அவன் மறைந்து, ஆகாயத்திலிருந்து கற்களையும், அனேகவித பாணங்களையும் கொண்டு தாக்கினான்.சிறிது நேரம் அவனுடைய ஆற்றலை விளையாட்டாக வேடிக்கை பார்த்தார் மகாவிஷ்ணு. அசுரர்கள் பலர், பயங்கரமான உருவங்களில் இரண்யாட்சனுக்கு உதவியாக வந்தனர். அவர்கள் அத்தனை பேரையும் வதம் செய்தார் மஹாவிஷ்ணு.இனியும் காலம் தாழ்த்துவது சரியில்லை என்று எண்ணிய மகாவிஷ்ணு அவனை இறுகப் பிடித்துத் தலையின் மீது ஓங்கி அடிக்க, இரத்தத்தைக் கக்கிக் கொண்டு பூமியின் மீது விழுந்து மடிந்தான். அனைவரும் மகாவிஷ்ணுவைத் தொழுதனர். இதுதான் திருமாலின் 3வது அவதாரமான வராக அவதாரம் பற்றியது.

2. வராகரின் பேருருவம்

திரிவிக்கிரம அவதாரத்தைவிட பல மடங்கு பெரிய அவதாரம் வராக அவதாரம் என்பதை ஒரு எளிய உதாரணத்தின் மூலம் ஆழ்வார்கள் காட்டுகின்றார்கள். கீழே உள்ள ஏழு உலகங்கள், மேலே உள்ள ஏழு உலகங்கள், அதைத் தாண்டி அண்ட ஆவரணங்கள் எல்லாம் கடந்து சென்ற அவனுடைய திருவடியை, பிரம்மன் சத்திய லோகத்தில் வணங்கி கங்கை நீரால் அபிஷேகம் செய்தார். ஆனால், வராக அவதாரம் திருவிக்கிரம அவதாரத்தைவிட பெரியது. ‘‘குரமத் யகதோ யஸ்ய மேரு கண கணாயதே” என்ற ஸ்லோகம் வராகத்தின் பேருருவைக் கூறுகிறது. மேருமலையும் வராகத்தின் குளம்படியில் சுருண்டு தூள்தூளாக ஆகியது என்றால் அவன் உருவத்தை நம்மால் நினைத்துப் பார்க்க முடியாது. அத்தனை பிரம்மாண்டமானது வராகரின் பேருருவம்.

3. வேதங்களில் வராக அவதாரம்

வராக புராணம் என்பது மகாபுராணங்களில் திருமாலின் அவதாரத்தினை விளக்கும் புராணமாகும். இப்புராணம் 24,000 ஸ்லோகங்களை கொண்டதும், திருமாலின் பெருமைகளை எடுத்துரைக்கும் சாத்விக புராண வகையைச் சார்ந்ததும் ஆகும். இப்புராணத்தில் திதிகள், விரதங்கள், தீர்த்தங்கள், பாவங்கள், பாவங்களுக்கான பரிகாரங்கள் ஆகியவையும் கூறப்பெற்றுள்ளன. வராகர் பற்றிய குறிப்பு கிருஷ்ண யஜுர் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. வராக அவதாரத்தைப் பொருத்தவரை முதல் குறிப்பு வேதத்தில் சதபத பிராமணத்தில் இருக்கிறது. நிலவுலகில் வலிமைமிக்க பன்றி ஒன்று எங்கும் படர்ந்து நிரம்பியிருந்த நீரிலிருந்து வெளிவந்ததாகவும் அந்தப் பன்றியும் படைப்புக் கடவுளான பிரஜாபதியும் ஒருவரே என்றும் சதபத பிராமணம் கூறுகின்றது.நாராயண வல்லியில் வராக அவதாரம் மிக அருமையான முறையில் விளக்கப்பட்டிருக்கிறது. அதில் பூமிப் பிராட்டியை மீட்டவுடன் வராகன் ஆனந்த சொரூபமாக இருந்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பகவத் சாஸ்திரத்தில் ஸ்ரீவராகப் பெருமானின் உருவம் விளக்கப்படுகிறது.

‘‘விஷ்னோர் மகா வராகஸ்ய நிர்மாண மது நோச்யதே” என்கிற மந்திரத்தில் கழுத்து வரை மனித உருவாகவும் மேலே திருமுகமண்டலம் வராக முகமாகவும் இடது முழங்கையில் பூமிப் பிராட்டியை ஏந்திக் கொண்டும் வலது திருக்கையை இடுப்பில் வைத்துக்கொண்டும் திருமுகமண்டலம் திரும்பி தேவியின் திருமேனித் தடங்களை முகரும் படியாகவும் திருவாழ்மார்பன் ஆகவும் திவ்ய ஆபரண பூஷிதனாகவும் கர்ப்பக்கிரகத்தில் வராகப் பெருமானை பிரதிஷ்டை செய்து வணங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படித்தான் ஸ்ரீமுஷ்ணத்தில் வராகர் காட்சியளிக்கிறார்.விஷ்ணு புராணம் வராக அவதாரத்தின் தோற்றத்தை மிக விரிவாகக் கூறுகின்றது. விஷ்ணு புராணத்தில் இரண்யாட்சனைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை. ஆனால், கடலில் பூமி மூழ்கிய விஷயமும் பகவான் வராக அவதாரம் எடுத்து காப்பாற்றிய விஷயமும், அப்பொழுது பூமி பிராட்டி செய்த ஸ்தோத்திரம் மற்ற தேவதைகள் கூறிய ஸ்துதிகள் கூறப்பட்டுள்ளன. விஷ்ணு புராணத்தில் ஸ்ரீவராக அவதார வைபவம்.
“தஸ்ய யஜ்ஞ வரஹஸ்ய விஷ்ணோ அமிததேஜச
பிரணாமம் யேபி குர்வந்தி தேஷாமபி நமோ நம:”
– என்று குறிப்பிடப்படுகிறது.

அவர் சப்த சமுத்திரத்திலும் நிற்கும் பொழுது அவருடைய முழங்கால் அளவுக்குகூட சமுத்திரம் இருக்கவில்லை என்று புராணங்கள் கூறுகின்றன. சுவேத வராகத்தின் கர்ஜனை ஜனலோகம், தபோலோகம், சத்யலோகம் மூன்றிலும் கேட்கிறது (வராகர் பூமியை தூக்கிய போது அவரின் மூச்சுக்காற்றின் வேகம் காரணமாக அவரின் வேர்வை ஜனலோகம் வரை சென்றதாய் விஷ்ணுபுராணம் கூறுகிறது) தன்னுடைய 100 கைகளால் ஒரு பன்றி இப்பூவுலகை மேலேதூக்கி வந்தது என்று தைத்ரீய ஆரண்யகம் குறிப்பிடுகிறது.மகாபாரதத்திலும் மார்க்கண்டேய புராணத்தில் விஷ்ணுவின் அவதாரமாக; பூவராகர் பெருமை பேசப்படுகிறது. பிரம்மாண்ட புராணத்தில் ஐந்தாம் அத்தியாயம் வராகப் பெருமானின் பேருருவை வருணிக்கிறது.

4. வராக சரம ஸ்லோகம்

வைணவ சமயத்தில் மூன்று மஹா மந்திரங்கள் உண்டு. அதில் ஒன்று சரம ஸ்லோகம். அந்த சரம ஸ்லோகத்தில் மூன்று விதமான மந்திரங்கள் உண்டு. அதில் முதன்மையான சரம ஸ்லோகம் வராக அவதாரத்தில் வராகப்பெருமாள் பூமாதேவிக்குச் சொன்னது.
“ஸ்திதே மனஸி ஸூ ஸ் வதே சரீரே சதி யோ நர
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வ ரூபஞ்ச மா மஜம்
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்”

அவர் சொன்ன அந்த சரம ஸ்லோகத்தினுடைய பொருள், வராக சரம ஸ்லோகம் ஸ்திதே மனஸ், ஒரு மனிதன் நல்ல உடல்நலத்தோடு இருக்கக் கூடிய நிலையில், வழிபட வேண்டும். அப்படி வழிபட்டால், அவர் அந்திமத் திசையில், அவரால் பகவான் திருநாமமும் சொல்ல முடியாத ஒரு நிலையை அடைந்து, நினைவிழந்து, இருக்கும்போது, தெய்வத்தினுடைய நாமமும் சிந்தனையோ செய்யவேண்டிய அவசியம் இல்லாதபடி நானே அவனுடைய அருகில் சென்று அவனை என்னுடைய பதத்திற்கு அழைத்துக் கொள்கிறேன். இதை பெரியாழ்வார் மிக அழகான பாசுரத்தில் பாடுகின்றார்.

“துப்புடையாரை அடைவதெல்லாம்
சோர்விடத்துத் துணையாவ ரென்றே
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன்
ஆனைக்குநீ அருள்செய் தமையால்
எய்ப்பு என்னை வந்துநலியும்போது
அங்குஏதும் நானுன்னை நினைக்க
மாட்டேன்அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்
அரங்கத் தரவணைப் பள்ளியானே!”

5. யாகங்களும் வராகனும்

வராகர் பொதுவாக ஆதிவராகர், யக்ஞவராகர் மற்றும் பிரளயவராகர் ஆகிய மூன்று வடிவங்களில் வணங்கப்படுகிறார். வராகப் பெருமானுக்கு உள்ள தனிச் சிறப்பு, யாகங்களைக் காப்பாற்றுகின்ற மூர்த்தி. யாகங்கள் நிறைவேற வேண்டும் என்று சொன்னால் அங்கே வராகப் பெருமாள் யக்ஞவராகராய் ஆவாஹனம் ஆக வேண்டும். 120 (10 யோசனை) கிலோ மீட்டர் அகலமும் 1200 கிலோ மீட்டர் உயரமும் கொண்டவராக மலையைப் போன்ற பெரிய உருவோடு வெண்மையான கூர்மையான பற்களைக் கொண்டு தீயைப் பொலிகின்ற ஒளியும் சூரியனைப் போல ஜொலிக்கும் கண்களும் கொண்டு விளங்கியதாக இந்தப் புராணத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்த வராக மூர்த்தியின் வடிவம் வேத வேள்வியின் ஒவ்வொரு அங்கத்திற்கும் ஒப்பிடப்படுகிறது. அவரே ஒரு வேள்விச் சாலை. உபநிடதங்களும் அவற்றின் மறைபொருளும் அவருக்கு இருக்கை. சூரியனும் சந்திரனும் அவரது இரு கண்கள். வேதத்தின் சாகைகள் அவருடைய காதணிகள். அவருடைய நீண்ட முகம் வேள்வியின் சுருக் அதாவது ஆஜ்யம் விடுகின்ற கரண்டி. அவருடைய பெருத்த ஓசை சாமவேதம். அவருடைய வடிவம் உண்மையும் ஒழுக்கமும் நிறைந்த வடிவம். வேத மேடையே அவரது இதயம். சோம பானமே அவரது குருதி எப்படி வர்ணிக்கப்படுகிறது.

6. வராகரைப் போற்றும் துதிநூல்கள்

திருமாலைப் போற்றும் ஸ்ஹஸ்ரநாமாவளிகள் ஏழு பெயர்கள் வராக அவதாரம் தொடர்புடைய திருநாமங்கள் ஆக விளங்குகின்றன. இந்த ஏழு திருநாமங்களும், திருவுருவத்தை வர்ணிக்கின்றன. பூமியைத் தாங்கும் பெரிய உருவத்தை உடையவன்; பூமியைத் தாங்கும் பெரிய கொம்புகளை உடையவன்; வராக முகத்தை உடையவன்; பூமியை திரும்பவும் அடைந்தவன்; பரபர ஞானம் இவற்றைக் கொடுப்பவன் என்று திருநாமங்கள் போற்றுகின்றன. ஆழ்வார்கள் அனை
வருமே மங்களாசாசனம் செய்துள்ளனர். பொய்கை ஆழ்வார் ஆறு பாசுரங்கள், பூதத்தாழ்வார் இரண்டு பாசுரங்கள், பேயாழ்வார் ஒரு பாசுரம், திருமழிசையாழ்வார் ஆறு பாசுரங்கள், நம்மாழ்வார் 11 பாசுரங்கள், குலசேகர ஆழ்வாரும் ஆண்டாளும் ஒரு பாசுரம், பெரியாழ்வார் ஏழு பாசுரங்கள், திருமங்கை ஆழ்வார் 15 பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்துள்ளனர். இது தவிர, ஸ்ரீவேதாந்த தேசிகன் தேசிக பிரபந்தம், தசாவதார ஸ்தோத்திரம், பூஸ்துதி, ரகசிய சிகாமணி போன்ற நூல்களிலும் வராகப் பெருமானைப் போற்றியுள்ளார். இதுதவிர வராக கவசம், ஸ்ரீவராக ஸ்தோத்திரம், வராக உபநிஷத், ஸ்ரீபூவராகர் சுப்ரபாதம், பிரபத்தி, மங்களம் போன்றவை வராக பெருமானின் பெருமையைப் போற்றும் வண்ணம் உள்ளன. கனம் கிருஷ்ணய்யர் இவர் மீது இரண்டு கீர்த்தனைகளை பாடியுள்ளார். இது தவிர பல தனிப் பாடல்கள் இருக்கின்றன.

7. வராக தலங்கள்

பெருமாள் கோயில் என்று வழங்கப்படும் காஞ்சி வரதர் சந்நதியிலும், மேல்கோட்டை திருநாராயணபுரம் கோயிலிலும், மாமல்லபுரத்திலும், திருமலை, திருவிடவெந்தை, திருக்கடல்மல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர், முதலிய தளங்களிலும் வராகர் சந்நதிகள் உள்ளன. ஸ்ரீமுஷ்ணம் வராகருக் கென்றே உள்ள தலம். அக்கால அரசர்கள் பலரும் தங்கள் ஸ்தூபிகளில் வராகர் உருவைப் பயன்படுத்தினர். நாணயங்கள் வராகர் பெயரால் வராகன் என்றே வழங்கப்பட்டன. வராகி மிகிரர் என்ற பெயரில் உள்ள ரிஷி ஜோதிட சாஸ்திரத்தை வரையறை செய்து கொடுத்தார். அரசு முத்திரைகளில் வராகர் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டன.

8. முஸ்தா சூரணம்

ஆச்சாரியர்கள் வராக அவதாரத்தில் மேன்மையை மிக அற்புதமாகப் பேசுகின்றார்கள். பகவான் அவதாரம் எடுக்கும் பொழுது அந்த அவதாரத்துக்கு ஏற்ப அத்தனை இலக்கணங்களும் பொருந்தும் படியாக ஆகிவிடுகின்றார். இதற்கு “மெய்ப்பாடு” என்று பெயர். வராக அவதாரத்தில் அவருடைய உணவு என்ன என்று சொன்னால், நிலத்திலேயே அடியில் முளைக்கக் கூடிய கோரைக்கிழங்கு. தண்ணீர் நிறைந்து உள்ள சதுப்பு நிலங்களில் உண்டாகும். இந்த கோரைக்கிழங்கு சரீர வியாதிகளைப் போக்க வல்லது. கபம், பித்தம், ஜுரம் முதலியவை இந்த மருந்தினால் தீர்ந்துவிடும். வராக சேத்திரம் ஆகிய ஸ்ரீமுஷ்ணத்தில் இந்த முஸ்தா கிழங்கு சூரணத்தை பிரசாதமாகத் தருவர். அதனை சர்க்கரையோடு அல்லது வெல்லத்தோடு சேர்ந்து உண்டால் நம்முடைய உடம்பில் இருக்கக்கூடிய பல்வேறு விதமான நோய்களும் நீங்கிவிடும். ஆசாரியர்கள் இந்த கோரைக்கிழங்கை முத்தக்காசு என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார்கள்.

9. சங்கல்ப மந்திரம்

நாம் தினசரி சங்கல்ப மந்திரம் சொல்கிறோம். அதில் வராகப்=பெருமான் பற்றிய குறிப்பு வருகிறது. ‘‘துவிதீய பரார்த்தே ஸ்ரீசுவேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே கலியுகே ப்ரதமே பாதே” என்று சங்கல்ப மந்திரம் கூறுகிறோம். இது கலியுகத்தின் முதல் பாதம் ஆகும். மனிதர்களின் ஒரு ஆண்டு தேவர்களுக்கு ஒரு நாள். தேவர்களுக்கு 365 நாள் ஒரு தேவ ஆண்டு. 1200 தேவ ஆண்டு கலியுகம். பத்து கலியுகம் ஒரு மகாயுகம். ஆயிரம் மகாயுகம் ஒரு பிரம்மாவின் பகல். இப்பகலின் முடிவில் ஒரு பிரளயம் ஏற்படும். அப்பொழுது எங்கு பார்த்தாலும் ஒரே தண்ணீர் மயமாகவே இருக்கும். இரவு முடிந்த பிறகு மறுபடியும் படைப்புத் தொழில் ஆரம்பிக்கும். இது ஒரு காலச்சுழற்சி. இதை நாம் ஒரு கல்பம் என்று சொல்லுகின்றோம். ஒரு கல்பத்தில் 12 மனுக்கள் வாழ்ந்து போவார்கள். ஒரு மனுவின் காலம் ஒரு மன்வந்தரம் எனப்படும். இப்பொழுது 6 மனுக்கள் போய்விட்டனர். ஏழாவது மனுவில் கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் முடிந்து கலியுகத்தின் முற்பகுதியில் நாம் வாழ்ந்து வருகின்றோம். இந்த கல்பம் உண்டாகும் பொழுதுதான் பகவான் வராக ரூபம் எடுத்து தண்ணீரில் இருந்து பூமிப் பிராட்டியை மேலே கொண்டுவந்து நிலை நிறுத்தினார்.
அதனால், நாம் வாழும் கல்பம் “ஸ்ரீஸ்வேத வராக கல்பம்’’ எனப்படுகிறது. இதை தினசரி சொல்லி நம்மை அறியாமலே வராகப் பெருமானை வணங்கும்பேறு நமக்குக் கிடைக்கிறது.

The post வளமான வாழ்விற்கு வராகர் appeared first on Dinakaran.

Tags : Varagar ,
× RELATED சிபி சக்கரவர்த்திக்கு வழிகாட்டிய சுவேத வராகர்