×

பழையனூர் நீலி பேயா? பெண்ணா?

எல்லோரும் சொல்லும் பதில் ஒன்றே ஒன்றுதான். நீலி ஒரு பெண் பேய். அதுவும் உயிர் குடிக்கும் பெண் பேய். அதனால்தான் சிவகாமி, வள்ளி, மீனாட்சி… என்பதுபோல் ‘நீலி’ என்னும் பெயரை யாருமே தங்கள் பெண்ணுக்கு வைப்பதில்லை.என்ன காரணம்?இலக்கியத்தில் நீலியின் பெயர் தனியாக எங்குமே குறிப்பிடப்படவில்லை. ஊரின் பெயரோடு இணைத்து ‘பழையனூர் நீலி’ என்றுத்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பழையனூர் என்று தமிழகத்தில் பல ஊர்கள் இருந்தாலும், நீலி கதையுடன் தொடர்புடைய ஒரிஜினல் பழையனூர், திருவள்ளுவர் மாவட்டத்தில் இருக்கிறது. இந்த ஊருக்கு பக்கத்திலேயே சைவ மதக் கடவுளான சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவாலங்காடு இருப்பது எதேச்சையாக நடந்ததல்ல.‘வஞ்சப் படுத்தொருத்தி வாணாள் கொள்ளும் வகை கேட்டஞ்சும் பழையனூர்…’ என திருவாலங்காட்டுத் திருப்பதிகத்தில் திருஞான சம்பந்தர் பயந்திருக்கிறார். பயப்படக்கூடிய அளவுக்கு நீலி கொடூரமானவளா என்ன?சைவ நூல்களில் நீலியின் கதைகாஞ்சிபுரத்தில் ஒரு வணிகன் வசித்து வந்தான். அவனது மனைவியின் பெயர் நீலி. அவளுடன் அவன் இன்பமாக வாழ்ந்து வந்தான். கணவனுக்கு நீலி ஒரு குறையையும் வைக்கவில்லை. என்றாலும் அந்த வணிகன் அடிக்கடி பாலியல் தொழில் புரிபவர்களின் வீட்டுக்கு சென்று வந்தான். நீலிக்கு இது பிடிக்கவில்லை. கண்டித்தாள். வணிகன் இதை பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து தனது லீலைகளை நடத்தி வந்தான். நீலியும் விடவில்லை. அவனை கண்டிப்பதையும் நிறுத்தவில்லை. தனது சந்தோஷத்துக்கு இடையூறாக நீலி இருப்பதால், சுபயோக சுபதினத்தில் அவளை அவன் கொன்று விட்டான்.நீலி பேயாக மாறி அவனை பழிவாங்க அலைந்து கொண்டிருந்தாள். இந்த விஷயம் வணிகனுக்கு தெரிந்ததும் சாமியாரை தேடி ஓடினான். அவரிடமிருந்து ஒரு மந்திரவாளை பெற்றுக் கொண்டான். எங்கு சென்றாலும் அந்த வாளுடனேயே சென்றான்.ஒருநாள் பழையனூருக்கு வியாபார விஷயமாக அவன் சென்றபோது, பேய் உருவில் இருந்த நீலி அவனை துரத்த ஆரம்பித்தாள். ஆனால், அவளால் அவனை எதுவும் செய்யமுடியவில்லை. அவனிடமிருந்த மந்திரவாள் அவளை தடுத்தது. உடனே நீலி, கள்ளிக்கொம்பை ஒடித்து அதை குழந்தையாக மாற்றினாள். தானும் ஒரு அழகிய பெண்ணாக மாறினாள். குழந்தையை இடுப்பில் சுமந்தபடி அவனை பின்தொடர்ந்தாள். வணிகன் பயந்துவிட்டான். நேராக பழையனூரில் உள்ள 70 வேளாளர்கள் அடங்கிய சபையில் முறையிட்டான். அழகிய பெண்ணாக உருமாறி இருந்த நீலி அழுதாள். ‘’இவர் என் கணவர். தாசி வலையில் விழுந்து என்னையும் எங்கள் குழந்தையையும் நிர்கதியாக விட்டுவிட்டார். எங்களை சேர்த்து வையுங்கள்…’’ என்று கதறினாள்.இதை கேட்டு வணிகன் அலறினான். ‘‘பொய். இவள் என் மனைவியே அல்ல. பேய்!’’ என ஓலமிட்டான். ஆனால், குழந்தை ஓடிச்சென்று அவனை கொஞ்சியது. ‘‘அப்பா…’’ என்றழைத்து  முத்தமிட்டது. இதனை பார்த்த வேளாளர்கள் வணிகன் பொய் சொல்வதாக நினைத்தனர். ‘‘சரி, இன்றிரவு நீங்கள் மூவரும் இங்கேயே தங்குங்கள். நாளை காலையில் மற்ற விஷயங்களை பேசிக் கொள்ளலாம்…’’ என்றபடி வணிகனையும், குழந்தையுடன் இருந்த அந்தப் பெண்ணையும் ஒரே அறையில் தங்க வைத்தனர். முரண்டு பிடித்த வணிகனை அடக்கினர். போகும்போது மறக்காமல் வணிகனிடமிருந்த அந்த மந்திர வாளை வாங்கி சென்றனர். ‘‘உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் 70பேர் இருக்கும்போது இந்த வாள் எதற்கு? உங்களுக்கு ஏதாவது ஆபத்தென்றால் நாங்கள் 70பேரும் தீக்குளிக்கிறோம்…’’ என்று சொல்லிவிட்டு சென்றனர்.வணிகனின் கையைவிட்டு மந்திரவாள் சென்றதும் அழகிய பெண்ணாக உருமாறியிருந்த நீலி, தன் உருவத்துக்கு வந்தாள். வணிகனை கொன்று பழி தீர்த்தாள். மறுநாள் வணிகனை காப்பாற்ற முடியாமல் போனதற்காக 70 வேளாளர்களும் தீக்குளித்து இறந்தார்கள்.பெரியபுராணத்தில் நீலிசம்பந்தர் தன் பதிகத்தில் நீலி கதையை பதிவு செய்ததுபோல் சேக்கிழாரும் பெரியபுராணத்தில் பதிவு செய்திருக்கிறார்.‘நற்றிரம்புரி பழையனூர்ச் சிறுதொண்டர் நவைவந்துற்றபோது தம்முயிரையும் வணிகனுக் கொடுகாற்சொற்றமெய்ம் மையுந்தூக்கியச் சொல்லையே காக்கப்பெற்றமேன் மையினி கழ்ந்தது பெருந் தொண்டை நாடு’- என்கிறார். இதேபோன்று உமாபதி சிவாச்சாரியார் எழுதிய ‘சேக்கிழார் புராண’த்திலும் நீலி கதை வருகிறது. இதுதவிர தொண்டை மண்டல சதகம், திருக்கை வழக்கம் முதலிய நூல்களிலும் ‘நீலி’ உலா வருகிறாள். ‘நீலி யட்சசானம்’ என்னும் பிற்கால நூல் முன்பு கூறப்பட்ட கதையை ஊதிப் பெருக்கிய நூல். காஞ்சிபுர வணிகனின் முற்பிறப்பு வரலாற்றை எல்லாம் இந்த நூல் விவரிக்கிறது. இதில் ஏகப்பட்ட எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் இருக்கின்றன. நீலிக்கு அண்ணனாக நீலன் என்னும் கதாபாத்திரம் புதிதாக வருகிறான். இந்த நீலனை பழையனூர் வேளாளர்கள் கொன்றுவிடுகிறார்கள். அதனால் நீலி அவர்களை பழிவாங்குகிறாள்… இப்படி போகிறது யட்சசான கதை.கன்னடத்தில் நீலிகன்னடத்தில் ‘கரிராஜன் கதை’ என்ற பெயரில் வழங்கப்படும் கதையில் ‘தொண்டனூர்’, ‘மல்லிகையூர்’ என்ற இரு ஊர்கள் வருகின்றன. ‘இராட்சசி’ என்று நீலியின் பெயரை குறிப்பிடுகின்றனர். ஆனால், நீலி என்ற உண்மையான பெயர் ஓர் இடத்தில் கூட வரவில்லை. தொண்டனூரின் அரசி யான இராட்சசி(நீலி)யின் மகளை கரிராஜன் கவர்கிறான். அவனை கொல்ல இராட்சசி அலைகிறாள். மல்லிகையூரில் அவனை பிடித்து விடுகிறாள். அந்த ஊரின் 12 கவுடர்களிடம் கரிராஜன் தன் கணவன் என கூறி நடிக்கிறாள். அதன்பின் வரும் சம்பவங்கள் எல்லாம் அப்படியே நீலியின் கதையில் வருவதுதான்.கேரளத்தில் நீலி மலையாள மொழியில் ‘உண்ணு நீலி சந்தோசம்’ என்னும் பெயரில் நீலி கதை உலா வருகிறது. இது தூது இலக்கியம். தலைவனும் தலைவியும் ஒன்றாக உறங்கிக் கொண்டிருந்தபோது, யட்சி ஒருத்தி தலைவனை மட்டும் மந்திர ஆற்றலால் தூக்கிக் கொண்டு வானில் பறக்கிறாள். ஒருகட்டத்தில் தலைவன் நரசிம்ம மந்திரத்தை உச்சரிக்க, யட்சி பயந்துபோய் அவனை கீழே போட்டுவிடுகிறாள். அவன் திருவனந்தபுரத்தில் விழுகிறான். பின்பு தலைவன், தலைவிக்கு தூது அனுப்புகிறான். இது மலையாள கதை.இதில் நீலியின் கதை முழுவதுமாக கூறப்படவில்லை என்றாலும், தலைவனை வானிலிருந்து வீசுவது, நீலியை ‘யட்சி’ என்று கூறுவது போன்ற செய்திகள், இது தமிழில் புழங்கும் நீலி கதையின் சிதைந்த வடிவம்தான் என்பதை சொல்லாமல் சொல்கின்றன.நீலகேசிமேலே சொன்னபடி சைவம் சார்ந்த அனைத்து நூல்களிலும் ‘நீலி’ பேயாகத்தான் வர்ணிக்கப்படுகிறாள். அப்படியானால், அவைதீக மரபான சமண இலக்கியங்களில்? அங்கும் நீலி பேயாகத்தான் சித்தரிக்கப்படுகிறாள். ஆமாம், நீலியின் பெயரால் குறிப்பிடப்படும் சமண காப்பியமான ‘நீலகேசி’யில் நீலி பேய்தான்.அதென்ன கதை?வட இந்தியாவில் ‘பலாலயம்’ என்னும் சுடுகாட்டில் காளிக்கு உயிர்பலி கொடுக்கிறார்கள். அதை முனிசந்திரன் என்னும் சமண முனிவர் தடுக்கிறார். இதனால் கோபமான காளி பழையனூர் நீலி என்ற பேயிடம் முறையிடுகிறாள். இந்தப் பழையனூர் பேய் முனிவருடன் மோதுகிறது. முனிவர் பேயை முறியடிக்கிறார். தோல்வியுற்ற பேய், முனிவரிடம் சமண அற உபதேசம் பெற்று, உயர்ந்த தத்துவ நிலை அடைந்து, மாற்றுச் சமயத்தவரிடம் தத்துவ விவாதங்களை செய்கிறது. இதுதான் நீலகேசியின் காப்பிய கதை.இந்த காப்பியத்தில் பேய் ஒன்றை சமண பேரறிஞராக மாற்றுகின்ற செய்கையை காணலாம். ‘நீலகேசி’ காப்பியம், இந்த உருமாற்றத்தில் ஈடுபட வேண்டியதன் அவசியம் என்ன? நீலி ஒருவேளை சமண பெண்ணாக இருந்து பேயாக மாற்றப்பட்டவளா? அதிர்ச்சியடைய வேண்டாம்.  ஆம் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன.நீலியின் நிஜக் கதைநீலி கதையை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்திய திருஞான சம்பந்தருக்கு முன் வாழ்ந்த ஆச்சாரியார் சமந்த பத்திரர், சமண சமயத்தில் குறிப்பிடத்தக்கவர். உறையூரை ஆண்ட முற்கால சோழர்களின் மரபில் வந்தவர். தமிழர். தமிழ்நாட்டு சமண மரபில் வந்த முதல் சமஸ்கிருத கவிஞர். இவர் எழுதிய நூல்: ‘இரத்தின கரண்டக சிராவகாச்சாரம்’. சமணர்களின் இல்லற ஒழுக்கம் பற்றி வடமொழியில் எழுதப்பட்ட நூல் இது. இந்த நூலின் உரையில் நீலியின் கதை வருகிறது. சமந்த பத்திரரின் காலம் கி.பி. 2ம் நூற்றாண்டு. பெரும்பாலும் இந்தக் கதை சமணர்களால பாரம்பரியமாக வாய்மொழியாகச் சொல்லப்பட்ட கதையாக இருக்கலாம். அந்தக் கதை இதுதான்…‘‘ஜிதைத்தன் என்பவனின் மகள் நீலி. சமண மதத்தை சேர்ந்த இவளை, புத்த மதத்தை சார்ந்த ஒருவன் அடைய நினைக்கிறான். இதற்காக தான் சமணன் என பொய் சொல்கிறான். நீலியும் அதை நம்பி அவனை திருமணம் செய்து கொள்கிறாள்.ஒருநாள் நீலியின் கணவன், தன்னுடன் ஒரு புத்த துறவியை வீட்டுக்கு அழைத்து வருகிறான். அந்தத் துறவிக்கு ஊன் உணவு தேவைப்படுகிறது. மனைவியை சமைத்து தரச் சொல்லி வற்புறுத்துகிறான். கணவனின் வார்த்தைகளை தட்ட முடியாத நீலி, ஊன் உணவை சமைக்க ஒப்புக்கொள்கிறாள். இதற்காக துறவியின் கால் செருப்பில் ஒன்றை பயன்படுத்துகிறாள். சாப்பிட்டு முடித்த துறவி, தன் செருப்பை தேடுகிறார். ஒரு செருப்பை மட்டும் காணவில்லை. பதற்றம் வருகிறது. அப்போது நீலி உண்மையை கூறுகிறாள். இதனால் கோபமான நீலியின் கணவனும், அவனது வீட்டை சேர்ந்தவர்களும் நீலியின் நடத்தையை குற்றம் சாட்டுகின்றனர். அவள் கற்பிழந்தவள் என அவதூறாக பேசி ஒதுக்கி வைக்கின்றனர். நீலி தன் சமய வலிமையால் திறக்க முடியாத கோட்டைக் கதவைத் திறந்து, தான் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்கிறாள்…’’கவனிக்க… இந்தக் கதையில் வரும் நீலி, பேயல்ல. கற்பு நிறைந்த மானிடப் பெண்ணாக போற்றப்பட்டவள்.அப்படியானால் சம்மந்தர் ஏன் அவளை பேயாக மாற்ற வேண்டும்?சம்மந்தர் காலத்தில் நீலி என்னும் கற்பு நிறைந்த பெண்ணின் வாழ்க்கை போற்றப்பட்டிருக்க வேண்டும். மக்கள் அவளது கதையை மனமாற பேசியிருக்க வேண்டும். ஆனால், அவள் சமண சமயத்தவளாக இருந்தது சம்மந்தருக்கு பிடிக்கவில்லை. எனவே சமணத்தை கொச்சைப்படுத்த உயிர் குடிக்கும் பேயாக நீலியை மாற்றிவிட்டார்.அவரைத் தொடர்ந்து வந்தவர்களும் அதையே வழிமொழிந்திருக்கிறார்கள். இதை மாற்ற அரும்பாடுபட்ட ‘நீலகேசி’யால் கூட நீலியை மானிடப் பெண்ணாக காட்ட முடியவில்லை. முனிவரிடம் சமண அற உபதேசம் பெற்று, உயர்ந்த தத்துவ நிலையை அடைந்து, மாற்றுச் சமயத்தவரிடம் தத்துவ விவாதங்களை செய்பவளாகத்தான் காட்ட முடிந்தது.இதற்கு காரணம், சம்மந்தர் காலத்துக்கு 4 நூற்றாண்டுகளுக்கு பின் ‘நீலகேசி‘ எழுதப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் சம்மந்தர் மக்கள் மனதில் ஏற்றிய ‘பேய்’ என்னும் நஞ்சு ஊறி விருட்சமாகவளர்ந்துவிட்டது… இன்று வரையிலும் அந்த காலத்தின் விபரீத கருத்துருவம்… தொடர்வது வேதனையான விஷயம்…பேய் நீலியும் திருவாலங்காடு சிவனும்தேவார பதிகங்களிலும், சைவ இலக்கிய பரப்பிலும் திருவாலங்காட்டை தனியாக குறிப்பதில்லை. பழனை மேவிய திருவாலங்காடு, பழையனூர் ஆலங்காடு என்று இரண்டு ஊர்களையும் இணைத்தே எழுதுவது மரபாக இருக்கிறது. பழையனூர், பழகை மாநகர், பழனை, பழமூதூர்… என்றெல்லாம் இலக்கியங்கள் இந்த ஊரை குறிப்பிடுகின்றன. ‘பழனம்’ என்ற சொல்லை அடிப்படையாக வைத்துதான் ‘பழையனூர்’ என்னும் ஊர் பெயர் உருவாகியிருக்க வேண்டும். ஏனெனில், இந்த ஊர் இன்றும் வயல் நிறைந்த ஊராக காணப்படுகிறது. ‘பழைமை’ என்ற சொல்லுக்கு ‘வினையின் விளைவு’ என்ற பொருளும் உண்டு. திருஞான சம்பந்தர் காலத்துக்கு முன்பு இந்த ஊரில் மட்டுமே மக்கள் குடியிருப்பு இருந்திருக்க வேண்டும். பழையனூரின் ஈமப்புறங்காடாகவே ஆலங்காடு இருந்துள்ளது. காரைக்காலம்மையின் மூத்த திருப்பதிகம் உள்ளிட்டவை இதனை வலியுறுத்துகின்றன.‘ஆலங்காடு’ என்பதற்கு ‘ஆலமரங்கள் நிறைந்த காடு’ என்றே பலரும் பொருள் தருகின்றனர். ஆனால், ‘ஆலம்’ என்பதற்கு ‘நீர்’ என்ற அர்த்தமும் உண்டு. எனவே நீர்நிலை நிரம்பிய பகுதி என்றும் ‘ஆலங்காடு’ என்ற சொல்லுக்கு பொருள் சொல்லலாம். ஆனால், இந்தப் அர்த்தமும் இந்த இடத்துக்கு பொருந்தாது என்றுத்தான் தோன்றுகிறது. காளங்காடு என்றே சொல்லே ‘ஆலங்காடு’ என திரிந்திருக்கக் கூடும் என்று நினைக்க நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதுமட்டுமின்றி இடுகாட்டை குறிக்க காளவனம், காளங்காடு முதலிய சொற்கள் பயன்பட்டு வந்ததை இந்த இடத்தில் நினைவில் கொள்வது நல்லது.அத்துடன் காரைக்கால் அம்மையாரின் சுடுகாட்டு வருணனைகள், காலத்தை காக்கின்ற காளி, சிவபெருமானின் ஊர்த்துவதாண்டவம் இவையெல்லாம் ஆலங்காடு, காளங்காடு என்றே அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது.இன்று, திருவாலங்காட்டிலுள்ள இடுகாடு, ஆலங்காட்டு அடிகளின் கோயிலிலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு ‘நீலி’யின் சமாதி என மக்களால் அழைக்கப்படும் நீலி பாறை உள்ளது. ஏறத்தாழ இரண்டு ஆள் உயரத்தில் கற்பலகைகளால் இந்தப் பாறை அமைக்கப்பட்டுள்ளது. உண்மையில் மக்கள் நம்புவது போல இது நீலி பாறை கிடையாது. பெருங்கற்கால மக்களின் ஈமச் சின்னமே. பக்கவாட்டில் துறையுடைய இந்த கற்திட்டு தொல்லியல் துறையின் ஈமச் சின்னங்கள் பற்றிய ஆய்வில் இதுவரை இடம்பெறவில்லை. ஆங்கிலேயர் காலத்தில் இந்தப் பகுதியிலிருந்து ஈமப் பேழைகள் பல எடுக்கப்பட்டதாக ‘திருவாலங்காட்டு வரலாறு’ என்னும் நூலை எழுதியுள்ள சபாபதி தேசிகர் கூறுகிறார்.திருவாலங்காட்டில் எழுந்தருளி இருக்கும் இறையோன், தேவர் சிங்கன். ஆலங்காட்டப்பர், வட ஆரண்யேசுவர் என்பதும் இவரது நாமமே. அம்மை வண்டார் குழலி.திருவாலங்காட்டிலிருந்து பழையனூர் முக்கால் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு, அம்மையப்பர், கயிலைநாதர் என்னும் இரண்டு சிவாலயங்கள் உள்ளன. இவை சிறிய ஆலயங்கள்தான். இரு ஊருக்கும் இடைப்பட்ட இடத்தில் நீலி குளம் இருக்கிறது. இந்தக் குளத்தின் கரையில்தான் 70 வேளாளர்களும் அக்னிகுண்டம் வளர்த்து தீ குளித்தார்களாம். அதற்கு சாட்சியாக ‘சாட்சி பூதேஸ்வரர்’ இங்கு கோயில் கொண்டுள்ளார்.பழையனூரில் இருந்த 70 வேளாளர்களும் தீ குளிக்கவில்லையாம். 69 பேர்கள் மட்டுமே தீயில் குதித்தார்களாம். மீதியிருந்த ஒருவர் வயலில் வேலை செய்து கொண்டிருந்ததால் அக்னிகுண்டம் செய்தியை அவர் அறியவில்லையாம். சம்பவங்கள் நடந்து முடிந்த பிறகே 69 வேளாளர்கள் உயிர்துறந்த செய்தி அவருக்கு தெரியுமாம். உடனே, அந்த இடத்திலேயே, ஏரின் மொழுமுனையை தன் கழுத்தில் குத்திக்கொண்டு வயலிலேயே உயிர்துறந்தாராம்.இந்த 70 வேளாளர்களையும் பலசைக் கற்களில் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கி வைத்துள்ளனர். இந்த சிற்பங்களை பார்க்கும்போது, இவை சோழர்களின் காலத்தை சேர்ந்தவை என்பதை உணர முடிகிறது. இவை குளத்தின் கரையில் நீண்ட காலமாக இருந்ததாம். தமிழக முதல்வராக பக்தவச்சலம் இருந்த காலத்தில் இந்த பலசைக் கற்களை வைத்து மணி மண்டபம் ஒன்றை பழையனூர் வேளாளர்கள் எழுப்பி உள்ளனர். இந்த இடத்திலிருந்து சிறிது தொலைவில் ‘நீலியின் பாதம்’ என்று கூறப்படுகிற பாறைப் பதிவு இருக்கிறது. முக்தி தீர்த்த குளம் அருகே ஊரின் வெளிப்புறத்தில் ஆலங்காட்டு காளி, கோயில் கொண்டுள்ளாள்.சென்னையை அடுத்த திருவள்ளுவர் மாவட்டத்தில் திருவாலங்காடு இருக்கிறது. அங்கு சென்றால் ஈசனை மட்டும் வணங்கிவிட்டு வராதீர்கள். கொஞ்சம் ‘பேயாக மாறிய நீலியையும்’ பார்த்து விட்டு வாருங்கள்.- கே.என்.சிவராமன் …

The post பழையனூர் நீலி பேயா? பெண்ணா? appeared first on Dinakaran.

Tags : Badayanur ,Neely Baya ,Neely ,Blaidyanur Neeli Baya ,
× RELATED திருப்புவனம் அருகே பழையனூரில்...