×

சடாரண்ய தலங்கள்

காஞ்சியில், காமேஸ்வரிக்கும் ஏகாம்பரேஸ்வரனுக்கும் திருமண ஏற்பாடு கோலாகலமாக நடக்க ஆரம்பித்தது. உலக அம்மைக்கும், அப்பனுக்கும் நடக்கவிருக்கும் திருமணத்தைக் காண தேவர்கள், முனிவர்கள் யட்சர்கள், கந்தர்வர்கள் என அனைவரும் கூடினார்கள். கூட்டம் அதிகமானால் அமளி துமளியும் அதிகமாகத்தானே இருக்கும்? இந்த அமளி துமளிக்கு நடுவே, இறைவனை வழி படுவது என்பது, புலன் அடக்கிய முனிவர்களுக்கும் கைவராத காரியம் அல்லவா?அதிலும் சில முனிவர்கள் பயங்கர சிவபக்தர்கள். சிவ பூஜை செய்யாமல் பச்சைத் தண்ணீர் கூட அருந்த மாட்டார்கள்.இப்படி இருப்பவர்கள் பல நாட்கள் காஞ்சியில் தங்கி, அம்மை அப்பனின் திருமணத்தை காண வேண்டும் என்று முடிவு செய்தால் என்ன ஆகும்? யோசித்துப் பாருங்கள்! அவர்கள் தினமும் விடாமல் செய்து வரும் பூஜைக்குதான் பங்கம் நேரும்.இதை சப்த ரிஷிகளும் உணர்ந்தார்கள். தங்களது, பூஜைக்கும் பங்கம் வரக்கூடாது, அதே சமயம் திருமணத்தையும் தரிசிக்காமல் போகக் கூடாது என்று முடிவெடுத்தார்கள். ஆகவே, பாலாற்றங்கரையை சுற்றி இருக்கும் வனங்களில் திருமணத்துக்கு வந்த ரிஷிகள் தங்கி தங்களது நித்திய பூஜைகளை செய்தார்கள். பூஜையை முடித்துவிட்டு, காமாட்சி கல்யாணத்தையும் தரிசித்தார்கள். இப்படி பூஜித்த முனிவர்களில், முக்கியமான அறுவர் பூஜித்த தலங்கள், ‘சடாரண்ய தலங்களாக’ வழங்கப்பட்டு வருகிறது. இன்றும் இந்த தலங்களை வழிபடுவோருக்கு வேண்டியது எல்லாம் கிடைக்கிறது. அதுவும், சிவராத்திரி அன்று இந்த கோவில்களை தரிசிப்பது பரம புண்ணியம். அது மட்டுமில்லை. வருடாவருடம் கார்த்திகை மாதம் சிவனடியார்கள் பலர் மாலை அணிந்து, விரதமிருந்து, பாத யாத்திரையாக, இந்த ஏழு கோவில்களையும் தரிசிக்கும் வழக்கமும் இருக்கிறது. அவ்வாறு செய்தவர்களுக்கு கைமேல் பலன் கிடைப்பது கண்கூடு.இப்படி பல மகிமைகள் உடைய சடாரண்ய தலங்களின் விவரங்களை பார்ப்போமா?வசிஷ்டர் பூஜித்த வசிஷ்டேஷ்வரர் – வேப்பூர்வசிஷ்டர் வந்து தவமிருக்கும்போது வேப்பங்காடாக இருந்ததாம் இந்த இடம். அம்பிகையின் பெயர் பாலகுசாம்பிகை என்பதாகும். வசிஷ்டர் பூஜித்த இறைவன், வடிவில் மிகவும் சிறியவராக இருக்கிறார். அவருக்கு எதிரே வசிஷ்டர் நின்ற கோலத்தில் இறைவனை சேவித்தபடிஇருக்கிறார். இந்தத் தலத்தை அருணகிரிநாதர் பாடி யிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.‘விம்பமதில் சூழு நிம்பபுர வாணவிண்டலம கீபர் …… பெருமாளே’- என்று சிம்மேந்திர மத்யமத்தில் இந்த திருப்புகழை இசைத்தால் அப்பப்பா கேட்டுக் கொண்டே இருக்கலாம்.இந்தத் தலம் வேலூரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.வால்மீகி பூஜித்த வால்மீகீஸ்வரர் – மேல்விஷாரம்ராமாயணம் எழுதிய வால்மீகி வழிபட்ட ஈஸ்வரன் இவர். ஒரு காலத்தில் இது எட்டிமரம் நிறைந்த காடாக இருந்ததாம். வேப்பூரிலிருந்து தென்கரையில் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் தலம். இன்றும் வால்மீகி முனிவர் ஈசனை சேவித்த படி சிலா ரூபமாக இருப்பதை பார்க்கலாம். அம்பிகையின் பெயர் வடிவுடையம்பிகை. காஷ்யபர் பூஜித்த காஷ்யபேஷ்வரர் – அவரக்கரை. ஆவாரம் காட்டில் காஷ்யபர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதனால் ஈசனுக்கு காஷ்யபேஷ்வரர் என்ற பெயர் வந்தது. அம்பிகையின் பெயர் பர்வதவர்தினி. ராணிப்பேட்டையில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்தக் கோவில்.கௌதம மகரிஷி வழிபட்ட கௌதமேஷ்வரர் – காரை கிராமம்கிருபாம்பிகை சமேதராக காட்சி தருகிறார் இந்த ஈசன். அவரை கௌதம மகரிஷி அமர்ந்த நிலையில் வணங்கிக் கொண்டிருக்கிறார். ராமனால் சாப விமோசனம் பெற்ற அகலிகையின் கணவரான கௌதமர் பூஜித்த ஈசன், இந்த தலத்து இறைவன். சரபேஷ்வரர்க்கும் சன்னதி இருக்கிறது. ஒரு காலத்தில் காரை மரங்கள் நிறைந்த காடாக இது விளங்கியது என்றும் சொல்கிறார்கள்.இந்தக் கோவில் ஆற்காட்டில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.அகத்தியர்க்கு அருளிய அகத்தீஸ்வரர் – வன்னிவேடுபாலாற்றின் வடகரை தலமாக விளங்கும் இது முதலில் வன்னிக்காடாக இருந்ததாம். அகத்தியர் வழிபட்ட ஈசனாகிய அகத்தீஷ்வரர், புவனேஷ்வரி அம்பாளோடு கூடியவராக இருக்கிறார். புவனேஷ்வரி அம்பாள் ஆவுடயாரின் மீது காட்சி தருவது அடுத்த அதிசயம். காரைக்காட்டில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இந்தத் தலம்.அத்திரி மகரிஷி வணங்கிய அற்புத ஈசன் – குடிமல்லூர்இந்த தலத்தில் ஈசனை அத்திரி முனிவர் வணங்கி இருக்கிறார். இன்றும், ஈசனை சிலா ரூபமாக அமர்ந்த நிலையில் வணங்கிக் கொண்டிருக்கும் அத்திரி மகரிஷியை, நிச்சயம் தரிசிக்க வேண்டும். அம்பிகையின் திரு நாமம் திரிபுர சுந்தரி என்பதாகும்.பரத்வாஜர் வழிபட்ட பரத்வாஜ ஈஸ்வரர் – புதுப்பாடிவிமானங்களை பற்றிய தகவல்களை முதன் முதலில் ‘விமானிகா சாத்திரம்’ என்ற தனது நூலின் வாயிலாக உலகிற்கு தந்தவர் பரத்வாஜர். இந்த மாமுனிவர் வழிபட்ட திருத்தலம் இது. அம்பிகையின் திருநாமம் தர்ம சம்வர்தினி என்பதாகும். ஒரு காலத்தில் மாங்காடாக இந்த ஊர் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. குடிமல்லூரில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.சப்தரிஷிகளும் பூஜித்த ஒடுக்கத்தூர்இது வரையில் சப்த ரிஷிகள் தனித்தனியாக வழிபட்ட தலங்களை பற்றி பார்த்தோம். இப்போது அந்த எழு ரிஷிகளும் ஒன்றுசேர்ந்து வழிபட்ட திருத்தலத்தையும் பார்ப்போமா?புராண காலத்தில் இந்தத் தலம் ‘ஒடுக்கத்துச் செறிவாய்’ என்று அழைக்கப்பட்டு வந்தது. காலப்போக்கில் அது மருவி இப்போது ‘ஒடுக்கத்தூர்’ என்று அழைக்கப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் இருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த ஆலயம். ஈசனின் திருநாமம் சப்தரிஷீஸ்வரர் என்பதாகும். அம்பிகை, அபீத குசாம்பாள் என்ற நாமத்தோடு காட்சி தருகிறாள். சடாரண்ய தளங்களுக்கு செல்பவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய திருத்தலம் இது. சிறிய கோவில்தான். ஆனால், கீர்த்தியில் பெரிய கோவில். ஆம். அருணகிரிநாதர் தனது பாதங்கள் நோக நடந்து வந்து சேவித்த ஈசன் இவர். இங்கு இருக்கும் முருகப் பெருமானை தனது சிங்கார தமிழால் பாடி இருக்கிறார் சுவாமிகள்.‘உரைக்கச் செட்டிய னாய்ப்பன் முத்தமிழ்மதித்திட் டுச்செறி நாற்க விப்பணர்ஒடுக்கத் துச்செறி வாய்த்த லத்துறை …… பெருமாளே’- என்பது அவரது தேன் தமிழ் வாக்கு. இந்த கோவிலுக்கு ராஜ கோபுரமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, ஈசனுக்கு எதிரில் நின்று அவரை தரிசிக்கும் போது, வலது பக்கம் திரும்பினால், அம்பிகையையும் தரிசிக்கலாம். இப்படியோர் அமைப்பு இருப்பது அபூர்வமானது. பிராகாரத்தில், அருணகிரிநாதரால் பாடப்பட்ட ஆறுமுகத்து எம்பிரான், ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும், வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறான்.சிவராத்திரி அன்று, சப்த ரிஷிகள் தனித் தனியாகவும் சேர்ந்தும் பூஜித்த இறைவனை பார்க்க செல்லும் பக்தர்கள் நிச்சயம் தரிசிக்க வேண்டிய மற்றொரு கோவிலும் இருக்கிறது. ‘திருவலம்’ என்பது அந்தக் கோவிலின் திருப்பெயர். திருஞான சம்பந்தராலும், அருணகிரிப் பெருந்தகையாலும் போற்றிப் புகழப்பட்ட திருத்தலம் இது. வேலூரில் இருந்து பத்தொன்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த ஆலயம். அம்மையும் அப்பனுமே உலகம் என்று அவர்களை சுற்றி வந்து, விநாயகர் கனி வாங்கினார் இல்லையா? அவரை அந்த வெற்றிக் களிப்புடனும், வெற்றிக் கனியுடனும் இங்கே தரிசிக்கலாம்.அர்ச்சகர் ஒருவர், இறைவனின் பூஜைக்காக அபிஷேக நீர் எடுத்து வரும்போது, ஓர் அரக்கன் அவருக்கு அதிக அளவில் தொந்தரவு கொடுத்தான். அர்ச்சகர் இறைவனிடம் முறையிட்டார். ஈசன் உடன் தனது வாகனமான நந்தியை அனுப்பி, அந்த அசுரனை அழித்தார்.இறைவனின் ஆணையை ஏற்று போருக்கு கிளம்பும் கோலத்தில், இறைவனுக்கு எதிர்திசையை நோக்கியபடி இருக்கும் நந்தியை இன்றும் கோவிலில் காணலாம். சிவானந்த மவுன குரு சுவாமிகளின் சமாதியும், கோவிலின்அருகிலேயே உள்ளது.வருகின்ற சிவராத்திரியில், சப்த ரிஷிகள் தனித்தனியாகவும், சேர்ந்தும் பூஜித்த இறைவனை கண்ணாரக்கண்டு மனமார போற்றி, கைலாயம் சென்று வந்த புண்ணியத்தைஅடைவோம்.கிருஷ்ணதாசன்…

The post சடாரண்ய தலங்கள் appeared first on Dinakaran.

Tags : Kanchi ,Kameshwari ,Ekambareswaran ,Sadaranya Thalangal ,
× RELATED செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில்...